தொடர்கள்
ஆன்மீகம்
இனிக்கும் இஸ்லாம் - 14


நோன்பின் நோக்கம்

வி.எஸ்.முஹம்மது அமீன்

20180425160129791.jpg

வீதியில் நடப்பவரிடம் “நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள். தனது நடையின் நோக்கத்தைப் பதிலாய்த் தருவார்.

வீதியில் ஒரு எட்டு நடை போடுபவருக்கே நோக்கமொன்று இருக்கிறதென்றால் மாதம் முழுவதும் பசித்திருப்பதற்கு நோக்கம் இல்லாதிருக்குமா?

ஆண்டவனின் கட்டளை அர்த்தமற்றதாக இருக்குமா என்ன?

நோன்பிற்கு நோக்கம் இருக்கிறது. அது உன்னதமான நோக்கம். நோன்பு மட்டுமல்ல இஸ்லாத்தின் கடமைகள் ஒவ்வொன்றும் ஓர் உயரிய நோக்கத்தை முன்வைத்துள்ளது.

தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் அனைத்தும் வேண்டி நிற்கும் நோக்கம் என்ன தெரியுமா?

இறையச்சம். நற்குணமுள்ள மனிதர்கள். இறையச்சமுள்ள சமுதாயம்.

தொழுகை எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்க விரும்புகிறது தெரியுமா?

இறைவன் குறிப்பிட்டுக்காட்டுகிறான்

“திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கின்றது” -திருக்குர்ஆன் 29:45

ஜகாத் மனிதர்களிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது தெரியுமா?

இறைவன் கட்டளையிடுகின்றான்.

(“நபியே!)அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்து கொண்டு அதன்மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக!(நல் வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக!” - திருக்குர்ஆன் 9:102

ஹஜ் என்ற கடமை ஏற்படுத்த விரும்பும் மாற்றம் என்ன என்பதை இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்

“நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான்” - திருக்குர்ஆன் 2:197

ஹஜ்ஜின்போது பிராணிகளை அறுத்துப் பலியிடுவது கூட ஓர் ஒப்பற்ற நோக்கத்தையே வேண்டி நிற்கிறது.

இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

“..... இப் பிராணிகளை நாம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளோம். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு! அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்வைப் போய்ச் சேருவதில்லை.ஆயினும் உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகிறது” - திருக்குர்ஆன் 22:37

இப்போது நோன்பிற்கு வருவோம். நோன்பின் நோக்கம் எதுவென இறைவன் தெளிவாய்க் குறிப்பிடுகின்றான்.

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது.(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்” - திருக்குர்ஆன் 2:183

நோன்பின் நோக்கம் இறையச்சம் சரிதான். ஆனால் பட்டினி கிடந்தால் இறையச்சம் எப்படி வருமாம்?

தனக்குப் பசியிருந்தும், பக்கத்திலே வகை வகையாய் உணவிருந்தும் ஒரு மனிதனை உண்ணவிடாமல் தடுப்பது எது? தாகம் தொண்டையில் நீந்திக்கொண்டிருந்தாலும் தண்ணீர் அவன் முன் அலையடித்தாலும் அவனைப் பருகவிடாமல் தடுப்பது எது?

அதுதான் இறையச்சம். இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற அச்சம். இந்த அச்சத்தைத்தான் நோன்பு விதைக்கிறது.

வீட்டிலே யாருமில்லை. பசிக் களைப்பு கண்களில்... நோன்பு வைத்து களைத்துக்கிடக்கும் ஒரு சிறுவனிடம் ‘யாரும் இங்கில்லை. ஒரே ஒரு மிடரு குடியேன்பா..!’ என்று சொல்லிப்பாருங்களேன்.

‘ஊஹும்... நான் குடிக்கமாட்டேன். இறைவன் பார்த்துக்கிட்டிருக்கான்’ என்பதே அந்தச் சிறுவனின் பதிலாய் இருக்கும்.

இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வைச் செயல் முறையில் அழுத்தமாகப் பதிய வைப்பதுதான் நோன்பு. அதுவும் ஒருநாள் இருநாள் அல்ல. மாதம் முழுவதும் இந்தப் பயிற்சியைத் தருகிறது.

இறைவன் ஒருவனே. படைத்தவனும் அவனே! உணவளிப்பவனும் அவனே! காப்பவனும் அவனே! மரணிக்கச் செய்பவனும் அவனே! மரணத்திற்குப்பின் உயிர்கொடுப்பவனும் அவனே! நற்செயல்களுக்கு நற்கூலியும், தீய செயல்களுக்குத் தண்டனையும் அளிப்பவனும் அவனே! இறைவன் நித்திய ஜீவன். அவனுக்குப் பசியோ,தாகமோ,களைப்போ, உறக்கமோ இல்லை.அவனுக்கு ஓய்வென்பதே இல்லை. அவன் எந் நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அவனுடைய பார்வையிலிருந்து அணுவின் அசைவுகூட மறைந்திட முடியாது.

அத்தகைய ஆற்றல்மிக்க மகத்தான இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவனிடமிருந்து யாரும், எதுவும் தப்ப முடியாது என்ற அச்ச உணர்வு ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால் அவனால் பொய் பேச இயலுமா?அவன் புறம் பேசுவானா? ஏமாற்றுவானா? லஞ்சம் வாங்குவானா? தீய செயல்களில் ஈடுபடுவானா?

நிச்சயமாக இயலாது. ஏனென்றால் இறைவன் எந்நேரமும் அவனைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சம் அவனைத் தடுக்கும். அதுதான் நோன்பின் நோக்கம்!