தொடர்கள்
அழகு
மரப்பாச்சி பொம்மை !! புவிசார் குறியீடு ! - மாலா ஶ்ரீ

20251106094511142.jpeg

தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களுக்கு ஆண்டுதோறும் ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. இதன்படி, இந்தாண்டு நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தின் புகழ்பெற்ற ‘மரச் செப்பு சாமான்கள்’ இடம்பிடித்துள்ளது. அம்பாசமுத்திரத்தில் கடந்த 2 நூற்றாண்டுகளாக மரத்தினாலான விளையாட்டு பொருட்கள் மற்றும் செப்பு சாமான்கள், கைகளால் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்தவை. தற்போது இவை சிறிய ரக இழைப்பான்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மரத்தினால் தயாராகும் சமையலறை பாத்திரங்கள், அம்மி, ஆட்டுக்கல், சிறிய மேஜை, நாற்காலிகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் என அனைத்தும் மிகச் சிறிய வடிவில் தத்ரூபமாக செதுக்கப்படுகின்றன.

குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கும் வகையில், இங்கு வடிவமைக்கப்படும் பொம்மைகள் மற்றும் செப்பு சாமான்கள் அனைத்துக்கும் உள்ளூர் மரவகைகளான மஞ்சக்கடம்பு, வேம்பு போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இவை, குழந்தைகளுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத மரங்களாகும். நடப்பாண்டில், அம்பாசமுத்திரத்தில் நூற்றாண்டுகள் சிறப்புமிக்க மரச்செப்பு சாமான்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அம்பை, பரணி மரவர்ண கடைசல் கைவினைஞர்கள் சங்கம் விண்ணப்பித்தது. அம்மனுவில், ‘அம்பையில் மரச்செப்பு சாமான்களை பாரம்பரியமாக செய்து வருகிறோம். இயந்திரமயமாக்கப்பட்ட பெரிய தனியார் நிறுவனங்களின் தரமற்ற செப்பு சாமான்களின் விற்பனையில் இருந்து காக்க, அம்பை மரச்செப்பு சாமான்களுக்கு சட்டப்பாதுகாப்பு அவசியம்’ என்று கைவினைஞர்கள் குறிப்பிட்டிருந்தனர். இக்கோரிக்கைக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் நபார்டின் மதுரை வேளாண் வணிக அடைகாக்கும் மன்றம் செயல்பட்டு வந்தது. இதற்காக பல்வேறு சட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தொடர் நடவடிக்கையின் பயனாக, வரலாற்று சிறப்புமிக்க அம்பாசமுத்திரம் மரச்செப்பு சாமான்களுக்கு தற்போது மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதற்கான புவிசார் குறியீட்டு இதழில், ‘அம்பாசமுத்திரம் செப்பு சாமான்கள் (மர விளையாட்டு பொருட்கள்)’ என்று பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த அங்கீகாரம், அம்பாசமுத்திரத்தின் கைவினைஞர்களுக்கும் அவர்களது கலைக்கும் பெருமை தேடித் தந்துள்ளது. இந்த புவிசார் குறியீடு சர்வதேச சந்தைகளின் நம்பகத்தன்மை சான்றாக விளங்குவதால், அம்பாசமுத்திரம் மரச்செப்பு சாமான்களை ஒரு பிரீமிய்ம கைவினைப் பொருளாக நிலைநிறுத்தி, அதன் தனித்துவத்தை மதிக்கும் வாடிக்கையாளர்கள் பிரிவை அடைந்து, அதிக விலை பெற வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.