சாவித்திரி

ராஜசபையின் தனிமண்டபத்தில் தன்னெதிரில் எழுந்தருளியிருந்த நாரத மகரிஷி கூறியதைக் கேட்ட அசுவபதி மன்னன் அதிர்ச்சியடைந்தான்.
”தேவரீர், திரிலோக சஞ்சாரியாகிய உங்கள் வாக்கு தேவ வாக்குக்கு சமானம். இந்த இக்கட்டைத் தவிர்க்க வேறு ஏதும் வழியுண்டா?” என்று கவலையுடன் வினவினான்.
தேவ ரகசியத்தின் மகிமையையும், விதிப்பயன்களின் உட்கருத்தையும் கால நிர்ணயக் கோட்பாடுகளின் சூட்சுமங்களையும் அறியப்பெறும் மகோன்னத வரம் பெற்ற வெகுசிலரில் ஒருவராகிய நாரத மகரிஷி சிந்தனை வயப்பட்டார்.
’இன்றளவும் எந்த ஒரு தருணத்திலும், எந்த ஒரு சம்பாஷணையிலும் எந்த ஒரு தேவ ரகசியத்தையும் எவரிடமும் அடியேன் வெளிப்படுத்தியதில்லையே! இந்த மன்னனிடமும் அவன் பெற்ற மகளாகிய சாவித்திரியிடமும் நான் கொண்டிருக்கும் ஒரு தனிப்பட்ட வாத்ஸல்யம் காரணமாக இவ்விதமாய் ஒரு தேவ ரகசியத்தை தேவ வாக்காக வெளிப்பட உரைக்க நேர்ந்தமைக்கு ஏதேனும் உட்பொருள் இருக்குமோ என்று எண்ணியபடி தன் பதிலை எதிர்நோக்கி ஆதங்கத்துடன் அமர்ந்திருந்த மன்னனைப் பார்த்தார்.
“உன் மகளை அழைத்து அவள் முடிவை மாற்றிக்கொள்ள மனமுண்டா என்று கேள் மன்னனே. அதைத்தவிர வேறு வழியில்லை. நடப்பதெல்லாம் நாராயணன் செயல்” என்று கூறியபடி எழுந்து அசுவபதி மன்னனை ஆசீர்வதித்து விடை பெற்றார் திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி.
அவருடைய நாபியிலிருந்து ஜனித்து குரலோசையாய் வெளிப்பட்ட “நாராயண… நாராயண” எனும் திருமந்திரத்தின் ரீங்காரம் அவையெங்கும் பரவி எங்கெங்கும் எதிரொலித்தது.
சற்றும் பொறுத்திருக்க மனமின்றி, தன் அருமை மகளைக் காண விரைந்தான் அசுவபதி.
அரண்மனைக்குப் பின்புறத்தில் அமைந்திருந்த மாடமாளிகையின் தெற்கு மூலையில் செண்பகத்தோட்டத்தில் தோழியருடன் பூப்பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்த சாவித்திரி தன் தந்தையைக் கண்டதும் ஓடோடி அவரருகில் வந்து நின்றாள். அவள் தங்களைவிட்டு அகன்று சென்றதின் காரணமாய் தோட்டத்தில் பூத்துக்குலுங்கிய செண்பக மலர்கள் சற்றே பொலிவிழந்து காணப்படுகின்றனவோ என்கிற ரீதியில் தோட்டத்துப் பூங்குயில்கள் ஆதங்க தொனியில் கூவின.
தந்தை முகம் வாட்டமுற்றிருப்பதைக் காணலுற்றாள் சாவித்திரி. கவிதைநயம் கொண்ட நயனங்களில் கேள்விக்கணைகளின் கீற்று. அதுவும் அழகுதான்!.
“என் குழந்தாய்” அசுவபதியின் குரல் தயக்கத்தின் தாக்கத்துடன் தணிந்து ஒலித்தது.
“தயக்கம் ஏன், தந்தையே? சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்” யாழ் மிழற்றினாள் தேன் மொழியாள்.
“உன் விருப்பம் எதுவோ, அதை இதுவரை நான் மறுத்ததில்லை” மன்னன் மறுகினான்.
“ஆம், என் அருமைத் தந்தையே, அதற்கென்ன ஐயம்?” என்றாள் அந்த அரிய பைங்கிளி.
ஒரு கணம் தடுமாறி, பின் மறுகணம் சுதாரித்தான் அசுவபதி.
“உனக்குப் பொருத்தமானவன் என்று நீ தேர்ந்தெடுத்தவன் உன் மங்கள வாழ்வுக்குப் பொருத்தமானவனல்ல என்பதை அறிந்து என் உள்ளம் வாடுகிறது, என் பொன்மகளே!”
அதிர்ந்து நிற்பாளே தன் இனிய மகள் என்றெண்ணிக் கலங்கி நின்ற மன்னன், சற்றும் சலனமற்று புதிர்போல் அவள் நிற்பதைக் கண்டு வியப்புற்றான்.
“பொருத்தம் பற்றிய விருத்தம் பிறகு, தந்தையே… உங்கள் மனதை வருத்தும் விஷயம்தான் என்னவோ? உறுத்தலில்லாமல் சொல்லலாமே!”
முன் வைத்த காலை மேலும் ஓரடி முன்னே வைத்தான், வேந்தன். மனதைத் திடப்படுத்திக் கொண்டு, நாரத மகரிஷி தன்னிடம் கூறியதைத் தன் மகளிடம் கூறலுற்றான்.
ஒரு மனதில் ஒருமுகமாய்க் காக்கப்படவேண்டிய தேவ ரகசியம் ஆயுத எழுத்தின் வடிவம் கொண்டு மும்முனையில் தொக்கி நின்றது.
இலக்கற்று இழையோடிய மௌனத்தை இமைப்பொழுதில் தகர்த்தெரிந்தாள் அந்தத் தங்கப்பதுமை.
“வான்போல் மனம் படைத்த என் தந்தையே! மரமும் கல்லும் ஒருமுறை துண்டானால் மறுபடியும் சேர்வதில்லை. காதலும் ஈர்ப்பும் ஒருமுறை ஒருவர் மீது தோன்றினால் அது எக்காலும் பிரிவதில்லை.
அதுதான் காதல். அதுதான் கற்பு. அதுவே அதன் ஈர்ப்பு. மரபு வழியில்தான் மனம். மனம் சொல்லும் வழியில் நடப்பதுதான் உயர்ந்த குணம். மனங்கள் சொர்க்கத்தில் சந்தித்து நிச்சயிக்கப்பட்ட பிறகுதான் உருவங்களும் உடல்களும் புவியில் சந்திக்கின்றன. இது தாங்கள் அறியாததல்ல. எனவே, எவரை என் கணவராக நான் நிச்சயித்துவிட்டேனோ, எது எவ்வாறாயினும், அவரே என்னவர். இதுதான் என் இறுதி முடிவு. இதில் எவ்வகையிலும் மாற்றமில்லை. இதற்கு என் மனமே சான்று” என்று உறுதிபடத் தன் தந்தையின் கண்களைக் கனிவுடன் பார்த்துச் சொன்னாள், அந்தத் தங்கமகள்.
தொன்மையாய் விளங்கும் பாரம்பரிய மேன்மையைத் தன்மையாய்க் கொண்டு தன் இதயத்தின் கூற்றை மென்மையாய் எடுத்துரைத்த பெண்மையின் திருவுருவம் தன்னெதிரில் மகள் வடிவில் குலவிளக்காய் ஒளிவீசி நிற்பதைக் கண்டு பெருமிதமுற்றான், மன்னவன்.
நாரத மகரிஷி அசுவபதியிடம் கூறிய அந்த தேவ ரகசியம்தான் என்ன?
மத்ர நாட்டின் மன்னனாகிய அசுவபதிக்கு மகளாய்ப் பிறந்த சாவித்திரி பாரதத் திருநாட்டின் இதிகாச நாயகிகளில் ஒருத்தியாய்ப் போற்றப்படுவாள் என்பது தெய்வ சங்கல்பம். அதற்கு மூலகாரணமே இந்த தேவ ரகசியம்தானே!
அறவழி நடப்பவனாகவும், வாய்மையில் உறுதி கொண்டவனாகவும், புலன்களை வென்றவனாகவும், நாட்டு மக்கள் நலம் பேணி அவர்களின் அன்புக்கு உரியவனாகவும் பெருமதிப்புடன் திகழ்ந்த மத்ர நாட்டு மன்னன் அசுவபதிக்கும் அவனுக்கு ஈடான குணநலன்கள் கொண்ட அவன் மனைவிக்கும் புத்திர பாக்கியம் இல்லாதது ஒரு குறையாய் இருந்த காலத்தில் அவர்கள் சாவித்திரி மந்திரத்தை உச்சரித்து வேள்வி குண்டம் வளர்த்து யாகம் செய்வித்தார்கள். அடுத்த ஒன்பதாம் மாதத்தில் ஒரு பெண் மகவு தோன்றியது. தங்களுக்கு புத்திர பாக்கியத்தை அருளிய சாவித்திரி தேவியின் பெயரையே தம் குழந்தைக்கு இட்டனர் அரச தம்பதியினர்.
வானத்து நட்சத்திரம் ஒன்று பெண்ணுருவு கொண்டு பூமியில் நடமாடுவது போலிருந்தது சாவித்திரியின் ஒவ்வொரு அசைவும். நந்தவனத்தில் அவள் நடந்தால் மலர்களின் வண்ணமும் வாசமும் மெருகேறின. அவளைக் கண்டாலே பறவைகளின் கூவலில் குதூகலம் கூடியது. அவள் பிரசன்னத்தில் இசையின் இனிமை பெருகியது. அவளுடன் சேர்ந்து உணவுண்டால் ருசியின் தன்மை தேவாமிர்தமாய் மாறியது.
அவள் வளர்ந்து பருவ மங்கையாய் உருவெடுத்ததும் அவளுக்கேற்ற மணாளனைத் தேர்ந்தெடுக்கத் தலைப்பட்டான் அசுவபதி. தன் அருமை மகளின் சித்திரத்தையும் தன் கையொப்பமிட்ட ஓலைச்சுவடியையும் கொடுத்து அரண்மனைப் பண்டிதர்களைப் பல்வேறு நாடுகளுக்கு மரியாதையுடன் வீரர்கள் புடைசூழ அனுப்பி வைத்தான்.
தாய்நாடு திரும்பிய பண்டிதர்கள் சொன்ன சேதி கேட்ட அசுவபதி ஒருசேர ஆச்சரியமும் கவலையும் அடைந்தான். சாவித்திரியைப் பற்றி அறிந்தோர் அனைவரும் அவளை சாட்சாத் சாவித்திரி தேவியின் அம்சமாகவே கருதியதால் எவரும் அவளைப் பெண் கேட்கத் துணியவில்லை என்கிற உண்மை கேட்கப் பெருமிதமாய் இருந்தாலும் தந்தைக்கான பொறுப்பு அவனை அழுத்தியது.
இதற்கான தீர்வை ஆழ்ந்து யோசிக்கும்போது ஒரே வழிதான் புலப்பட்டது. மகளை அழைத்தான் மன்னன்.
“மகளாய் வந்து பிறந்த மஹாதேவியே, உனக்கு மணம் செய்விக்க வேண்டியது என் பொறுப்பாய் இருப்பினும், உனக்கேற்ற மணாளனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கிறேன்” என்று கூறி அதற்கான காரணத்தையும் அவளுக்குத் தெரியப்படுத்தினான்.
தந்தையின் வேண்டுகோளை ஏற்று மஹாபண்டிதர்களின் துணையுடன் உற்ற தோழியர் மூவர் மற்றும் சில வீரர்கள் புடைசூழ இளவேனிற்காலத்தின் ஒரு காலை நேரத்தில் புறப்பட்டுச் சென்றாள் அந்த நற்காரிகை.
நான்கு பருவங்கள் கடந்த பின்னர் முன்பனிக் காலத்தில் ஒருநாள் மாலையில் வந்து சேர்ந்தவளின் முகத்தில் நாணமும் மகிழ்ச்சியும் பொதிந்திருந்ததைக் கண்ட அசுவபதியும் அவன் மனைவியும் அகமகிழ்ந்தனர்.
“உனக்கு மாலையிடப்போகும் பாக்கியம் பெற்ற அந்த மணாளன் யார் மகளே?”
“சால்வ தேசத்து மன்னராகிய தியுமத்சேனரின் மகனாகிய சத்தியவானைக் கணவனாக வரிக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்”
மஹா பண்டிதர்கள் மற்றும் தோழியர் மூலம் ஏனைய விவரங்களைக் கேட்டறிந்த அசுவபதியும் அவன் மனைவியும், தம் மகள் மனம் குணம் ஒன்றான முல்லை என்பதையும் அவள் எப்பேர்ப்பட்ட மகோன்னதம் கொண்ட மாதரசி என்பதையும் அறிந்து ஈன்ற பொழுதிற் பெரிதுவந்தனர்.
சத்தியவான் சிறுவனாக இருக்கும்போதே இனம்புரியாத ஒரு நோயின் தாக்குதலில் பார்வையிழந்தவன் அவனது தந்தை சால்வ மன்னன் தியுமத்சேனன். இந்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நயவஞ்சகமாய் சால்வ நாட்டைக் கைப்பற்றினான், அண்டைநாட்டு அரசன். அவனிடமிருந்து தப்பித்து மனைவி மகனுடன் காட்டை அடைந்த தியுமத்சேனன் காலம் கனியும் வரை அங்கேயே வாழத் தலைப்பட்டான்.
காலம் கனிவது எப்போது, பறிபோன கண்பார்வை கிடைப்பது எப்போது, இழந்த நாட்டை மீட்பது எப்போது என்று அவன் கலங்கிப் பரிதவித்திருந்த காலத்தில்தான் அவர்கள் முன் தேவியின் திருவுருமாய்ப் பிரசன்னமானாள் தேவியின் மறுவுருவமான சாவித்திரி.
ஆம்! பொன்னும், பொருளும், பதவியும், புகழும் இன்ன பிறவும் தடையறாது கிடைக்க வேண்டும் என்ற ஆசையும் பற்றும் கொண்டு அலையும் மாந்தர் எங்கெங்கும் வியாபித்துள்ள நிலையில் இவை ஒரு பொருட்டல்ல, மலைபோல் உயர்ந்த மனமும் பனிபோல் உருகும் குணமும் கொண்டவனே என் வாழ்க்கைத்துணை என முடிவெடுத்து ஒரு பொற்றாமரையாய்ப் பூத்துக் குலுங்கும் மகளைப் பெற்ற அசுவபதியும் அவன் மனைவியும் எத்தனை பாக்கியசாலிகள்!
இப்படியாகத் தன் மகளின் மகத்துவத்தை எண்ணி அசுவபதி மகராஜன் மகிழ்ந்திருக்கும் ஒரு மாலைப் பொழுதில்தான் நாரத மகரிஷி அவனை அரண்மனை கொலுமண்டபத்தில் சந்தித்ததும், தன்னையும் மீறி அவனிடம் தேவ ரகசியத்தைப் பகிர்ந்ததும் நிகழ்ந்தது.
சத்தியவானே தான் மாலையிடப்போகும் மணாளன் என்பதை உறுதிபடத் தெரிவித்தத் தன் மகளின் பெருந்தன்மையைக் கண்டு பெருமிதம் கொண்டாலும் நாரத மகரிஷி சொன்ன தேவ ரகசியத்தை எண்ணி அசுவபதியின் மனம் அல்லலுற்றது.
“சத்தியவானின் ஆயுள் இன்னும் பனிரெண்டு மாதங்களே நீடிக்குமாம். என்னே அவலம்! மணம் முடித்த ஒரு வருடத்தில் என் மகள் கைம்பெண்ணாக வலம் வருவதை எப்படிக் காண்பேன், எவ்வாறு சகிப்பேன்!”
முன்பனிக் காலத்தின் பின் பகுதியில் வரும் தை அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள், திருதியை தினத்தன்று சால்வ நாட்டின் வடகோடியில் இருந்த அடர்ந்த காட்டிற்கு மனைவியுடன் சென்று தியுமத்சேனனைச் சந்தித்தான் அசுவபதி.
சாவித்திரி வந்து சென்ற இனிய தருணங்களை நினைவு கூர்ந்த தியுமத்சேனனும் அவன் மனைவியும் தங்கள் தயக்கத்தைத் தெரிவித்தனர்.
“சாவித்திரி எங்கள் மருமகளாய் வருவதற்கு நாங்கள் பூர்வ ஜென்மத்தில் பல புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். ஆயினும் பாருங்கள், ஒரு ஓலைக் குடிசை, மரவுறி, நியதிகளற்று கிடைத்ததை உண்ணும் நிலை. சத்தியவான் அனுதினமும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக்கொண்டு வருவான், காய் கனிகள் பறித்து வருவான். இதுதான் எங்கள் வாழ்க்கைத் தரம். இளவரசியாய் வலம் வரும் சாவித்திரி இங்கு வாழ்வது எங்ஙனம்?”
“எதுவும் பொருட்டல்ல. என் மகளின் விருப்பமே எங்கள் விருப்பம்” என்று கூறி, அவர்களைச் சமாதானப் படுத்தி விவாகத்துக்குச் சம்மதிக்க வைத்து விடை பெற்றார்கள் அசுவபதியும் அவன் மனைவியும்.
அடுத்து வந்த சுபமுகூர்த்த நாளன்று சாவித்திரியைக் கைபிடித்தான் சத்தியவான்.
சாவித்திரி மனைவியாக வந்தபின் இன்பம், ஆனந்தம், நிறைவு என்கிற வார்த்தைகளின் முழு அர்த்தத்தை இனிமையான அனுபவங்களுடன் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான் சத்தியவான்.
அவள் இருக்கும் இடத்தில் உலகத்தின் அனைத்து இன்பங்களும் இருந்தன.
வாழ்க்கை ரம்யமாகக் கடந்தது. ஆம், கடந்தது. கடப்பதுதானே வாழ்க்கை!
அந்த நாளும் வந்தது.
அந்த நாள் வருவதற்கு ஒரு மண்டலம் இருக்கும்போதே சாவித்திரி கடுமையான விரதங்களை மேற்கொள்ளத் துவங்கினாள்.
அத்தகைய விரதங்களுக்குக் காரணம் கேட்ட சத்தியவானையும் அவன் பெற்றோரையும் தான் நோன்பு ஏற்பதாகச் சொல்லிச் சமாளித்தாள்.
அந்த நாள்!
வழக்கம்போல் காலையில் கோடரியுடன் காட்டின் மற்றொரு பகுதிக்குப் புறப்பட்ட சத்தியவானை விளித்து, தானும் அவனுடன் வருவதாய்ச் சொன்னாள் சாவித்திரி.
வியப்புடன் அவளை நோக்கியவன், “அடர்ந்த காட்டுக்குள் நீ என்ன செய்வாய் பேதைப் பெண்ணே! உனக்கு ஏற்றதல்ல அவ்விடம்” என்றான்.
“நீங்கள் எவ்விடத்தில் இருப்பினும் எனக்கு ஏற்புடையதே அவ்விடம்” என்று கூறி பிடிவாதமாக அவனுடன் சென்றாள் சாவித்திரி.
காட்டில் சத்தியவான் விறகு வெட்டும் அழகைப் பார்த்து நின்றாள். அருகே பறவையினங்களின் இனிய கீதம் போன்ற ஓசைகளையும் தொலைவில் காட்டு விலங்குகளின் உறுமல்களையும் இன்னபிற சப்தங்களையும் கேட்டு நின்றாள். காலைப் பொழுது இளகி மதியப்பொழுதாய் மாறி உச்சியில் சூரியன் பிரகாசிப்பதைக் கவனித்து நின்றாள். அவனுக்கு ஆசை ஆசையாய் உணவு படைத்தாள். அவனுடைய வேண்டுகோளுக்கிணங்கத் தானும் உண்டாள்.
‘என்றென்றும் இவ்வாறே உன்னுடனே வாழ்ந்திட வேண்டும், என் மணாளனே’ என்று எண்ணி உருகி, அது நிறைவேறிடத் தன் குலதெய்வமாகிய சாவித்திரியை உளமாற வேண்டிக்கொண்டாள் மாதரசிகளுள் மாணிக்கமாகிய சாவித்திரி.
“பிறகு வெட்டலாம் விறகு… இப்போது சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாம்” என்றாள்.
“நீ என்னுடன் இருந்தால் வேலை நடக்குமா?” என்று குறும்புடன் புன்னகைத்தவாறே அவள் விருப்பத்துக்கிசைந்தான் சத்தியவான்.
அன்பே சிவமாய் அளவளாவுவதுமாய் கொஞ்சும் மொழியாய்க் குலாவுவதுமாய் மணித்துளிகள் கடந்தன.
அந்தி நேரம் நெருங்குவதற்கு ஒரு நாழிகைப் பொழுதிருக்கையில் “ஒரு பொதி விறகு வருமளவு வெட்டுகிறேன்” என்று ஒரு காய்ந்த மரத்தை வெட்டத் துவங்கினான் சத்தியவான்.
சற்று நேரத்தில் கோடரியைக் கீழே வீசினான்.
“தலை பாரமாய் கனக்கிறது, சாவித்திரி”
மறுபேச்சின்றி அவனருகில் சென்று அவனைத் தாங்கி அங்கேயே அமர்ந்து தன் மடியில் அவனைச் சாய்த்து அவன் தலையை வருடினாள் சாவித்திரி.
வந்தது அந்தி நேரம். இருள் கவ்வ ஆரம்பித்த அந்தத் தருணத்தில் தன் எதிரில் ஓர் உருவம் தென்படக் கண்டாள். தென் திசையிலிருந்து வந்த அந்த உருவம் செந்நிற ஆடை அணிந்து, தலையில் மகுடம் தரித்து, செக்கச்செவேல் என்று மின்னும் கண்களுடன் சத்தியவானை வெறித்து நோக்கியபடி நின்றது.
ஆம். எவர் கண்களுக்கும் புலப்படாத எமதர்மராஜன் சாவித்திரியின் கண்களுக்குக் காட்சியளித்தார்.
அறிந்தும் அறியாதவளாய்க் கேட்டாள்:
“தாங்கள் யாரோ, வந்தருளிய காரணம் என்னவோ?”
“மா தவம் இயற்றி மாதரசியாய்த் திகழும் மனிதருள் மாணிக்கமே. நான்தான் எமதர்மராஜன். உள்ளது உள்ளபடி உரைப்பது என் கடமை. காலத்தின் கட்டளையை அனுசரிப்பது என் தர்மம். உன் கணவனாகிய சத்தியவானின் ஆயுள் முடியப்போகும் தருணம் இது. அவன் உயிரைக் கவர்ந்து செல்லவே வந்துள்ளேன், அரியவளே”
“இதுபோன்ற காரியங்களைச் சிரமேற்கொண்டு செய்வது உங்கள் தூதர்கள்தானே! அவர்கள் வராமல், தாங்களே எழுந்தருளியுள்ளதன் காரணம்?”
“உன் கணவன் சத்தியவான் பெயருக்கேற்ப சத்தியம் தவறாத உத்தமன். அறநெறியாளன். இனிய வடிவினன், குணக்கடல், உயர்ந்த சிந்தனையும், நற்சித்தமும் கொண்டவன். அதற்கேற்றபடி தேவ மரியாதையுடன் அவனை அழைத்துச் செல்லுதலே தர்மமாகும். ஆகையால் நானே வந்துள்ளேன்”
“ஒஹோ, சரி, யார் கண்ணுக்கும் புலப்படாத தாங்கள் எனக்குக் காட்சியளித்ததற்கான காரணம் என்னவோ?”
“நீ ஒரு அருந்தவப் புதல்வி. சாவித்திரி தேவியின் அருளால் ஜனித்தவள். ரோகிணி நட்சத்திரமாய் உதித்தவள். ஆகவேதான் உன் முன் என் ப்ரசன்னம்”
இவ்வாறு கூறியபடி சத்தியவானின் ஜீவனை அவன் உடலினின்றும் பிரித்தெடுத்த எமதர்மராஜன் தெற்கு திசையை நோக்கி நகர்ந்தார்.
மனதில் துக்கம் மேலிட அவரைப் பின் தொடர்ந்தாள் சாவித்திரி. சற்று தூரம் சென்றபின் அவளைத் திரும்பிப் பார்த்தார் எமதர்மராஜன்
”பெண்ணே, நீ சென்று இறுதிச் சடங்குகளைச் செய்வாயாக” என்றார்.
“என் கணவன் எங்கு சென்றாலும் நான் அங்கு செல்வேன். அவர் உயிர் எங்கு செல்கிறதோ, நானும் அங்கு செல்வேன். இதுவே சனாதன தர்மம். தங்களது அருள் காரணமாக எனக்கு யாரும் எங்கும் தடைபோட முடியாது” தழுதழுப்பையும் மீறி பிடிவாதம் தொனித்தது சாவித்திரியின் குரலில்.
“உன்னுடைய குரலும் தர்க்கபூர்வமான மெய்ப்பாடும் என்னைக் கவர்ந்தன. உன் கணவனின் உயிர் நீங்கலாக நீ என்னிடம் ஒரு வரம் கேட்கலாம். கேட்டதைத் தருவேன்”
“நன்று. என் கணவனின் தந்தையாகிய என் மாமனார் காட்டில் வசிக்கிறார். கண்பார்வை இழந்து தவிக்கும் அவருக்குப் பார்வை கிடைக்க அருள்வீராக”
“இதோ, இப்போதே உன் மாமனார் கண்பார்வை பெறுவார். இப்போது திரும்பிச்செல். இல்லாவிடில் தளர்ந்து விடுவாய்”
“கணவரின் அருகாமையில் எனக்கேது தளர்ச்சி? அவரை எந்த இடத்திற்கு எடுத்துச் செல்கிறீர்களோ, அங்கேயே எனக்கோர் இடம் வேண்டும். அது மட்டுமல்ல, பெரியோரை சந்திப்பது விரும்பத்தக்கது. உங்கள் உறைவிடத்தில் பெரியோர் பலர் இருப்பர். அவர்களைக் காண்பது நலம் தரும்”
“நன்மங்கையே! நீ சொல்லிய நன்மொழிகள் மனதிற்கு உகந்தவையாக உள்ளன. அது அறிஞர்களின் அறிவையும் வளரச்செய்யும் தன்மை கொண்டவை. உனக்கு நான் மற்றொரு வரம் தர விழைகிறேன். உன் கணவன் உயிர் தவிர விரும்பியது கேள்”
“என் மாமனாருக்குக் கண்பார்வை கிடைக்க அருளிய தாங்கள் அவர் இழந்த ராஜ்ஜியம் அவருக்கு மீண்டும் கிடைக்க வரம் தருவீர்களாக. அறக்கட்டளைகளை செவ்வனே செய்யும் அவர் அரசாள வேண்டும்”
“அஃதும் உடனே நிறைவேறும். இப்போது திரும்பிச்செல் அரும்பிறப்பே”
“கணவன் உயிர் கவர்ந்து செல்லப்படும்போது திரும்பச் செல்வது என்னால் முடியாது தேவனே! நான் சொல்லியபடி மேலோர்களின் தொன்மையான அறவழிகளில் அன்பைப்பொழிவது, தானம் கொடுப்பது, தர்ம வழி நடப்பது ஆகியவையும் அடங்கும். அதை நேரில் காண விரும்பும் என் உள்ளக்கிடக்கை நியாயமானதுதானே!”
“பசும்பொன்னே, தாகம் கொண்டவருக்குத் தண்ணீர் கிடைத்தால் எப்படியிருக்குமோ அப்படி உள்ளது உன் வார்த்தைகள். மேலும் ஒரு வரம் தரச் சித்தமாயுள்ளேன். உன் கணவன் உயிர் தவிர எதைக் கேட்டாலும் தகும்”
“என் தந்தை அசுவபதி மன்னருக்கு நான் ஒருத்திதான் வாரிசு. அவருக்குப் புதல்வர்கள் உண்டாக வரம் அளிப்பீர்களாக”
“அவ்வண்ணமே ஆகுக. உன் ஆசை நிறைவேறியது அல்லவா? அதிகத் தொலைவு வந்து விட்டாய், மீண்டு செல், சொக்கத்தங்கத்துக்கு ஒப்பானவளே!”
“தொலைவா? அது ஏது எனக்கு. அவரருகில்தானே இருக்கிறேன்! தாங்கள் சூரியதேவனின் குமாரரல்லவா! உங்கள் தர்மமே தலைசிறந்த தர்மம். வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு தங்களுக்குக் கிடையாது. ஒரே நீதி, ஒரே தர்மம். ஆகவேதான் தங்களை தர்மராஜன் என்று அழைக்கிறார்கள். மனிதப்பிறப்பெடுத்த பலரும் மற்றோரின் சாதுரியத்தை தன்னிலும் மேலாகப் பார்க்கிறார்கள். தன்னை நம்புவதையும், தன் உள் மனம் சொல்வதைக் கேட்பதையும், உள் நோக்கித் திரும்புவதையும்தான் ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்று பெரியோர் கூறியுள்ளனர். அப்படிப்பட்ட, உங்களைப் போன்றே நீதியும் தர்மமும் தன்னுள் கொண்ட பெரியோரைப் பார்ப்பதே என் சித்தம்”
“அரும்பெரும் பொக்கிஷமே, இது போன்ற உன்னதமான வார்த்தைகளை உன்னிடமிருந்துதான் முதன்முறையாகக் கேட்கிறேன். மகிழ்ந்தேன். உனக்காக இப்போது மீண்டும் ஒரு வரம் தருவேன். உன் கணவன் உயிர் நீங்கலாக எதுவானாலும் கேள், என் மகளே!”
தன்னை ‘மகளே’ என்றழைத்த எமதர்மராஜனை ஏறெடுத்து தீர்க்கமாகப் பார்த்தாள் சாவித்திரி. தன் குலதெய்வமான சாவித்திரி தேவியை உளமாரத் துதித்தாள். பின் எமதர்மராஜனின் கண்களைச் சந்தித்தாள்.
கேட்டாள்:
“தர்மத்தின் தலைவரே! எனக்குப் புத்திரபாக்கியம் வேண்டும், சத்தியவான் மூலமாக”
எமதர்மராஜன் உடனே அருளினார்:
“நற்பண்புகளும், பேராற்றலும், தீர்க்காயுளும் நிறைந்த மக்கள் செல்வங்களைப் பெற்று மகிழ்வாயாக. ஆனந்தம் உண்டாகட்டும்”
மெய்சிலிர்த்தாள் சாவித்திரி.
“தாங்கள் என்னை ‘மகளே’ என்றழைத்தபோதே எனக்குத் தெரியும். தந்தை ஸ்தானத்தில் உள்ள எவரும் தன் மகள் மங்களமாய் வாழ்வதைத்தான் விரும்புவார்கள். உங்கள் சிந்தனை அறத்திலும் தர்மத்திலும் நிலை பெற்றுள்ளதால் இவ்வாறு அருளியுள்ளீர்கள். தாங்கள் அருளிய வாக்கு சத்தியமாகவும், வழங்கிய வரம் சாத்தியம் பெறவும் என் கணவர் உயிர் பெறுவது அவசியம் கொற்றவரே!”
உடனேயே சத்தியவானின் ஜீவனை பாசக்கயிற்றின் பிணைப்பிலிருந்து விடுவித்தார் எமதர்மராஜன். சாவித்திரியை நோக்கிப் புன்னகை புரிந்தவாறே ஆசீர்வதித்து மறைந்தார்.
அவரை வணங்கித் துதித்த சாவித்திரி தன் கணவன் உடல் கிடந்த இடத்துக்கு விரைந்தாள்.
அவன் தலையைத் தன் மடிமீது வைத்து எமதர்மராஜனின் வரங்களை மனதில் நினைத்தாள்.
சத்தியவானின் உடலில் உயிர்த்துடிப்பு ஏற்பட்டது. உறக்கத்திலிருந்து எழுவதுபோல் எழுந்து அமர்ந்தான்.
“இதென்ன சாவித்திரி, இவ்வளவு இருட்டிவிட்டதே, ரொம்பதான் தூங்கிவிட்டேனோ! என்னை ஏன் எழுப்பவில்லை? என்னைத் தூக்கிக் கொண்டு சென்ற அந்தக் கருப்பு உருவம் எங்கே?” என்ற கேள்விகளுடன் தன் மனையாளைப் பார்த்தான்.
“ஒரு தேவசிரேஷ்டர் இங்கு வந்திருந்தார். நம்மை ஆசீர்வதித்துவிட்டுத் தன் உலகுக்குப் போய்விட்டார். தலை பாரமாக உள்ளதென்று சொல்லி உறக்கத்திலிருந்த உங்களை எழுப்பவேண்டாமென்றிருந்தேன். வாருங்கள், போகலாம்” என்றபடி அவன் கரம் பற்றினாள்.
“தலை பாரமோ, சோர்வோ, எதுவும் இல்லை. என் உடலிலும் உள்ளத்திலும் ஒரு புத்துணர்ச்சி பரவியுள்ளது” என்றபடி எழுந்து நின்று அவள் கரம் பற்ற, அவளும் எழுந்தாள்.
இருவரும் நடந்தனர், இல்லம் நோக்கி.
காட்டைக் கடந்து மற்றொரு பகுதியில் அவர்கள் தங்கியிருந்த குடிசையை அடைந்தபோது கண்கள் ஒளிப்பிழம்புகள் போல் பிரகாசிக்க சத்தியவானின் தந்தையாகிய தியுமத்சேனன் அவர்களை எதிர்கொண்டழைத்தான். அவனும் அவனுடைய மனைவியும் மகிழ்வுடன் காணப்பட்டனர். அருகே கௌதம முனிவர் உட்பட சில முனிவர்கள் எழுந்தருளியிருந்தனர். குடிசையிலும் குடிசையைச் சுற்றிலும் ஏற்றப்பட்டிருந்த அகல்விளக்குகளின் ஒளியில் முகம் ஜொலிக்க, சத்தியவானின் தாய் சொன்னாள்:
“உன் தந்தை கண்பார்வை மீண்டும் கிடைக்கப் பெற்றார்”
அகமகிழ்ந்த சத்தியவான் தன் தந்தையை வணங்குகையில் அங்கிருந்த கௌதம முனிவர் சொல்லலாயினார்:
“உன் தந்தையிடமிருந்து அபகரித்த ராஜ்ஜியத்தை அவரிடம் ஒப்படைக்க அந்த அண்டை நாட்டு அரசன் சித்தமாயுள்ளான். தன்னை மன்னிக்கும்படியும் தங்கள் தயவு வேண்டியும் கதறித் துடிக்கிறான். அதைச் சொல்லவே நான் இங்கு வரலாயிற்று”
அவரை அனைவரும் வணங்கினர்.
அந்த அடர்ந்த கானகத்தின் நடுவில் அமைந்திருந்த அந்தக் குடிசை, முனிவர்களின் வரவால் குடிலாய் மாறியது. அங்கிருந்த அனைவரின் மனதிலும் குதூகலம் பரவிப் பொங்கியது.
“அதிகாலை சூரியோதயத்திற்கு முன் நாம் சால்வ நாடு நோக்கிப் புறப்பட வேண்டும்” எனக் கூறினார் கௌதம முனிவர்.
தியுமத்சேனனைக் கண்ட அண்டைநாட்டு மன்னன் ஓடிவந்து அவன் காலடியில் வீழ்ந்து கதறினான்.
“எளியாரை வலியார் என்று தன்னை நினைத்திருப்போர் வாட்டினால் அப்படிப்பட்ட ஈனப்பிறவிகளை தெய்வம் வாட்டும் என்பதைத் திட்டவட்டமாகப் புரிந்து தெளிந்தேன். உங்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறேன்” என்று கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டிய அவனை எழுப்பி ஆறுதல் சொன்னான் தியுமத்சேனன்.
சால்வ நாட்டு மன்னனாக தியுமத்சேனனுக்கு முடிசூட்டப்பட்டது. மக்கள் சத்யவானை இளவரசனாக முடிசூட்டினர்.
அடுத்த ஒன்பதாவது மாதத்தில் அசுவபதியின் மனைவியாகிய சாவித்திரியின் அன்னை ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அதற்கு அடுத்து மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கிய தினத்தன்று சத்தியவானின் மனையாள் சாவித்திரி ஒரு ஆண் மகவையும் ஒரு பெண் மகவையும் பெற்றெடுத்தாள்.
உயர்ந்த நற்பண்புகளும், உயரிய நல்லொழுக்கமும், உற்றோரால் விரும்பத்தக்க இயல்புகளையும் பெற்ற சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தது மட்டுமன்றி தன் மாமனார் குடும்பம் இருள் சூழ்ந்த பள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த வேளையில் அதைக் காப்பாற்றி, தன் பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறவும் காரணமாய் விளங்கினாள்.
மிகப்புனிதமான, சாவித்திரியின் வரலாற்றை மிகவும் ஆர்வத்துடன் கேட்பவர் யாவரும் தமது எல்லா விருப்பங்களும் நிறைவேறப் பெற்று மகிழ்வர் என்பது தெய்வ சங்கல்பம்.
அடுத்தது: விதுரன்
- மீண்டும் சந்திப்போம்

Leave a comment
Upload