தொடர்கள்
தொடர்கள்
பசங்க டாக்கீஸ் தொடர் -8 திரைப்படம் :- Stammer மொழி :- ஈரான் இயக்குநர்:- முகமது-ரெசா ஹாஜி-கோலாமி பூங்கொடி

20251106092533349.jpg

பொதுவாக ஈரானிய கிறார்த் திரைப்படங்கள் தனித்துவமான கதைசொல்லல், காட்சி பாணி மற்றும் கருப்பொருள் ஆழத்திற்காகப் புகழ்பெற்றவை. குழந்தைகளின் கண்ணோட்டத்தில் , எளிமையான நேர்மையான கதைசொல்லல் அணுகுமுறை தான் இந்தப் படங்களின் மிகப் பெரிய பலம். அதைப்போன்று கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பொறுமை, குடும்ப உறவுகள், விடாமுயற்சி , குடும்ப உறவுகள், இரக்கம் போன்ற தார்மீக விழுமியங்களைக் கதையின் ஊடே மனதில் பதிய வைப்பது இப்படங்களின் தனிச்சிறப்பு.

அப்படியான ஒரு திரைப்படம் தான் Stammer. தன்னுடைய தங்கையின் திக்குவாய்ப் பிரச்சனையைச் சரி செய்யும் முயலும் தனிச்சிறப்பு.

அப்படியான ஒரு திரைப்படம் தான் Stammer. தன்னுடைய தங்கையின் திக்குவாய்ப் பிரச்சனையைச் சரி செய்யும் முயலும் ஒரு சிறுவனின் கதை. மிகவும் எளிமையான ஆனால் நம்மை பெரிதும் ஈர்க்கக்கூடிய ஒரு கதை. டாக்காவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் குழந்தைகளுக்கான சிறந்த படமாக விருது பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு எளிய கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் கதை ஆரம்பிக்கிறது. ஒரே ஒரு வகுப்பறை. எல்லா வகுப்பு மாணவர்களும் அந்த அறையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒற்றை ஆசிரியர். வயதுக்கு ஏற்றார் போல அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. அந்த வகுப்பில் பயிலும் ஒரு மாணவன் ரசூல். அவனுடைய தங்கை சாராவும் அங்கு தான் பயில்கிறாள். ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வேலை தருகிறார்.

பெரிய மாணவன் ஒருவன் கரும்பலகையில் எழுதி இருக்கும் கணக்கிற்கு விடையைக் கண்டுபிடிக்கிறான். ஒரு மாணவன் அவனுக்குக் கொடுக்கப்பட்டதை எழுதிக் கொண்டிருக்கிறான். சிலரைப் புத்தகத்தில் இருப்பவற்றை வாசிக்க சொல்கிறார். ரசூலின் தங்கை சாரா வாசிக்க ஆரம்பிக்கிறாள். அவளுக்கு இருக்கும் திக்குவாய் பிரச்சனையால் அவளால் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்கள் அவளைக் கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.

ரசூலுக்கு அது வருத்தமாய் இருக்கிறது. அவள் திக்குகின்ற இடத்தில் சொற்களை எடுத்துக் கொடுக்கிறான்.

கிண்டல் செய்யும் மற்ற மாணவர்களைப் பார்த்து

" மற்றவர்களின் குறைகளைக் கேலி செய்து ரசிப்பது நல்ல பழக்கம் கிடையாது. இந்த உலகத்தில் குறைகள் இல்லாத மனிதர்கள் யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை இருக்கிறது." என்று சொல்லி ஒரு மாணவனை எழுப்பி நிற்க வைக்கிறார். அவனுடைய தலைப்பகுதியானது மற்ற மாணவர்களை விட நீளமாக இருக்கிறது" என்கிறார் ஆசிரியர்.. உடனே மாணவர்கள் "அவனுடைய தலை வெள்ளரிக்காயைப் போல இருக்கிறது" என்று கிண்டல் செய்கிறார்கள்.

"நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேடிக்கை செய்வதிலேயே உங்கள் நேரம் கழிகிறது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்ற கருத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்"

என்று சொன்னதும் வகுப்பறை அமைதியாகிறது.

" உங்கள் ஆசிரியனான எனக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கும். என்னுடைய குறை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?"

"நான் சொல்கிறேன் நான் சொல்கிறேன்" என்று அனைவரும் கைகளை உயர்த்துகிறார்கள்.

ஒரு மாணவனை எழுந்து சொல்லச் சொல்லும் பொழுது,

" சார் உங்களுடைய மீசை இருபுறமும் சமமாக இல்லாமல் இருப்பதுதான் உங்கள் குறை" அவன் சொல்லவும் வகுப்பே சிரிப்பால் நிறைகிறது. ஆசிரியரும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்கிறார்.

" ரசூல் உன் தங்கை சாராவின் திக்குவாய் பிரச்சனை சரியாக நான் ஒரு யோசனை சொல்கிறேன். நிறைய கதைப் புத்தகங்களை அவளை வாசிக்க வை. தொடர்ந்து அவள் சத்தமாக வாசிக்க வாசிக்க அவளுடைய பிரச்சனை சரியாகிவிடும். பாடப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்கள் கிடைத்தால் என்னிடம் எடுத்து வா" என்று அக்கறையாய் சொல்கிறார்.

அவனும் பள்ளி முடிந்ததும், தன் நண்பர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கு சென்று புத்தகங்கள் இருக்கின்றதா என்று கேட்கக் கிளம்புகிறான்.

முதலில் சந்தித்த நண்பன், என்னிடம் பாட புத்தகமே இல்லை. பிறகு எப்படி வேறு புத்தகம் இருக்கும் ?" என்று சொல்லி விடுகிறான். மேலும் ரசூலை கோலிக் குண்டு விளையாட அழைக்கிறான். மறுத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறான்.

வேறொரு நண்பனின் வீட்டுக்குச் செல்கிறான். நண்பன் அவனுடைய அக்காவின் புத்தகத்தைத் தருகிறான். வாங்கிக்கொண்டு மீண்டும் அவன் ஓட்டம் தொடர்கிறது. அப்போதுதான் அவனுக்கு மசூதியில் நிறைய புத்தகங்கள் இருக்கும் என்று நினைவிற்கு வருகிறது. அங்கே செல்கிறான். ஹாஜி மிகவும் அன்பானவர். ஆனால் அந்த மசூதியைக் கவனித்துக் கொள்ளும் நபருக்கு யாரைக் கண்டாலும் பிடிக்காது. அதிலும் குறிப்பாகக் குழந்தைகளைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. ரசூல் அவருக்குத் தெரியாமல் மசூதியில் இருந்து சிலப் புத்தகங்களை எடுத்து ஓடி வரும்போது ஹாஜியின் மேல் மோதி, அவன் கையில் இருக்கும் புத்தகங்கள் சிதறிக் கீழே விழுகின்றன. .

அந்தப் புத்தகங்களை எடுக்க அவர் உதவி செய்கிறார். அப்போதுதான் அவன் இது தன்னுடைய புத்தகங்கள் இல்லை என்றும் மசூதியில் இருந்து எடுத்து வருவதாகவும் சொல்கிறான். மசூதியில் இருக்கும் புத்தகங்களை வெளியே பைண்டிங் செய்வதற்கு தவிர வேறு எதற்கும் எடுத்து போகக்கூடாது என்று புத்தகத்தில் எழுதி இருப்பதை அவனுக்கு சுட்டிக் காட்டுகிறார் ஹாஜி.

என்னுடைய தங்கைக்காகத்தான் புத்தகங்களை எடுத்து செல்கிறேன். எங்களுடைய ஆசிரியர் இதில் அவளுக்கு தேவையான புத்தகங்களை எடுத்தவுடன் மீதி புத்தகங்களைக் கொண்டு வந்து வைத்து விடுகிறேன் என்று உறுதி கூறுகிறான். ஆனாலும் பொது சொத்தை நாம் எடுப்பது தவறு என்று ஹாஜி திரும்பவும் அவனுக்கு வலியுறுத்துகிறார். " வேண்டுமானால் என் வீட்டிற்கு வா . என்னிடம் இருக்கும் புத்தகங்களை தருகிறேன்" என்று அழைத்துச் செல்கிறார்.

அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் இருவரும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.. அப்போதுதான் ஹாஜி அவனுடைய தாத்தாவிற்கு நெருங்கிய நண்பர் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. ஹாஜியின் வீட்டில் இருக்கும் புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவர் டீ தயாரிப்பதற்கு தேவையான சக்கரை இல்லை என்றும் பக்கத்து வீட்டில் வாங்கி வருமாறு ஒரு பீங்கான் கிண்ணத்தைக் கொடுத்து அனுப்புகிறார்.

சர்க்கரையைக் கொண்டு வந்து தந்து விட்டு உனக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என்று அவர் சொன்னதும் ரசூல் உற்சாகமடைகிறான். அங்கிருந்து வேகமாகப் பக்கத்து வீட்டுக்கு செல்கிறான். அந்த வீடு அவனுடன் பயிலும் கமால் என்ற மாணவனின் பாட்டி வீடு. அவனோடு பேசிக் கொண்டிருக்கையில், அவனுடைய தந்தையிடம் புத்தகங்கள் இருப்பதாகச் சொல்கிறான்.

அந்த புத்தகங்களைத் தன்னுடைய சகோதரிக்கு கேட்கிறான்.

"உனக்கு நான் புத்தகங்கள் தர வேண்டுமானால் உன்னிடம் இருக்கும் அழகான கோலிக் குண்டுகளை எனக்குத் தர வேண்டும். " என்று கமால் நிபந்தனை விதிக்கிறான்.

" அவற்றைத் தர முடியாது வேண்டுமானால் உன்னுடைய வீட்டுப் பாடங்களை தினமும் நான் எழுதித் தருகிறேன். என்னுடையது அதிர்ஷ்டமான கோலிக் குண்டுகள். இவற்றை யாருக்கும் தர மாட்டேன்" என்கிறான் ரசூல்.

கமாலின் வீட்டிற்கு இருவரும் செல்கிறார்கள். கமால் புத்தகத்தை எடுத்து வர உள்ளே சென்ற பொழுது,

அவனுடைய முரட்டு தந்தை அங்கே வந்து ரசூலைத் திட்டி விட்டு, பீங்கான் கிண்ணத்தைப் பிடிங்கி, அதை தூர தூக்கி எறிந்து விடுகிறார்.

உடைந்த கிண்ணத்தை எப்படி ஹாஜியிடம் கொடுப்பது என்று தன்னுடைய வீட்டிற்கு ச சென்று அதே போல ஒரு கிண்ணத்தைச் சர்க்கரையால் நிரப்பி எடுத்து வருகிறான். அவன் அங்கேயும் இங்கேயும் ஓடுவதைப் பார்த்து தாய் என்ன விவரம் என்று கேட்கிறார். வந்து சொல்கிறேன் அம்மா என்று அங்கிருந்து வேகமாய் வந்துவிடுகிறான்.

உறங்கிக் கொண்டிருக்கும் ஹாஜிக்கு அருகில் சர்க்கரை கிண்ணத்தை வைத்துவிட்டு அவனுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்து வருகிறான். அந்தப் புத்தகங்களை ஆசிரியரிடம் கொடுப்பதற்காக அவர் இருப்பிடத்திற்குச் செல்கிறான்.

ஆனால் ஆசிரியரோ அந்த புத்தகங்கள் அவளால் வாசிக்க இயலாது. அவளுக்கு தேவையானது படங்கள் நிறைந்த கதை புத்தகங்கள் தான் நீ கொண்டு வந்திருக்கும் புத்தகங்கள் பெரியவர்களுக்கானது: மற்றும் மத சம்பந்தமான புத்தகங்கள் மட்டும்தான் . .அவர் கூறியது கேட்டதும் ரசூல் சோர்வடைந்து விடுகிறான்.

நானே சில புத்தகங்கள் வாங்குவதற்கு அதிகாரிகளிடம் தொகை வாங்கி பள்ளியில் நூலகம் அமைக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கே இன்னும் இரண்டு மாத சம்பளம் தராமல் வைத்திருக்கிறார்கள். இங்கே நூலகம் அமைக்க பிறகு எப்படிப் பணம் தருவார்கள் என்று ஆசிரியர் தன்னுடைய வருத்தத்தை ரசூலிடம் பகிர்கிறார்.

" சில புத்தகங்களின் பெயர்களை எழுதித் தருகிறேன். உன்னுடைய தந்தை நகரத்திற்குச் சென்று திரும்பி வரும்போது இந்தப் புத்தகங்களை வாங்கி வரச் சொல். " என்று சொல்லி சில கதைப் புத்தகங்களின் பெயர்களை எழுதி தருகிறார்.

எப்பொழுது தந்தை வருவார் என்று காத்திருக்கிறான். தந்தை வர தாமதமாகும். அந்தக் காகிதத்தை மேஜையின் மீது வைத்து விட்டு செல்லுமாறு அம்மா சொல்கிறார்.

வெகு தாமதமாகத்தான் தந்தை வருகிறார். தந்தை வந்த அரவம் கேட்டதும் விழித்து விடுகிறான். அப்பொழுது தாயும் தந்தையும் பேசியதிலிருந்து தன்னுடைய தந்தை எப்பொழுது வேண்டுமானாலும் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்பதை அறிகிறான். கடன்களை அடைப்பதற்குப் பசுமாட்டை விற்கலாம் என்று அவன் தந்தை கேட்ட பொழுது, அவனுடைய தாய் அவருடைய கை வளையல்களை கழட்டி கொடுப்பதையும் கவனிக்கிறான். அவளுடைய தந்தை, சாரா சரியாக படிக்கவில்லை என்றால் அவளை ஒரு வேலையில் சேர்த்து விடலாம்; வருமானம் வரும் என்று சொன்னதையும் கேட்கிறான். அவன் தன் வீட்டுச் சூழலை எண்ணி மனம் வருந்தினான். எப்படியும் தன் தங்கையின் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று உறுதி கொள்கிறான்.

குழந்தைகளுக்கு உரிய புத்தகங்களை வாங்கி , தாமே ஏன் ஒரு சிறு நூலகம் அமைக்க கூடாது என்று அவனுக்குத் தோன்றுகிறது. அவன் தன்னுடைய யோசனையை ஹாஜியிடம் சொல்கிறான். இருட்டை பற்றி புலம்பிக் கொண்டிருப்பதை விட, அதற்கு சிறு விளக்கு ஏற்றுவது இருட்டை விரட்டும். உன்னுடைய யோசனை மிகச் சரியானது.அதற்கு நானும் பண உதவி செய்கிறேன் என்று ஹாஜி சொல்கிறார்.

நூலகம் அமைப்பதற்கு அவனுடைய நண்பர்கள் ஹாசன் மற்றும் கமால் தாங்களும் உதவுவதாகச் சொல்கிறார்கள். நூலகம் அமைக்க முதலில் இடம் வேண்டும் என்று தேடுகிறார்கள். அப்போது ஹாசன் தன்னுடைய தந்தையின் கிடங்கு ஒன்று பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அதை நூலகமாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசனை சொல்கிறான். அந்த கிடங்கை ச சென்று பார்வையிடுகிறார்கள். இவர்கள் புத்தகங்கள் வைப்பதற்கு ஏற்ற அலமாரிகளும் அங்கு இருக்கின்றன.

மகிழ்வோடு பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, குழந்தைகளுக்குள் சண்டை வருகிறது. இந்த இடம் தன்னுடையது என்பதால் தான் நூலகத்தின் உரிமையாளர் என்கிறான் ஹாசன் . இங்கு இன்னும் நூலகமே அமைக்கவில்லை. எதற்கு அதற்குள் சண்டை ? நாம் மூவருமே உரிமையாளர்கள் தான் என்று அவர்களைச் சமாதானப்படுத்துகிறான் ரசூல்.

ஹாஜி, நகரத்தில் இருக்கும் அச்சகத்தில் தன்னுடைய கடிதத்தைக் கொடுத்தால் தேவையான புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரசூலிடம் சொல்கிறார்.

அதேபோல் அந்த அச்சகத்திற்கு ரசூல் செல்கிறான். அங்கு ஏராளமான கதை புத்தகங்கள் இருக்கின்றன. ஆசிரியர் பரிந்துரை செய்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறான். இந்தப் புத்தகங்கள் வேண்டுமானால், உன்னிடம் இருக்கும் உனக்கு மிகப் பிடித்த ஒன்றை எனக்கு தர வேண்டும் என்று அச்சகத்தின் உரிமையாளர் இவனிடம் கேட்கிறார். யாருக்கும் எப்போதும் தராத தன்னுடைய மிகவும் அதிர்ஷ்டமாக நினைக்கும் கோலிக் குண்டுகளை அவருக்குத் தந்துவிட்டு நூல்களைப் பெரும்பாடு பட்டு எடுத்து வருகிறான்.

அவனும் நண்பர்களும் இந்த நூல்களை யாருக்கும் தெரியாமல் அந்த கிடங்கிற்கு பெரும் போராட்டத்திற்குப் பிறகு எடுத்து வர முயற்சிக்கிறார்கள். இரவு ஆகிவிட்டதால் ஒரு மறைவான இடத்தில் புத்தகங்களை வைத்து விட்டு வருகிறார்கள். ஆனால் அன்று இரவே மழை பெய்து அதில் நூல்கள் நனைந்து விடுகின்றன.

குழந்தைகள் ஆசிரியரிடம் அனுமதி பெற்று பள்ளிக்கு விடுமுறை எடுத்து, இந்த நூல்களை வெயிலில் காயவைக்கின்றனர். தாமதிக்காமல் அந்தக் கிடங்கிற்கு நூல்களை எடுத்து நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று ரசூல் நினைக்கிறான். அந்தக் கிடங்குப் பயன்படுத்தப்படாமல் தூசியும் குப்பையுமாய் நிறைந்து கிடக்கிறது. சிறுவர்கள் இணைந்து அந்த இடத்தைச் சுத்தம் செய்து கழுவி மிக அருமையாக நூலகத்தைத் தயார் செய்கிறார்கள். பெரியவர்களின் துணையின்றி தாங்களாகவே நூலகத்தைத் தயார் செய்வதில் அவர்களுக்கு அத்தனை பெருமிதம்.

தங்களிடம் இருக்கும் நூல்களின் பெயர்களை எழுதி வைக்கிறார்கள். ஷாஜி மசூதியில் இருக்கும் ஒரு பயன்படுத்தப்படாத அலமாரியைப் புத்தகங்கள் வைக்க ஏற்பாடு செய்து தருகிறார். படங்களோடு இருக்கும் புத்தகங்களைச் சாரா வாசிக்கிறாள். அப்படி வாசிப்பது அவளுக்கு மிகப் பிடித்தமானதாக இருக்கிறது.

ரசூலும் அவனது நண்பர்களும் மிக அருமையான முறையில் நூலகத்தை அமைக்கிறார்கள். அதற்கு அவர்களே ஒரு திறப்பு விழாவும் செய்து கொண்டாடுகிறார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, தங்களது நூலகத்தை பார்வையிட சென்ற ரசூலுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஹாசனின் அப்பா புதிதாக வாங்கிய பசுக் கன்று நூலகத்தை சிதைத்து இருப்பதையும், சில நூல்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கிறான்.

என்ன செய்வதென்றே புரியாமல் அவன் பள்ளியை நோக்கி வருகிறான். அங்கு அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. சாராவை எழுந்து ஆசிரியர் வாசிக்க சொல்கிறார்.

சிறிது கூட திக்காமல் அவனது தங்கை சாரா பாடப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதை மகிழ்வோடு அவன் பார்ப்பதாக படம் நிறைவடையும்.

மனத்தை நெகிழச்செய்யும் ஒரு திரைப்படம். நம் வாழ்க்கையே நம் குழந்தைகளுக்காக தான் என்கிறோம். ஆனால் குழந்தைகளின் அக உலகத்தையும், அவர்களுக்கான தேவைகளையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோமா? அவர்களுகஅவர்களுக்கான நேரத்தை தருகிறோமா ? என்று மனதைத் தொட்டு கேள்விகளை கேட்டால் நம் பதில் உண்மையில் என்னவாக இருக்கும்?