தொடர்கள்
கதை
மாப்பிள்ளை முறுக்கு - வி.பிரபாவதி

2025110609115625.jpeg

விடாமல் மொபைல் மணி அடித்துக் கொண்டே இருந்தது. யார் இப்படி விடாமல் போன் செய்கிறார்கள் என்று நினைத்து சமையல் வேலையில் இருந்தவள் கையை அலம்பித் துடைத்துக் கொண்டு போனை எடுத்தாள்.

போனை எடுத்துப் பார்த்ததும் அதிர்ந்தாள். மூன்று மிஸ்டு கால்! பெயர் ஹப்பி என்றிருந்தது. அடக்கடவுளே ஏற்கெனவே சட்னியில் உப்பு அதிகம் என்று பி.பியை இரட்டிப்பாக்கிக் கொண்டு போனவன். இப்போது எதற்கு போன் செய்திருக்கிறான்?

ஆள்காட்டி விரலால் பச்சைக் கலர் ரவுண்டைத் தொட்டதும் கரகரப்பான குரலில் “ஹலோ, போனை எடுக்க இம்புட்டு நேரமா” என்ற கணவனின் குரலைக் கேட்டு,

“இல்லங்க, கிச்சன்ல இருந்தேன். சொல்லுங்க” என்றாள் பதற்றத்துடன்.

“ஒங்கப்பன் போன் செஞ்சானா?”

“இல்லிங்களே. என்னாச்சு எங்கப்பாருக்கு? அழ ஆரம்பித்தாள்.

“அடடடா, நிறுத்துடீ, அந்தாள் நல்லாத்தான் இருக்கான். எனக்கு போனு போட்டான்.

ஒந்தங்கச்சிக்கு ஏதோ வரன் அமைஞ்சிருக்காம், சாய்ந்தரம் பொண்ணுப் பாக்க வர்ராங்களாம். நம்பளையும் கூப்ட்டான். நா எனக்கு வேல இருக்குன்னு சொல்ட்டேன். ஒனக்குத் தாக்கல் சொன்னான்னா, ஒடம்புக்கு முடியலன்னு சொல்லிரு, அம்புட்டுத்தேன். சொன்னது புரிஞ்சிச்சா? வை போனை” கர்ஜித்தான் கணவன் பாஸ்கரன்.

வழக்கத்துக்கு மாறாக ‘அவன்’ ‘இவன்’ என்று ஏக வசனத்தில் ஏசுகிறான். புரியவில்லை மல்லிகாவிற்கு.

இவர்கள் திருமணத்தின் போது, இவனுக்கு பேசிய ஐட்டத்தில் இன்னும் ஒரு அரை சவரன் போடணும். பிறகு என்று சொன்னது இன்னும் பிறகாகவே உள்ளது. அதை மாமனார் போடாததால் இந்த மொறைப்பு.

தற்போது மச்சினிக்கு வந்துள்ள வரன் அவர்களே ஐந்து பவுன் நகை போட்டு, புடவை எடுத்து கோவிலில் திருமணத்திற்குஆகும் செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம்.

நண்பன் ஒருவன் மூலமாகத் தெரிந்து கொண்டான். திக்கென்றது. போதாக்குறைக்கு

பெண்வீட்டார் சாப்பாட்டு செலவு செய்தால் போதும் என்று சொல்லிவிட்டாங்களாம்.

இதை எப்படியோ உறவினர்கள் மூலமும் அறிந்து கொண்ட பாஸ்கரன் நாவை அடக்கிக் கொண்டு திருமணத்திற்குத் தயாரானான்.

மல்லிகாவை அழைத்துக் கொண்டு போய் ‘தங்கமயிலில்’ மச்சினிக்கு ஒரு அரை சவரனில் மோதிரம் வாங்கிக் கொண்டான்.

தட்டு வரிசைகள் தயார் செய்து கொண்டான். மனைவியுடன் தடபுடலாய் போய் இறங்கினான். மல்லிகாவிற்கு அடி நுனி புரியவில்லை. கல்யாணத்திற்கு வந்ததையே பெரிதாக நினைத்து மகிழ்ந்தாள்.

மச்சினியை பெண் பார்க்கும் அன்றே மாப்பிள்ளை வரவில்லை என்றதும் கொஞ்சம் கலங்கித்தான் போனார் மல்லிகாவின் அப்பா.

தற்போது திருமணத்திற்கு மகளையும் அழைத்துக் கொண்டு முன்னாடியே வந்திருக்கும் மாப்பிள்ளையை நினைத்து மகிழ்ந்தார்.

அவருக்கு தெரியுமா குற்ற உணர்ச்சியை மறைக்கத்தான் இத்தனையும் என்று.

இதெல்லாம் எதற்கு? மூத்த மாப்பிள்ளை கெத்துக் காமிக்கணுமில்ல!

இந்த விஷயம் தெரிந்தால் மல்லிகாவே சொல்லிக் காட்டியிருப்பாள். அவமானமாக இருந்திருக்கும். என்ன செய்வது அவளுக்கு இனிமேல்தான் விபரங்கள் தெரிய வரும். இவன் சாயமும் வெளுக்கும். யார்கிட்ட சொல்லிக்க முடியும்?!