
மார்கழி மாதத்தில், எந்த சபா கச்சேரிக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானிக்க கச்சேரி அட்டவணையை எதிர்நோக்கியும், மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் 99ஆவது இசை விழாவை ஏ.ஆர்.ரஹ்மான் துவக்கி வைக்கப் போகிறார் என்ற செய்தியோடும், மார்கழி மாதத்தை நெருங்கும் இந்த வேளையில், ஐஐடி மெட்ராஸ் ஆகச் சிறந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 - 26 கல்வியாண்டு முதல், இளங்கலைப் படிப்புகளுக்கு நுண்கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், Fine Arts and Culture Excellence - FACE சேர்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. கலாச்சாரம் மற்றும் கலைகளை போற்றும் விதத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமையும் ஐஐடி மெட்ராஸையே சேரும்.இந்தத் திட்டத்தின் கீழ், ஐஐடி மெட்ராஸின் அனைத்து பி.டெக். மற்றும் பி.எஸ். படிப்புகளிலும், ஒரு பாடத்திட்டத்திற்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் உள்ள இரண்டு இடங்களில், ஒரு இடம் பெண்களுக்குரியதாகவும், மற்றொன்று பாலினச் சார்பற்றதாகவும் இருக்கும்.

இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசிய, ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, இந்த வருடம் இத்திட்டத்தின் கீழ் ஏழு மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக கூறினார். மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்ற போது, தான் கற்கும் கலைகளை பின்னுக்கு தள்ளி, JEE தேர்வில் மதிப்பெண் வாங்குவதற்கு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலை மாறி, மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கலையை தொடரும் வகையில் இந்த திட்டம் அறிவிக்க பட்டதாகவும் கூறினார். மற்ற ஐஐடிகளிலும் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு தான் பரிந்துரைத்துள்ளதாகவும் அறிவித்தார் . இதன் அடிப்படையில் மாணவர்கள் JEE தேர்வில் ஓரளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தால் போதும் என்றும், FACE திட்டத்தின் கீழ் சேருவதற்கான தகுதிகளையும் ஐஐடி மெட்ராஸ் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். (ஐஐடி மெட்ராஸ் இணைய தளம் - https://jeeadv.iitm.ac.in/face
ஐஐடியில் படிப்பது என்பது பலரது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருக்கிறது. இன்றும் பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், ஐஐடியில் சேர வேண்டுமென்றால் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் சூழல் உள்ளது. இந்தத் திட்டம், இந்த போக்கை முறியடித்து, கலைகளில் சிறந்து மாணவர்களும் , ஐஐடியில் படிக்கலாம் என்கிற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. FACE தவிர, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு SEA என்னும் திட்டமும், சயின்ஸ் ஒலிம்பியாடில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் (ScOpE) திட்டமும் ஐஐடி மெட்ராஸால் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நம்புவோம்!

Leave a comment
Upload