
அமிழ்தமிழ்து தமிழமிழ்து !!!
‘புண்ணியத்தின் புண்ணியமோ’ என்ற வரி நேற்றிலிருந்து நினைவில் உறுத்திக் கொண்டே இருந்தது.
யாதது? எங்கே அமைந்த வரி’ என்று யோசித்தபடியே இருக்க வைத்துவிட்டது. நினைவுகூர்ந்த அந்த அழகிய பாடலை இன்று பகிர விழைகிறேன்.
சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தடுத்தாட்கொண்ட படலப் பாடலின் வரியே அது.
அந்தப் பாடலும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
கற்பகத்தின் பூங்கொம்போ, காமன்தன் பெருவாழ்வோ,
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ, புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ,
அற்புதமோ சிவனருளோ அறியேன்என்றே அதிசயித்தார்
சேக்கிழாரின் கற்பனை வளம் செறிந்த அழகான காட்சி அது.
சுந்தரர் திருவாரூர் கோவிலுக்குப் போகின்றார். அங்கு குடிகொண்டிருக்கும் ஆரூருக்கே சுந்தரர் தோழர் ஆயிற்றே?! கோவிலில் அவருக்கு எதிர்ப்பட்டது அழகே ஓருருவாக வந்த பரவை நாச்சியார்.
பரவை நாச்சியாரின் பேரழகில் தன்னையே இழந்து சுந்தரர் நினைப்பதாக அமைந்த சேக்கிழாரின் ஆச்சரியமான வரிகள் இவை. பாடலின் பொருளைப் பார்ப்போம்.
‘ஆஹா! எதையும் நினைத்த மாத்திரத்திலேயே வழங்கக்கூடிய கற்பகத் தருவின் வாசமலர்கள் நிறைந்த ஒரு கிளையே தேவலோகத்தில் இருந்து இவள் வடிவில் இறங்கி விட்டதோ?
மன்மதனின் காதல் பெருவாழ்வாக விளங்கும் அந்த ரதி தேவியே இவள் தானோ?
அந்த சௌந்தர்யமே உபாசனை செய்தடைந்த புண்ணியத்தின் அழகுருவான புண்ணியமே இவள் தானோ?
புயல் போலும் விரையும் கார்மேகமாக அடர்ந்த இவள் கூந்தல் அழகும், வில் போலும் வளைந்த புருவங்களும், குவளையாய் பூத்த கண்களும், பவளம் போல் சிவந்த அதரங்களும், பூரண சந்திரனாக பிரகாசிக்கும் திருமுகமும் ஒருங்கே மலர்களாகப் பூத்திருக்கும் வாசமுள்ள கொடிபோலும் நிற்கிறாளே?
இவள் கற்பனைக்கும் எட்டாத அற்புதமோ? அல்லது நான் வணங்கும் அந்த சிவனின் அருளே இவள் தானோ?’
இந்த விதம் சுந்தரரும் பலவாறாக சிந்திப்பதாக அமைந்த பாடல் இது.
இந்தப் பாடலில் கையாளப் பெற்ற உவமைகள் அற்புதமானவை..
சிவன் ஆட்கொண்ட சுந்தரரின் மனத்தையே பரவையாரின் பேரழகல்லவா கொள்ளைகொண்டு விட்டது?
பின்னாளில் சுந்தருக்காக, அந்த சிவனே பரவையாரிடம் தூது சென்றதும் நிகழ்ந்தது.
புண்ணியம் செய்த பரவையாருக்கு புண்ணியமாக அல்லவா அமைந்து விட்டது சிவனார் தூது?!
அமுதத் தமிழை வேறோரு பாடலில் வரும் வாரமும் சிந்திப்போம்.

Leave a comment
Upload