தொடர்கள்
பொது
அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வெனிசுவேலா! - எஸ்.பிரதீப்.

maduro

தனது நாட்டிலிருந்து அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இருவரை வெளியேற்றி அதிர்ச்சியளித்திருக்கிறது வெனிசுவேலா. இந்த வெளியேற்ற உத்தரவை அதன் ஜனாதிபதியான நிக்கலஸ் மதுரோவே நேரடியாகப் பிறப்பித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளியேற்றம் எதற்காக? ஏன், இப்படி அமெரிக்காவை இந்த நாடு பகைத்துக்கொள்கிறது?


தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்குக் கரையில் அமைந்திருக்கின்ற நாடு வெனிசுவேலா. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வள நாடாகவும் இது காணப்படுகிறது. இந்த எண்ணெய் வளமே, இந்த நாட்டின் மீதான வல்லரசுகளின் கழுகுப் பார்வை வீழ்வதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.


லத்தீன் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அனுசரணையோடு சீரழிக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை 'பொலிவேரியன் புரட்சி'யின் மூலமாக மீட்டெடுத்தவர் இந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹூகோ சாவேஸ். அவரது பதினான்கு ஆண்டுகால ஆட்சியில் வெனிசுவேலாவின் பொருளாதாரம் செழித்தது.


போர், பசி, அடிமைத்தனம், மூடத்தனம் இல்லாத கற்றறிந்த வளமான சமுதாயத்தை உருவாக்கப் போராடிய தலைவராக சாவேஸ் கருதப்படுகிறார். 'உலகமயமாக்கலை' திணிக்க முயன்ற வல்லரசுகளோடு மோதி, 'மாற்று உலகம்' ஒன்றை அமைக்க முடியும் எனச் சாதித்தவர். 2013 இல் அவர் புற்றுநோயால் மறைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதும் அதுகுறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் கவனிக்கத்தக்கவை.


இவரது மரணச் சடங்கில் கலந்துகொள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வெனிசுவேலாவுக்கு வந்தனர் என்பதை வைத்து அவரது பெருமையைத் தெரிந்துகொள்ளலாம். சாவேஸின் இறுதி ஊர்வலத்தில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.

20180425120028100.jpg


இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்தான் தற்போதைய அதிபரான நிக்கலஸ் மதுரோ. சர்வாதிகாரத் தன்மை கொண்டவராக இவர் அடையாளப் படுத்தப்பட்டாலும் வல்லரசுகளோடும் எல்லைப் பிரச்சனை செய்யும் கயானா, கொலம்பியா போன்ற நாடுகளோடும் எதிர்த்து நிற்பதற்கு இவரைப் போன்றவர்கள்தான் தேவை என்று சொல்பவர்களும் அந்நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.


அண்மையில் நடந்த தேர்தலிலும் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிடவிருந்த இரண்டு பிரதான வேட்பாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதும், தேர்தலில் மிகக் குறைந்த சதவீத வாக்குகளே பதிவானதும் தேர்தல் முறையாகத்தான் நடந்ததா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

20180425120123111.jpg


கடந்த வருடங்களில் வெனிசுவேலாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பொதுத் தொண்டு நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 'எம்மீதான அழுத்தங்களை அதிகரிக்க, அமெரிக்கா போன்ற வல்லரசுகள் சுமத்தும் போலிக் குற்றச்சாட்டுகள் அவை' என்று வெனிசுவேலா மறுத்து வந்திருக்கிறது.


இந்த நிலையில் தான், வெனிசுவேலா மீது புதிதாகச் சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்தத் தடைகளின் மூலம், வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் கொள்முதலை மேற்கொள்ள முடியாத நிலைக்கு அமெரிக்க நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இது வெனிசுவேலாவின் அமெரிக்கா மீதான கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.


'இப்போது அமெரிக்காவால் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள், நாட்டின் பொருளாதாரச் செயன் முறையில் கூடுதலான தாக்கத்தை செலுத்தப் போகிறது' என்று வெனிசுவேலாவின் வர்த்தக அமைச்சர் ஜோஸ் வியெல்மா தெரிவித்திருந்தார்.


இந்தப் புதிய தடகைளையடுத்தே, தனது நாட்டில் தங்கியிருந்த அமெரிக்க ராஜதந்திர வட்டார அதிகாரியான டொட் ராபின்சன் மற்றும் அவரது உதவியாளரான பிரையன் நரான்ஜோ இருவரையும் நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு அதிபர் மதுரோ கட்டளையிட்டிருக்கிறார்.

Robinson

இவர்கள் மீதான எந்தவித நேரடிக் குற்றச்சாட்டினையும் அவர் முன்வைக்கவில்லை. ஆனால், 'வெனிசுவேலாவின் இராணுவ, பொருளாதார விடயங்களில் அமெரிக்கத் தூதரகம் அநாவசியமாக தலையிடுகிறது!' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


ஆகவே, இந்த ராஜதந்திர வட்டார அதிகாரிகளின் வெளியேற்றமானது அமெரிக்காவுக்கான ஓர் வெளிப்படையான எச்சரிக்கையாகவே பார்க்கலாம். 'இனிமேலும் எனது நாட்டு விடயங்களில் தலையிட்டால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்!' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அவர்.


உலகப் பெரியண்ணனுக்கு வெனிசுவேலாவின் வெளிப்படையான சவால் இது!