
வானில் நிலா உலா வரும் இரவு நேரம்.
அக்காதலன் தன் தலைவியைத் தேடி வருகிறான். இரவு நேரத்தில் வந்து அவளைச் சந்திப்பதை இப்போதெல்லாம் அவன் தன் வழக்கமாக்கி கொண்டுள்ளான்..
“உன்னை விரைவில் திருமணம் செய்துக் கொள்வேன்” என்று சொல்கிறானே தவிர திருமணத்தை தள்ளிப் போடுகிறான். ஆனால் யாரும் அறியாத வண்ணம் இரவில் மட்டும் வந்து சந்தித்து, அவளது காதல் உணர்வுகளை மீட்டிச் செல்கிறான்..
தொடக்கத்தில் மகிழ்ச்சியைத் தந்த இரவுச் சந்திப்புகள் இப்போது அவளுக்கு இனிக்கவில்லை. மாறாக மன அழுத்தத்தைத்தான் தந்தது.
“ நீ இரவில் வந்து என்னைச் சந்திப்பது ஒரு சான்றோனுக்கு உரிய சிறப்பான, உயர்ந்த செயல் அல்ல. இனி நீ என்னைச் சந்திக்க இரவில் வர வேண்டாம்’ என்று சினத்துடன் அவனை விரட்டுகிறாள்.
அந்தக் குறிஞ்சி நில மங்கை உறுதியுடன் கூறுகிறாள்.
“கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தி, தான் உடுத்திக் கொள்ள கவனமாக நெய்திட எடுக்கும் பஞ்சைப் போன்ற வெண்மேகங்கள்
காற்றில் அலையும். அம்மேகங்கள் தழுவும் சிகரத்தைக் கொண்ட நெடிதுயரந்த மலை. அங்கே வளர்ந்திருக்கும் முதிர்ந்த பலா மரத்தில் குடம் போன்ற பழங்கள் தொங்கும்.
அம்மலைப்பகுதியில் வாழும் குறவரின் அன்பு மகள் பெரிய பலாச் சுளைகளை அங்கு வரும் குரங்குகளுக்கு விருந்தாகப் படைப்பாள்.
அந்த வளம் செழித்த மலையில் வாழும் மலை நாடனே!
கரிய புலியைக் கொன்ற யானை, சினத்துடன் இரவில் முழங்கும். அச்சம் தரும் அவ்விரவில், என் மேல் கொண்ட காமத்தால் யாரும் வருவதற்கு அஞ்சும் வழியில் என்னைத் தேடி வருகிறாய்.
இரவு நேரத்தில் குறுகிய கொடிய வழியில் வருவதால் நீ பண்பு மிக்க சான்றோன் ஆகி விட மாட்டாய். என் காமம் கனிந்து, அழுகிப் போனாலும் சரி, நீ இரவில் வராதே” என்றாள்.
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மடமகள்
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்,
வான் தோய் வெற்ப! சான்றோய் அல்லை எம்
காமம் கனிவது ஆயினும், யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
வெஞ் சின உருமின் உரறும்
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.
நற்றிணை 353
இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலை எழுதியவர் கபிலர்.
பாரி வள்ளலின் ஆருயிர் நண்பர் கபிலர், மூவேந்தரின் சூழ்ச்சியால் மன்னர் பாரி கொல்லப்பட்ட பின்னர் அவரது மகள்கள் அங்கவை, சங்கவை இருவரையும் தன்னுடன் அழைத்து வந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்த செய்திகளைப் புறநானூற்றில் படித்துள்ளோம்.
கணவனை இழந்த பெண் கைம்மை நோன்பு நோற்பதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதன் ஒரு பகுதியாக தான் உடுத்தும் ஆடையை அவளே நெய்துக் கொள்ளும் அரிய தகவலை இச்செய்யுள் கூறுகிறது. பலாச் சுளைகளை மந்திக்கு விருந்தாக்கும் மற்றும் ஒரு நங்கையையும் நாம் காண்கிறோம்.
இந்த அகத்திணைப் பாடலில் காதலன் செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டி, அவனைப் புறக்கணிக்கும் உறுதி மிக்க ஒரு சங்கப்பெண்ணை நமக்கு அடையாளம் காட்டுகிறார் கபிலர்.
மேலும் ஓர் அழகான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்
தொடரும்

Leave a comment
Upload