தொடர்கள்
சினிமா
தத்தளிக்கும் தமிழ் சினிமா 2-லைட் பாய்

இயக்குனர் நடிகர் சுந்தர்.சியின் ஒரு வீடியோ தற்சமயம் வலைதளத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்த பேட்டியில் அவர் சொல்வதை தமிழ் சினிமா உலகம் கொஞ்சம் காது கொடுத்து கேட்டுக் கொள்வது நல்லது போல் தெரிகிறது.

"தமிழ் சினிமாவில் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் ஹீரோவிடம் கதை சொல்லி அவர் ஓகே சொன்னால்தான் படம் பண்ணலாம் என்ற நிலைமை சமீப காலமாக வரத் தொடங்கி இருக்கிறது.

ஒரு கதையை ஹீரோ ஓகே சொல்லி தான் நான் டைரக்டர் ஆக வேண்டும் என்றால் அந்த மாதிரி படம் எனக்கு தேவையில்லை என்பதுதான் என் முடிவு"என்று சொல்லி இருக்கிறார்.

நீயா நானா கோபி தான் அவரைப் பேட்டிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கு இதுகூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை படத்தில் மொத்த பட்ஜெட்டில் 60% முதல் 70% வரை கதாநாயகனின் சம்பளமாக போய்விடுகிறது.

மீதி 30 சதவீதம் தான் ஹீரோயின் இதர செலவுகளுக்கு செலவிடப்படுகிறது.

படம் நஷ்டமானால் எந்த கதாநாயகரும் அந்த நஷ்டத்துக்கு பொறுப்பேற்காமல் அடுத்த பட வேலைக்கு போய் விடுகிறார்கள்.

இப்போது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இறங்கி இருக்கிறது.

சமீபத்தில் இந்த சங்கத்தின் பொதுக்குழு கூடி 23 தீர்மானங்கள் நிறைவேற்றியது. அதில் முக்கியமான இரண்டு தீர்மானங்கள் தற்சமயம் திரைத்துறையில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

நடிகர்கள் சம்பளத்திற்கு புதிய விதிமுறைகளை சங்கம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இனி ரஜினிகாந்த், அஜித், தனுஷ்,, சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இனி வழக்கமான முறையில் சம்பளம் வழங்கப்படாது. அதற்கு பதிலாக அவர்கள் நடித்த திரைப்படத்தின் லாபத்தின் அடிப்படையில் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதன் படி திரைப்படம் லாபம் அடைந்தால் அதில் ஒரு பங்காக நடிகர்களும் வருமானம் பெறுவார்கள்.

நஷ்டம் அடைந்தால் அந்த நஷ்டத்தின் பாதிப்பு நடிகர்களைத் தாக்கும்.

இதன் மூலம் தயாரிப்பாளர்களின் நிதி சுமை குறையும் என்றும் நடிகர்களும் தங்கள் படத்தின் வெற்றிக்காக அதிக பொறுப்புடன் செயல்படுவார்கள் என்பதற்காக இந்த தீர்மானம் என்கிறார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்.

இந்த முடிவுக்கு அவர்கள் சொல்லும் ஒரு காரணம் பல நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டு அதே நேரத்தில் ஓடிடி தொடர்களிலும் நடிப்பதால் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் பாதிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இவற்றை தவிர்க்கும் நோக்கத்திலேயே இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர்களின் இந்த முடிவு பற்றி இதுவரை எந்த நடிகர்களும் இதுவரை எந்த கருதத்தையும் தெரிவிக்கவில்லை.

தமிழ் சினிமாவில் நன்கு பணம் சம்பாதித்த நடிகர்கள் குடும்பம் பெரிய அளவில் நடுத்தெருவில் இல்லை. அவர்கள் சம்பாதித்த பணத்தையும் முறையாக முதலீடு செய்து பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள்.

இவருக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டிய தயாரிப்பாளர்கள் நிலைமை தயாரிப்பு இல்லை என்றால் நடுத்தெருவில் தான் இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் இயக்குனர் வி சேகர் மகன் ராபிட்டோ பைக் ஓட்டி தனது வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.

இப்படி நொடிஞ்சு போன தயாரிப்பாளர்களின் பட்டியல் மிக நீளம்.

அவர்களைக் காப்பாற்றி கை தூக்க எந்த நடிகரும் வருவதில்லை என்பது மட்டும். உண்மை