தொடர்கள்
தொடர்கள்
வாருங்கள் இலக்கியப்பக்கம்! - ஹரிகி

இரட்டை நீளம்!

20180425142314930.jpg

(வில்லும் கழுந்தும் மற்றும் குதையும்சென்ற இதழ்த் தொடர்ச்சி.)

வில்லின் நீளம், கழுந்து, குதை ஆகியவற்றைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். வெற்றிசெய உற்றகழைவிற்குதை வளைத்துமதன் விட்டகணை பட்டவிசையால்என்று அருணகிரிநாதருடைய திருப்புகழ் குறித்தும் சொன்னோம். வெற்றியைத் தருவதற்காக அமைந்ததும், குதையை உடையதுமான கழைவில்லை (கரும்பு வில்லை) வளைத்து மன்மதன் எய்த மலரம்பு வந்து தைத்த விசையால்என்று அதற்குப் பொருள். இந்த கழைவிற்குதைஎன்பதை முன்னும்பின்னுமாகப் போட்டு அன்வயப் படுத்திக்கொள்ள வேண்டும். கரும்பு வில்லுக்குக் குதை இருக்க முடியாது என்றாலும், கவிஞருக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் அவரை இப்படி வர்ணிக்க வைக்கிறது.

குதை என்பது வில்லின் நடுப்பாகம். புருவங்களைப் போல வளைந்திருக்கும் வில்லுக்கு நடுவில் புருவமத்தியைப்போல அமைந்திருக்கும் இடத்துக்குக் குதை என்று பெயர். இந்தப் புருவ மத்திக்குக் கோதண்டம்என்றொரு பெயரும் உண்டு. புருவங்களை வில்லின் வளைந்த பகுதிகளாகக் கொண்டால் இந்த இடம் வில்லின் நடுப்பகுதியை ஒத்து இருப்பதால் இதைக் கோதண்டம் என்றும் சொல்வதுண்டு. (கோதண்டம் என்றால் ராமனின் வில் என்றல்லவா சொல்கிறோம்? கம்பராமாயணத்திலோ ஆழ்வார் பாசுரங்களிலோ ஒரே ஒரு இடத்தில்கூடகோதண்டம்என்ற பெயர் பயன்படுத்தப்படவில்லை. சுமார் 15 வருடகாலம் புத்தகங்களில் தேடி, பிறகு டிஜிடலாகவும் தேடிக் கண்டடைந்த முடிவு இது. கம்பனிலோ, ஆழ்வார் பாசுரங்களிலோ கோதண்டம்என்ற சொல் இருப்பதாக எடுத்துக் காட்டினால் என்னைத் திருத்திக்கொள்கிறேன்.) கோதண்டம் என்பது வில்லுக்கு இன்னொரு ஸினானிம். பிற்காலப் பயன்பாட்டில் ராமனுடைய வில்லின் பெயர் என்று புழக்கத்துக்கு வந்தது. கந்தபுராணத்தில் கோதண்டம் என்ற பெயர் திருமாலுடைய பஞ்சாயுதங்களில் வில்லைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோதண்டம் என்னும் சொல்லுக்குப் பொருள் வரையறை செய்யும்போது சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன், இந்தச் சொல்லுக்கு உதாரணம் காட்டுவதற்காக திருப்போரூர் சந்நிதி முறை என்ற நூலைப் பயன்படுத்துகிறது. ஆழ்வார்களிலிருந்தோ, கம்பனிலிருந்தோ அல்ல! இதைத் தனியாகவே இன்னொருநாள் விரிவாகப் பார்ப்போம்.

இந்தக் குதை என்பதுதான் வில்லில் நேர்க்கோடாக இருக்கும் பாகம். இங்கேதான் அம்பு பொருத்தப்படும். வில்லுக்குக் குதை இருப்பது போலவே அம்புக்கும் ஒரு குதை உண்டு. அம்பின் குதை என்றால் அதன் அடிப்பாகம். வில்லைப் பிடித்திருப்பவனுடைய தோள் உயரத்தில் இந்தக் குதை இருக்கும். அப்படியானால் ஒரு முழு வில்லின்உயரம் என்னவாக இருந்திருக்க முடியும்? பல இடங்களில் பலவிதமான குறிப்புகள் கிடைக்கின்றன. மஹாபாரதத்தின் விராட பர்வத்தில் உத்தர குமாரனைத் தேரோட்டச் சொல்லி, பிருஹன்னளை வடிவத்தில் இருக்கும் அர்ஜுனன் கௌரவர்களோடு போருக்குக் கிளம்பும்போது, காண்டீபம் பனைமரம் போலப் பெரியதுஎன்ற குறிப்புக் கிடைக்கிறதே தவிர, இப்படித்தான் இருந்திருக்கும் என்று ஊகிப்பதற்கான எதுவும் என் கண்ணுக்கு அகப்படவில்லை. பனைமரம் ஐந்தடி உயரத்திலும் இருக்கும்; பத்தடி உயரத்திலும் இருக்கும்; பதினைந்தடியும் அதற்கு மேலும்கூட உயரம்கொண்டதாக இருக்கும். ஒரு மனிதன் பயன்படுத்தும் உயரம் என்று எதை ஏற்றுக் கொள்ளத் தக்கதாக சொல்ல முடியும்?

போர்வீரனுடைய வில், எடையிலும் வலிவிலும் உயரத்திலும் மாறுபாடு கொண்டதாக இருந்திருக்கிறது. விராடபர்வப் போரில் உத்தர குமாரனைத் தேரோட்டியாக வைத்துக்கொண்டு, வில்லாளியாக நின்ற அர்ஜுனன், உத்தரகுமாரனுடைய வில்லை, ‘இது என் ஒரு இழுப்புக்குத் தாங்காது. நான் போரிடவேண்டுமானால் காண்டீபம்வேண்டும். அதைப் பாண்டவர்கள் எங்கே மறைத்துவைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறேன். என்னோடு வந்து மரத்தில் ஏறி எடுத்துக்கொடுஎன்று சொல்கிறான். உத்தர குமாரன், பேடி வடிவத்தில் இருக்கும்பிருஹன்னளையை அல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறான்! அவனுக்கு இவன்தான் அர்ஜுனன் என்பது அதுவரையில் தெரியாது.

உத்தர குமாரன் கையில் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்த அதே வில்தான் அர்ஜுனனுடைய கைக்கு ஒரு இழுப்புக்குத் தாங்காதாகமாறிவிடுகிறது. ஆகவே இவையெல்லாம் அவரவருக்குத் தகுந்தபடி (Custom-made) இருந்தது என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் பொதுவாக ஒரு உயரக் கணக்கு என்றிருந்திருக்க வேண்டும். இது எங்கே கிடைக்கும் என்று தேடியபோதுதான் வால்மீகி ராமாயணத்தில் அது அகப்பட்டது.

வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம். ஸர்க்கம் 11. ‘உன்னால் வாலியோடு போர் புரிய முடியுமா என்பதை நான் உறுதிசெய்து கொள்ளவேண்டும். உன்னுடைய வலிமையை எனக்குக் காட்டுஎன்று சுக்ரீவன் ராமனிடத்தில் சொல்கிறான். கம்பராமாயணம் படித்தவர்கள் இங்கே குழம்புவார்கள். ஏனெனில் கம்ப ராமாயணத்தில் சுக்ரீவன் ராமனிடத்திலே இப்படியெல்லாம் சொல்லவில்லை. கம்பன் செய்திருக்கும் பலவிதமான மாற்றங்களில் இதுவும் ஒன்று.

ராமனுடைய வலிமையைப் பரிசோதிக்கும் விதமாக சுக்ரீவன் இரண்டு சோதனைகளை வைக்கிறான். முதலில்துந்துபியின் எலும்புக்கூட்டைக் காலால் உதைத்துக் காட்டுஎன்கிறான். ராமன் இப்படிச் செய்து முடித்ததும், ‘வாலி துந்துபியைக் கொன்றபோது அவனைத் தூக்கி கரகரவென்று சுற்றித் தூக்கி விட்டெறிந்தான். இப்போது வெறும் எலும்புக் கூடாக இருக்கும் இது அப்போது ரத்தமும் சதையும் உள்ள துந்துபியாக, இன்னமும் அதிக எடைகொண்டதாக இருந்தது. எனவே இது போதாதுஎன்று சொல்லி அடுத்ததாகத்தான் ஒரு சால மரத்தை அம்புவிட்டுத் துளைத்துக் காட்டச் சொல்கிறான். ராமன் ஏழு சால மரங்களைத் துளைத்துக் காட்டுகிறான். கம்பனில் இது மாறுபடும். முதலில் சால மரப் பரீட்சை. அது முடிந்து வரும்வழியில் கிடக்கும் துந்துபியின் எலும்புக்கூட்டைத் தற்செயலாகப் பார்க்கும் ராமன், ‘லட்சுமணா, இதை உன் காலால் எற்றுஎன்று சொல்லி லட்சுமணனுடைய ஆற்றலையும் வெளிப்படுத்துவான்.

துந்துபி என்பவன் காட்டெருமைத் தலையைக் கொண்ட ஒரு அசுரன். இவன் வாலியை ஒண்டிக்கு ஒண்டிசண்டைக்கு அழைக்கிறான். காரணம் வாலிக்கும் துந்துபிக்கும் ஒரு பெண் விஷயமாகப் பகை இருந்தது என்று வால்மீகியில் குறிப்பு இருக்கிறது. கம்பனில் இது எதுவும் இல்லை. வெகுநேரம் நடந்த இந்த த்வந்த யுத்தத்தின் முடிவில் (சமமான பலமும், சம ஆயுதங்களும், சமமான தேர் முதலான உபகரணங்களும் கொண்டவர்களுக்கிடையில் நடப்பது த்வந்தம்; இந்தச் சமன்பாடு மாறுபட்டால் அதற்கு சங்குல யுத்தம் என்றுபெயர்.) துந்துபியைக் கொல்லும் வாலி, துந்துபியின் வாலைப் பற்றித் தூக்கிச் சுழற்றி விட்டெறிகிறான். அது மதங்க முனிவருடைய ஆசிரமத்துக்கு அருகே போய் விழுகிறது. துந்துபியின் ரத்தம் மதங்கருடைய ஆசிரமத்தில் தெறிக்கிறது. அதனால்தான், ‘இங்கே வந்தால் உன்னுடைய தலை வெடித்துச் சிதறிவிடும்என்று வாலியை மதங்கர் சபிக்கிறார்.

இப்படி எறிந்தபோது துந்துபியின் உடல் எத்தனைத் தொலைவுக்குச் சென்று விழுந்தது என்று சொல்கிறான் சுக்ரீவன். வாலி எவ்வளவு தொலைவுக்கு துந்துபியின் உடலைத் தூக்கி வீசினானோ, அவ்வளவு தொலைவுக்குப்போய் விழுமாறு இந்த எலும்புக் கூட்டைக் காலால் எற்றினால் போதுமானதுஎன்பது சுக்ரீவனுடைய முதல்கோரிக்கை. இதைப் பொதுவாக எல்லாப் பதிப்புகளிலும் இப்படிப் பிரசுரித்திருக்கிறார்கள்: "Lakshmana, if he lifts and kicks the skeleton of this dead buffalo by the might of his foot, and makes it fall at a distance of two hundred bow-lengths, I can confide." So said Sugreeva to Lakshmana.” (வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், 11ம் ஸர்க்கம், ஸ்லோகம் 72). இருநூறு வில் தொலைவுக்கு எற்றவேண்டும் என்பது இந்தக் கோரிக்கை. அப்படியானால் ஒரு வில் தொலைவு என்பது எவ்வளவு நீளத்தைக் குறிக்கும்?

பல பதிப்புகளைப் படித்ததில் கீதா பிரஸ் வெளியிட்டிருக்கும் கோரக்பூர் பதிப்பில் இதே சுலோகம் பின்வருமாறு பதிப்பிக்கப் பட்டிருக்கிறது: “I shall deem him (Vali) killed even if lifting with his single foot the bones of the buffalo made short work of by Vali, Sri Rama should (be able to) throw them by his might to a distance of two hundred bows (or eight hundred arms) length, O Lakshmana! நாம் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. நூறு வில் அல்லது எண்ணூறு கைதூரம். இந்த எண்ணூறு கைஎன்ற குறிப்பு வடமொழி ஸ்லோகத்தில் இல்லை. பதிப்பாசிரியரின் குறிப்பாக நகவளைவில் சேர்க்கப் பட்டிருக்கிறது.

இருநூறு வில் தொலைவு என்பது எண்ணூறு கை தூரம் என்றால், ஒரு வில்லின் நீளம் நான்கு கை. ஒரு கைஎன்பது சராசரியாக 36 அங்குலம். (இணையத்தில் தேடினால் ஒரு அடி’ (அல்லது 12 அங்குலம்) என்ற விடைதான் பெரும்பாலும் கிடைக்கும். அது arm’s length என்ற ஆங்கில idiom-க்கான வரையறை. நடுவிரல்நுனியிலிருந்து முழங்கை வரையில் பொதுவாக ஒன்றரையடி நீளம் வரும்.)

அப்படியானால் நான்கு கை நீளம் என்பது 144 அங்குலம் அல்லது 12 அடி! இதுதான் சாத்தியமான விடை. அதாவது பன்னிரண்டு அடி நீளமுள்ள வில்லின் கழுந்துப் பகுதியைத் தரையில் ஊன்றியபடிப் பிடித்தால், குதைப்பகுதி தோள் அளவுக்கு வரும். மிச்ச உயரம் வில்லாளியின் தலைக்கு மேலே நீட்டிக்கொண்டிருக்கும். இப்படிஇருந்தால்தான் ராமன் இழுப்பதைப்போல, நாணைக் காதுவரையில் இழுக்கும்போது (நாணைக் காது வரையில் இழுத்தான்என்று கம்பன் போர்க் காட்சிகளில் பல இடங்களில் பாடியிருக்கிறான்) வில்லின் உயரம் தாழ வரும்; அம்புக்கு அதற்கு வேண்டிய விசை கிடைக்கும். எனவே ஒரு வில்லின் நீளம் என்பது பத்து அல்லது பன்னிரண்டு அடி என்று கொள்ள இயலும். இதைப் பல ராமாயண, பாரதப் போர்க் காட்சிகளிலிருந்து பெறமுடிகிறது.

அலெக்ஸாண்டருடன் வந்திருந்த அரியன் (Arrian) நாம் சென்ற முறை பார்த்த மிக நீளமான வில், ஒரு ஆள் உயரம் இருக்கும் என்று சொல்வதைப் பார்த்தோம். இது அவர் பார்த்திராத வில். இதன் உயரம் வெறும் ஆறடியன்று; பன்னிரண்டடி!

இவ்வளவு நீளமிருக்கிற வில்லை எந்தக் கையால் பிடிப்பார்கள் என்ற கேள்வி அடுத்ததாக எழுகிறது. ஒருகையால் வில்லைப் பிடித்தால்தானே மறு கையால் அம்பை எய்ய முடியும்? இரண்டு கைகளாலும் அம்பை எய்பவன்என்ற காரணத்தால் ஸவ்யஸாசி என்ற பெயர் அர்ஜுனனுக்கு உண்டு. இவன் ஒருவன்தான் வில்லை இரண்டு கைகளாலும் பிடித்திருக்கிறான்.

அப்படியானால் மற்றவர்கள் வில்லை எந்தக் கையால் பிடித்தார்கள்? வில்லுக்கு ஆயத்த ஸ்தானம் எது, பிரயோகஸ்தானம் எது? ஆயத்த, பிரயோக ஸ்தானங்கள் ஆயுதத்துக்கு ஆயுதம் மாறுபடும். வில்லுக்குப் பொருந்துவது கதைக்கும் சூலத்துக்கும் வேலுக்கும் பொருந்தாது; வாளுக்குப் பொருந்துவது உடைவாளுக்குப் பொருந்தாது.

ஆயத்த, பிரயோக ஸ்தானங்களைப் பற்றியும், வில்லை எந்தக் கையால் பிடிப்பது என்பதைப் பற்றியும் அடுத்தமுறை பார்ப்போமா?