
அந்தக் காலம் பொற்காலம் போலவும், இந்நாட்களோ சூதும் களவும் மிகுந்த 'கலி முற்றிய' காலமாகவும் ஒரு எண்ணமுண்டு.
பெருசுகள் 'எங்க நாட்களில் இந்த மாதிரியா என்ன?' என்று அவ்வப்போது அங்கலாய்த்து, நம்மை இந்த எண்ணத்துக்குத் தள்ளி விட்டார்கள் . இந்த 'பழைய புளி தங்கம்' என்கிற நினைப்பு ஒருவித மயக்கம் தான்.
என்னுடைய புத்தகச் சொத்துக்களில் ஒரு பழைய ரத்தினத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
இந்த புத்தகத்தின் காகிதங்கள் அப்பளமாக முற்றிய மேனிக்கு இருக்கும் நூலைப் பக்குவமாக மீண்டும் படுத்தேன்.
அது 'மதிமோச விளக்கம்' என்கிற பழைய புத்தகம்.
'சந்திப் பேய் அடிக்காமலும், விகாரப் பேய் நடிக்காமலும் வெள்ளிய தமிழ் நடையில் விளங்கும்படி ம-௱-௱-ஶ்ரீ தூசி இராஜ கோபால பூபதி அவர்களால் எழுதி வெளியிடப் பட்டிருக்கிறது.
புத்தகம் வெளியான வருடம் 1907. இன்றைக்கு 118 வருடங்களுக்கு முந்தைய பதிப்பு. 190 பக்கங்கள். விலை 8 அணா.
ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இந்நூலைப் பற்றிய சில 'அபிப்பிராயங்கள் ' சேர்க்கப் பட்டுள்ளன.
Madras Times, Madras Standard, Hindu, சுதேச மித்திரன், வந்தே மாதரம், மஹா விகட நூதன், பிரபஞ்ச மித்ரன், திராவிடயபிமானி, இந்துநேசன் போன்ற சஞ்சிகைகளின் மதிப்புரைகள் அவை.
இந்த நூல் பேசும் விஷயம் சுவாரஸ்யமானது. ஏமாற்றுக்காரர்கள் எத்தனைவிதமாக மக்களை மோசம் செய்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு வழிகாட்டியாக சிலாகிக்கப் பட்டிருக்கிறது. 115 விதமான ஏமாற்று வகைகளின் தொகுப்பாக, சுவைபட நகைச்சுவை இழையோட மணிப்பிரவாள நடையில் பேசப்பட்டிருக்கிறது.
கோயில்குளம் கைங்கரிய யாசகம், கோரோசனை மோசம்,
வர்த்தகப் பரிபாஷை,
ஷோக் பிள்ளைகள் ,
அனாதிப்பிண தகன யாசகம்,
தெய்வ ஆவேசம்,
பேயோட்டுதல்,
ஜோசியம்,
பொன் செய்கிற மோசம்,
ரயில் திருடு என்பன போன்ற பல வித்தியாசமான சூதுவாது வகைகள்,
சில படங்களுடன் விளக்கப் பெற்றிருக்கின்றன.
சில பக்கங்களின் கீழே, இடம் நிரப்பும் வகையில், ஆசிரியரின் கருத்துகளாக சில வரிகள் மின்னல் வெட்டாகப் பளீரிடுகின்றன. அவை புத்தகம் பேசும் பொருளுக்கு சம்பந்தமில்லாத குறிப்புகள். பழமொழித் தன்மை கொண்டவை. உதாரணமாக சில இங்கே:
• லட்சக் கணக்கில் உன் பேர் அச்சில் வர விரும்பினால் பொதுச்சபையில் பிரஸெடெண்டு ; ஜாதி சங்க காரியதரிசி ; தாலுக், ஜில்லா,முனிசிபல், தேவஸ்தான கமிட்டியில் தலையாட்டி மெம்பராயிரு.
• இடத்திற்கேற்ற சகவாசம், சகவாசத்துக்கேற்ற ஆகாரம், ஆகாரத்துக்கேற்ற புத்தி, புத்திக்கேற்ற சுகம்.
• 'குழந்தைகளுக்கு விக்கல் கண்டால் உச்சந்தலையில் துரும்பைக் கிள்ளி வைக்கவும், பெரிய பிள்ளைகளை திடீரென்று பயமுறுத்தவும்; இரண்டு காதுகளையும் விரல்களால் அடைத்துக் கொண்டு வேறொருவரை ஜலம் கொடுக்கச் சொல்லி குடிக்க நின்று விடும்' போன்ற உடல்நலக் குறிப்புகளுமுண்டு.
• 'நீ அந்திய காலத்தில் அமைதியாய் உயிர்விட விரும்பினால் தேசவிஷயத்திலும், ஜனோபகார விஷயத்திலும் பாடுபட்டுக் கொண்டிரு' போன்ற சமூகக் கருத்துகள் உண்டு.
•’நயத்தைக் கோரி நீ வாங்கும் சாமானில்லாமல் உன் பொழுதை கழிக்கக் கூடுமானால், அவசியமில்லாததை வாங்கி வீட்டை ( ஷாப்பு) கடையாகச் செய்து கொள்ளாதே ‘போன்ற என்றைக்குமான அறிவுரைகள்.
• 'பய்யனுக்கு கோபமே வராது. வந்தாலும் வருஷத்துக்கு இரண்டு தடவைக்கு மேலிராது.தடவை ஒன்றுக்கு ஆறுமாத காலம் சரியாயிருக்கும்' போன்ற அங்கதங்கள்.
• 'பெருமைக்கு காப்பி குடிக்கக் கற்றுக் கொண்ட சீமானே! காலையில் நிசித் தண்ணீர் சாதம் நிகராகும் பூமானே!' என்ற நக்கல்கள்..
உலகத்தில் ஏமாற்றுபவர்களுக்கு குயுக்தியும் கெட்டிக்காரத்தனமும் கூடுதலாகவே இருக்கத் தான் செய்கிறது என்பதை உணர்த்தும் ஏமாற்று வழிகள் நிறைந்திருக்கின்றன. விழிப்புணர்வுடன் கவனமாக இருக்க இப்புத்தகம் கூறுகிறது.
இதன் ஆசிரியர் திரு தூசி இராஜ கோபால் பூபதி தாத்தா மிகவும் சுவாரஸ்யமான மனிதராக இருந்திருக்க வேண்டும்.
'எ வார்ம் ஹக் டு யூ' தாத்தா!

Leave a comment
Upload