
அடுத்து மேஜிக்கல் ரியலிசம் என்கிற மாய யதார்த்தவாதம் பற்றிப் பார்க்கலாம். இது பூடகமான வகைமையை சார்ந்தது. கிரிப்டோ போன்ற சங்கேத மொழி வடிவில் இது இருந்து வந்திருக்கிறது. எல்லோருக்கும் புரியாமல், புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகிற விதத்தில் ஒரு புதிய மொழித்தன்மையை, காட்சித்தன்மையை அது தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தினருக்கு புரியாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் புரிகிற விதத்தில் இதன் சாரம் காட்சிரூபமெடுத்திருக்கிறது. மாய யதார்த்தவாதம் அபூர்வமான நிகழ்வுகளை யதார்த்தத்தின் தொனியிலேயே சித்தரிக்கிறது. இது நாட்டுப்புறக்கதைகளை, புராண கதைகளை சமகால சமூகத்தோடு பொருத்துகிற விதத்தில் தன்னை மீள்கட்டமைப்பு செய்து கொள்கிறது. நவீன அரசியல் யதார்த்தங்களை இது பூடகமான வடிவத்தில் வெளிப்படுத்துகிறது.
லத்தின் அமெரிக்க நாடுகளில் இந்த வகைமை இலக்கியம் நிறைய படைக்கப்பட்டிருக்கிறது.
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ‘ஒரு நூற்றாண்டு கால தனிமை’ என்கிற நாவல், மாய-யதார்த்தவாத உலகில் இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகம், பழக்கமான உலகத்துடன் இயைந்து வெளிப்படுகிறது. இதில் மாயாஜால நிகழ்வுகள் சாதாரண நிகழ்வுகளாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது அற்புதங்களை சாதாரணமாக வெளிப்படுத்துகிறது மறைக்கப்பட்ட அர்த்தங்கள், மறைக்கப்பட்ட வரலாறு குறித்த விழிப்பு நிலைக்கு மாய யதார்த்தவாதம் மனதை ரகசியமாக நகர்த்துகிறது. இதனால் யதார்த்தத்தின் அத்தனை நிலைகளிலும் மர்மத்தை உணர முடிகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை இது கொண்டிருக்கிறது. புதிரான நிஜத்தை கொண்ட உலகை இவை சிருட்டிக்கின்றன. மாய யதார்த்தவாதம் கணிசமான அளவு யதார்த்தங்களையே பயன்படுத்துகிறது. யதார்த்தம் பற்றிய ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க மாயாஜால கூறுகளை பயன்படுத்துகிறது.
ஒரு காட்சியில் ஒருவன் கத்தியால் குத்தப்படுகிறான். அவனில் இருந்து பீய்ச்சியடிக்கப்படும் ரத்தம் அந்த வீட்டை விட்டு வெளியேறி, வாசலோரமிருக்கும் சாக்கடைக்குள் தவறிப்போய் இறங்கி விடாமல் அதன் ஓரமாக கவனமாக நகர்ந்து சென்று அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்ணின் கால்களை தொடுகிறது. அடுத்த நொடி அந்த பெண் ‘மகனே’ என்று அலறுகிறாள்.
ஃபிரைடா ஹாலே மேஜிக்கல் ரியலிச ஓவியங்களை படைத்தவர்களில் முக்கியமானவர். உறவுகளின் சிடுக்குகளை, பாலியல் நிர்பந்தங்களின் மூலம் ஒடுக்கப்பட்டு வைத்திருக்கும் லிபிடோ என்கிற உயிர்சக்தி பற்றி, விடுதலையின் தாகம் குறித்த பலவிதமான பரிமாணங்களை அவரது ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன.
தமிழில், எழுத்தாளர் பிரமிள் லங்காபுரி ராஜா என்கிற குறுநாவலை மேஜிகல் ரியலிச வகைமையில் எழுதியிருக்கிறார். அதில் சிங்கள பேரினவாதத்தின் கீழ் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் சமூகத்தின் பரிதாபகரமான நிலையை சூசகமாக உணர்த்துகிறார். அடிமைத்தனத்தின் அழுத்தமானது, வாசகர்களின் மனதில் புதியதொரு மொழியில், புதிய காட்சிகள் வழியாக, பூடகமாக ஒரு புதிய வரலாற்று மீளுருவாக்கத்தையும், அதற்கான அரசியல் பார்வையையும் விதைக்கிறது.

Leave a comment
Upload