
மும்பையில் கடந்த 93 ஆண்டுகளாக கல்வியால் உயர்வோம் என்ற தாரக மந்திரச் சொல்லின் முழு அர்த்தத்துடன் தென்னிந்திய கல்விச் சங்கம் (SIES – SOUTH INDIAN EDUCATION SOCIETY), அதன் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுடன், பல தசாப்தங்களாக ஒரு தனித்துவமான முன்னோடியாகத் திகழ்கிறது.
அடிப்படை அறிவியல் மற்றும் கலைகள் முதல் உயர் தொழில்நுட்பம் வரை, SIES கல்லூரிகள் கல்வியின் அனைத்துத் துறைகளிலும் பரந்த அளவிலான படிப்புகளை வழங்குகின்றன. இந்த மிகவும் மதிக்கப்படும் நிறுவனம், மிகவும் புகழ்பெற்ற ஆளுமைகளில் சிலரை விருந்தினராகக் கௌரவித்ததில் ஆச்சரியமில்லை.
1998ல் தொடங்கப்பட்ட இந்த SIES ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய சிறப்பு விருது, இந்த 2025க்கான, 28 ஆவது வருட விருதளிக்கும் விழாவினை ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி விழா 2025யினை ஒட்டி காஞ்சி காமகோடி பீடத்தின் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசிகளுடன், தென்னிந்திய கல்விச் சங்கம் சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025 அன்று மாலை 6.00 மணிக்கு, சயான் (கிழக்கு), மும்பையில் உள்ள ஸ்ரீ சண்முகானநதா சந்திரசேகரேந்திர சரஸ்வதி அரங்கில் கொண்டாடியது.
இந்த வருட விருதுகளைப் பெற்றவர்கள்: -
பொதுத் தலைமைக்காக அசாம் முதலமைச்சர், டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா.

1969 ல் பிறந்த இவர், இளம் வயதிலேயே பொதுச் சேவையின் மீதான தனது ஆர்வத்தால் மக்களுடன் இணைந்தார். கடந்த முப்பது வருடங்களாக , இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் அரசியல் களத்தில் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார். அவர் மே 10, 2021 அன்று அசாம் மாநிலத்தின் 15ஆவது முதலமைச்சராக பதவி ஏற்றார். முதலமைச்சராக ஆவதற்கு முன்பு, இரண்டு தசாப்தங்களாக சுகாதாரம், கல்வி, நிதி மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு முக்கிய அமைச்சகப் பொறுப்புகளை வகித்தார். அவர் தொடங்கிய 'ஆத்ம நிர்பர் அசாம் அபியான்' திட்டம், அசாம் மக்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் 'வசுந்தரா' திட்டம் மூலம் டிஜிட்டல் ஆளுகை, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு, குறிப்பாக பெண் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாதாந்திர நிதி உதவி வழங்கும் 'அருணோதய்' திட்டம், சுகாதார அமைப்பை மாற்றுவதன் மூலம் தேசிய சராசரியை விட அதிகமாக இருந்த தாய்வழி இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துதல், சட்டவிரோத குடியேறிகளின் எல்லை தாண்டிய வருகையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை.

சமூகத் தலைமைக்காக மும்பை டப்பாவாலாக்கள்

இந்த அமைப்பின் சார்பாக அதன் சேர்மன் உல்லாஸ் சாந்தாராம் முகே பெற்றுக்கொண்டார்.

இன்று, சுமார் 5,000 டப்பாவாலாக்களைக் கொண்ட மும்பை டப்பாவாலா சேனை, கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மும்பைவாசிகளின் பசியைப் போக்குகிறது. சுயமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பான இதில், சேவை வழங்கும் செயல்முறையானது எளிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் துல்லியம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த அமைப்பின் சேவையை பல வருடங்களாக அனுபவித்தவன் நான். அனைத்தும் உண்மையே. இவர்களது தன்னிகற்ற சேவையை கருத்தில் கொண்டு இங்கிலாந்தின் தற்போதைய அரசர் மூன்றான் சார்லஸ், 2005ல் நடந்த தனது இரண்டாம் திருமணத்தின் போது இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை அழைத்து கௌரவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற துறையில் டாக்டர் ஏ. சிவத்தாணு பிள்ளை.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆபரேஷன் சிந்துர் என்ற நமது ராணுவ நடவடிக்கையில் 1947ல் பிறந்த டாக்டர் ஏ. சிவத்தாணு பிள்ளையின் பங்கை மிகவும் சிலாகித்து கூறுவார்கள்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற துறையில் டாக்டர் சிவதாணு பிள்ளையுடன் டாக்டர் பிரஹ்லாதா ராமராவும் விருது பெற்றார்.

தத்துவம் மற்றும் சமூகத் தலைமைத்துவத்திற்காக - டாக்டர் மணி திராவிட சாஸ்திரிகள், எம்.ஏ., பிஎச்.டி.

இதுவரை இந்த நான்கு துறைகளில் 108 நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில், 3 ஜனாதிபதிகள், 2 உதவி ஜனாதிபதிகள், 3 பிரதமர்கள், 2 லோக் சபாநாயகர்கள், 3 கவர்னர்கள், 4 மாநில முதல்வர்கள், 5 பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 6 நமது நாட்டின் கலாச்சாரத்திலும் நம்து நாட்டின் மீதும் அன்பு கொண்ட அந்நிய மண்ணைச் சேர்ந்தவர்கள்.
ரூ 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் அலங்கார ஆளூயர குத்து விளக்கு விருது மேற்கோள் என விருது பெரும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படுகிறது.

Leave a comment
Upload