
அந்த விமானம் எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற புஷ்பக விமானம்தான்.
“தீர்க்க சுமங்கலி” என்ற படத்தில்தான் எம்.எஸ்.வி-க்கு முதல் பாடலாக “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடலைப் பாடினார் வாணி ஜெயராம். அந்தப் பாடல் வாணி ஜெயராமை தமிழ்த் திரை உலகத்தின் உச்சத்தில் கொண்டு போய் வைத்தது. மூன்று விருதுகளை வாங்கிக் கொடுத்தது அந்தப் பாடல்.
அடுத்த பாடலும் அவர் வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாய் அமைந்தது. அதுதான் இயக்குனர் கே.பாலச்சந்தர் கவியரசு கண்ணதாசன் கூட்டணியில் உருவான “அபூர்வ ராகங்கள்” படத்தில் வரும் “ஏழு ஸ்வரங்களுக்கள் எத்தனை பாடல்” என்ற பாடல்.
ஒவ்வொரு எழுத்துக்கும் அழுத்தம் கொடுப்பதில் அளவு உண்டு அதை எம்.எஸ்.வி அவர்கள் அழகாகச் சொல்லித் தருவாராம். மிகவும் கஷ்டமான பாடல். பயந்து பயந்து பலமுறை பயிற்சி எடுத்தாராம்… ஆனால் ரிகார்டிங் 9 மணிக்கு ஆரம்பித்து 10.30 மணிக்குள் முடிந்துவிட்டதாம். அந்தப் பாடலுக்கு நினைத்து பார்க்காத அளவுக்கு பாராட்டு கிடைத்ததாம். தேசிய விருதும் கிடைத்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனிப்பட்ட முறையில் வாணியை அழைத்துப் பாராட்டினாராம்.
ஜெமினி ஸ்டுடியோவில் எம்.எஸ்.வி. இசையில் வாணி பாடிக் கொண்டிருந்தாராம். அப்போது எம்.ஜி.ஆர் “இதயக்கனி” படத்தின் புரொஜக்ஷன் பார்க்க அங்கு வந்திருக்கிறார். எம்.எஸ்.வி. பாடல் பதிவாகிறது என்ற செய்தி கேட்டு ரிகார்டிங்க் ரூமுக்கு வந்தாராம் எம்.ஜி.ஆர். அப்போது வாணியைப் பார்த்திருக்கிறார். வாணியும் வணக்கம் சொல்ல, எம்.ஜி.ஆர் “உன்னை ஏற்கெனவே ஒரு கச்சேரியில் பார்த்திருக்கிறேன்,” என்று கூற வாணி மகிழ்ந்து போனாராம்.
மும்பை ஷண்முகாநந்தா ஹாலில் வாணி பிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வந்திருந்தார்களாம். அதன் பிறகு நிறைய எம்.ஜி.ஆர் படங்களுக்கு வாணி பாடியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு அபார சங்கீத ஞானம் உண்டு. அவரே ஃபோனில் எம்.எஸ்.வி.யிடம் சில சங்கதிகளைக் கூறி அவை பாடலில் இடம்பெறும்படி கூறுவாராம். அப்படி அவர் சங்கதி கூறி பாடலில் இடம் பெற்ற பாடல்தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் வரும் துவஜாநந்தி ராகத்தில் அமைந்த “அமுதத் தமிழின்” என்ற பாடல்.

அதே ராகத்தில் உருவான இன்னொரு பாடல் தான் “கந்தனுக்கு மாலையிட்டாள்” என்ற பாடல் (ஆ.பு.சு.படம்). அந்தப் பாடல் பதிவின் போது சாரதா ஸ்டுடியோ வந்த ஆ.பு.சு. பாடலை கேட்டுவிட்டு “மிகவும் நன்றாக பாடியிருக்கிறாய்” என்று வாணியை பாராட்டினாராம். தங்கப்பதக்கம் படத்தில் “தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு” என்ற பாடலுக்காக சிவாஜி வாணியை தன் வீட்டிற்கு அழைத்து அன்புடன் விருந்தளித்து மகிழ்ந்தாராம்.
அதே போல தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். அவன் தான் மனிதன் படத்தில் வரும் எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது, அன்பைத் தேடி படத்தில் வரும் “சிப்பிக்குள்ளே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்” பாடல், பாட்டும் பரதமும் படத்தில் வரும் “மழைக்காலம் வருகின்றது” என்ற பாடல் ஆகியவை எனக்குப் பிடித்த பாடல்கள் என்று கூறுகிறார்.
அந்தக் காலத்து கதாநாயகிகள் ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, சுஜாதா, சரிதா, ஸ்ரீவித்யா என எல்லோருக்குமே பின்னணி பாடியிருக்கிறார். சங்கர் கணேஷ் இசையமைப்பிலும் நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார். பொதுவாகவே சங்கர் கணேஷ் இசையமைப்பு மிகவும் ஜாலியாக இருக்குமாம், சொஞ்சம் கூட டென்ஷனே இருக்காதாம்.
கே.வி.மகாதேவன் இசையில் தெலுங்கில் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.
சங்கராபரணம் படத்தில் பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது. அதே போல இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கத்தில் இளையராஜா இசையில் ஸ்வாதி முத்யம் படத்தில் பாடியதற்காக மூன்றாம் முறையாக தேசிய விருது வாங்கியிருக்கிறார்.
“பொதுவாக நான் விருதை தேடிச் செல்வதில்லை. இறைவன் அருள்… ஆதலால் அது தானாகவே என்னை தேடி வரும்’’ என்று பெருமையுடன் கூறுகிறார். கன்னடத்தின் பிரபல இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் இசையில் நிறைய கன்னட பாடல்கள் பாடியிருக்கிறார். எஸ்.பி.முத்துராமன் இயக்கி விஜயபாஸ்கர் இசையமைத்த தமிழ்ப் படங்களிலும் பாடியிருக்கிறார். அதில் மயங்குகிறாள் ஒரு மாது திரைப்படத்தில் “ஒரு புறம் வேடன், ஒரு புறம் நாகம், இரண்டுக்கும் நடுவே அழகிய கலை மான்” போன்ற பாடல்கள் இன்றும் மறக்க முடியாதவை.
தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி என்று எல்லா மாநில அரசு விருதுகளையும் நிறைய வாங்கியிருக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசின் மாநில விருது ஒன்றுதான் வாங்கியிருக்கிறார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார். அவர் எப்போதும் வாணியை சிம்மம் என்றுதான் அழைப்பாராம். அவர் இசையமைத்த மேல் நாட்டு மருமகள் படத்தில் “முத்தமிழில் பாட வந்தேன்” என்ற பாடல் மிகபிரபலம். அதே குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எம்.ஜி.ஆர். நடித்த நவரத்தினம் படத்தில் “குருவிக்கார மச்சானே” என்ற நாட்டுப்புறப் பாடலையும் பாடியிருக்கிறார்.
வாணி தாயாரை இழந்த சமயம்… எம்.டி. சீனிவாசன் இசையில் “நிஜங்கள்” என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடும் சூழ்நிலை வந்தது. அந்த பாடலை எழுதியவர் வாலி. என்ன பாடல் தெரியுமா? “அம்மா உன்கை வளையாய் நான் ஆக மாட்டேனா?” என்ற உருக்கமான பாடல்… வாணி அன்று இருந்த மனநிலைக்கு அவ்வளவு உருக்கமாக வேறு யாரும் பாடியிருக்கமாட்டார்கள். இதை சொல்லும்போதும் அந்த வரிகளைப் பாடிக் காட்டும்போதும் அவர் கண்கள் கலங்கத்தான் செய்தன… நமது கண்களும்தான்.
அவரது அம்மாவோட வால்யூஸ் கொள்கைகள் கோட்பாடுகள் தான் வாணியை வழி நடத்துகிறது. அதே போல வசந்த் தேசாய் சொன்ன அறிவுரைகள். வேலையில் பெரிய வேலை சின்ன வேலை என்று எதுவும் கிடையாது. அதே போல இசையமைப்பாளர்களில் சின்னவர் பெரியவர் என்பது கிடையாது. நம் பணியை நாம் செய்வது நம் கடமை.
வீட்டிலும் எல்லா வேலைகளையும் அவரே செய்கிறார். சமையல், வீட்டை சுத்தம் செய்வது… ஏன்… டாய்லெட் முதற்கொண்டு தானே சுத்தம் செய்வதாய் கூறுகிறார். தன் வீட்டில் எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அவர் கொள்கை. கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் இவர் வீட்டிற்கு வந்திருந்த போது கிச்சனை பார்த்து அழகாய் துடைத்து வைத்த ஆப்பிள் போல இருக்கிறது என்று பாராட்டினாராம்.
எதையாவது எதிர்பார்த்து ஏமாந்த சமயம்… யாராவது அவருக்கு துரோகம் செய்து விட்டால் முதலில் அவர் கணவரிடம் கூறுவாராம். பிறகு கடவுள் முன்னால் அமர்ந்து இரு கண்களையும் மூடி மானசீகமாக பேசுவாராம். சில சமயம் டிராயிங்க் வரைய ஆரம்பிப்பாராம். அந்தக் கோடுகளை வரைவதில் உள்ள கவனம் மனதில் உள்ள கவலைகளை கலைத்துவிடுமாம்.
துக்கத்துக்கு அடிமையான பல கலைஞர்கள் ஏதாவது கெட்ட பழக்கத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். கலைஞர்கள் அனைவரும் மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
சங்கீதம் என்பது சினிமா பாடல்கள் மட்டுமில்லை. அது ஒரு கடல். கிளாசிகல், மெல்லிசை, நாட்டுப்புறப் பாடல்கள் என்று பலவகை இருக்கிறது. அந்த வகையில் மும்பையில் இருக்கும்போது இந்துஸ்தானி, கஜல், பஜன் போன்றவற்றை பாடி பழகியிருக்கிறார். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பாடியிருக்கிறார்.
பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு முன்னால் பாடியதை இன்றும் தன்னால் மறக்க முடியவில்லை என்று கூறுகிறார். இயக்குனர் குல்ஜாரின் மீரா படத்தில் எல்லாப் பாடல்களையும் வாணிதான் பாடியிருக்கிறார். அதற்கு பிலிம்ஃபேர் விருது கிடைத்தது. அது மட்டுமல்ல மீரா பிறந்த ஊருக்கே சென்று மீரா பஜன் படியிருக்கிறார். நேர்மையும் தொழில் பக்தியும் இவருடன் பிறந்தவை…
அதை உண்மையாக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. சூலமங்கலம் ராஜலட்சுமி இசையில் ஒரு சோலோ பாடல் பாடி இருக்கிறார். மதியம் ஒரு டூயட்டும் பாடவேண்டும். உண்மையில் அந்த டூயட் பி.சுசீலா பாடவேண்டியது. அவர் வெளியூரில் மாட்டிக் கொண்டதால் வாணியே பாடட்டும் என்று சூலமங்கலம் ராஜலட்சுமி கூறியிருக்கிறார். இருந்தாலும் வாணிக்கு மனசு கேட்கவில்லை. பி.சுசீலா எவ்வளவு பெரிய பாடகி.. அவர் பாட வேண்டிய பாடலை தான் பாடுவதா? என்ற கேள்வியுடன் பி.சுசீலாவின் கணவர் மோகனுக்கு ஃபோன் செய்து கேட்டிருக்கிறார். அவரோ பெருந்தன்மையுடன் வாணியை பாட சொல்லியிருக்கிறார். பிறகு தான் அந்த டூயட் பாடலை கே.ஜே. ஜேசுதாஸுடன் பாடியிருக்கிறார்.
கவியரசர் கண்ணதாசன் “உன்னை போல் ஒரு பெண் என் குடும்பத்தில் இல்லை ஆயுள்கால ஏக்கமிது” என்று வாணியைப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார். கவிஞர் வாலியோ “ நான் ஒரு வகையில் கொடுத்து வைத்தவன். ஒரு கணவனின் நல்ல மனைவியாய்” என்ற பாடலை வாணிக்காகவே எழுதியிருக்கிறார்.
குத்துப் பாடலைப் பற்றி பேசும் போது கவிப்பேரரசு வைரமுத்து வாணி குத்து பாடல் பாடினால் குத்து விளக்கில் சிகரெட் பற்ற வைத்த மாதிரி இருக்கும் என்று கூறியிருக்கிறார். இவருடைய ரசிகர்கள் யார் தெரியுமா?
குஷ்வந்த் சிங், ஆர்.கே. லக்ஷ்மனும் அவர் மனைவியும், சிவசங்கரி, இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி தேவசேனா.. இப்படிக் கூறிகொண்டே…. போகலாம்….
கீத மின்றி – சங்
கீத மின்றி – வாழ்வு ஏது
நாத மின்றி - என்
நாதனின்றி காவல் ஏது
என்ற பாடலைப் பாடி தன் பேட்டியை முடிக்கிறார் வாணி ஜெயராம்.
(முற்றும்)

Leave a comment
Upload