தொடர்கள்
வலையங்கம்
நமக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு

20251125134109529.jpg

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஒருவரே இரண்டு இடத்தில் வாக்குரிமை பெற்றிருப்பது இடம் பெயர்ந்தவர்கள் உரிய தகவல் தெரிவிக்காதது இறந்து போனவர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கல் இவற்றை தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திட்டம் என்று தேர்தல் ஆணையம் சொன்னது.

தங்களுக்கு ஓட்டு போடும் வாக்காளர்கள் விடுபடக்கூடாது என்று அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டியது. அது ஒரு மாதிரியான சுயநலம் என்றாலும் அது கொஞ்சம் பொதுநலன் கலந்து இருப்பதாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. காரணம் வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்கான வாய்ப்பை இந்த கட்சிகள் ஏற்பாடு செய்திருக்கிறது.

இப்போது தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் 97.3 லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள் . நீக்கப்பட்ட வாக்காளர்கள் உரிய ஆவணங்களை தந்து குறிப்பிட்ட காலக்கெடு விதித்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டியல் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பையும் தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கிறது. வாக்களிப்பு என்பது ஒரு ஜனநாயக கடமை. அது பற்றிய போதிய விழிப்புணர்வு நமது வாக்காளர்களிடம் இல்லை என்பது தான் வருத்தமான செய்தி. தேர்தல் நாள் என்பதையே தங்களுக்கு கிடைத்த விடுமுறை நாள் என்று அனுபவிக்க தான் பார்க்கிறார்களே தவிர ஓட்டு போட அவர்கள் எந்த மெனக்கடலும் எடுப்பதில்லை. .எல்லாவற்றையும் அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ளும் என்ற அலட்சியம் தான் காரணம். ஓட்டு போடுவது, வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வது பொதுமக்களின் பொறுப்பும் கடமையும் என்பதை உணர வேண்டும்.