
குமரெட்டியாபுரம் - தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமம். இங்குதான் இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை.
குமரெட்டியாபுரத்தில் அமைதியான முறையில் “எங்களை ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து காப்பாற்றுங்கள். அது கக்கும் நச்சுப் புகையால் எங்களையும், எங்கள் எதிர்கால சந்ததிகளையும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நாசகார ஸ்டெர்லைட்டின் இரண்டாவது விரிவாக்கத்திற்கு தயவு செய்து அனுமதி கொடுக்காதீர்கள்” என தமிழக அரசை நோக்கி மக்கள் எழுப்பிய கூக்குரலை மாவட்ட ஆட்சியர், அரசாங்கம், ஆளும் கட்சியினர் என எவரும் திரும்பிப் பார்க்கவில்லை. அப்படித் தொடர்ந்த ஒரு கண்டுகொள்ளா நிலையில்தான் 22 மே 2018, ஒரு சோகமயமான தினமாக விடிந்து, தீராத வேதனையில் போய் முடிந்து... தூத்துக்குடியையே ரத்தமயமாக்கிவிட்டது.
மே 22ம் தேதி சம்பவத்தில் ஆட்சியினர் நடத்திய கோர தாண்டவத்தை... காவல் துறையின் அட்டூழியத்தை அறிவதற்கு முன்னால் ஒரு ஃப்ளாஷ்பேக்!
குமரெட்டியாபுரம் பகுதியில் ஸ்டெர்லைட் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் முயற்சியில் அந்த பகுதியில் குடியிருப்பவர்களை வளைக்க திட்டமிட்டது, அந்நிறுவனம். அங்குள்ள மக்களின் நிலங்களுக்கு சந்தை விலையை விட கூடுதல் பணம் தருவதாகவும், மாற்று இடத்தில் சொந்தமாக வீடு தருவதாகவும் ஆசை காட்டியதில் சிலர் மயங்கிவிட்டனர். இதையொட்டி ஸ்டெர்லைட் சொந்தமாக்கிய நிலங்களில் ஆழ்குழாய் கிணறு பணி தொடங்கியபோது தான் பிரச்னையும் தொடங்கியது.

திரண்டது போராட்டக்களம்!
ஸ்டெர்லைட்டின் செயலை எதிர்த்து குமரெட்டியாபுரம் மக்கள், ஊரில் உள்ள வேப்ப மர நிழலில், தங்களது 100 நாள் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மீளவிட்டான், பண்டாரப்பட்டி, சில்வர்புரம், மடத்தூர் உட்பட்ட ஊர் மக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் மக்கள் உரிமை போராட்டத்தை ஆதரித்து பல தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சியினர் குமரெட்டியாபுரம் வரத்தொடங்கினர். மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல் கூட குமரெட்டியாபுரம் வந்து போராடும் மக்கள் மத்தியில் பேசினார். “நான் அரசியல் கட்சி தலைவனாக வரவில்லை.. கமல்ஹாசன் என்ற தனிமனித நிலையிலே வந்துள்ளேன். உங்கள் உணர்வுகளை ஒரு தமிழனாக மதிக்கின்றேன். உங்கள் வேதனையில் நானும் பங்கேற்கின்றேன்!” எனப் போராட்டத்தின் 42வது நாளில் அவர் நேரில் வந்து போராட்டம் வெற்றியடைய தன் வாழ்த்தினை தெரிவித்துச் சென்றார்.

ஆளும் கட்சியின் தொடர் பாராமுகம்!
இப்படி எதிர்க்கட்சிகளும், புதிய கட்சிகளும் கூட குமரெட்டியாபுரம் வந்தன. ஆனால் ஆளும் அ.தி.மு.க அரசோ தூத்துக்குடி என்ற ஒரு மாவட்டம் இருப்பது போலவே தெரியாத அலட்சியத்துடன் பாராமுகமாகவே இருந்தது.
மக்கள் வரிப்பணத்தில் மாவட்டம்தோறும் முதலமைச்சரும், இணையமைச்சரும், அமைச்சர்களும் கூட்டாக விழாக்களில் பங்கேற்று 'இது அம்மா ஆட்சி, அம்மா வழியில் நடக்கிறோம்' என்ற பிரச்சாரத்துக்கு மத்தியில் 'உயிர்வாழ உரிமை தாருங்கள்' என்ற அபயக்குரலை ஆட்சியாளர்கள் கேட்கவே இல்லை.
100ம் நாள் அறிவிப்பு ஏற்படுத்திய முதல் அதிர்வு!
போராட்டத்தின் நாட்கள் இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்திய 100ம் நாள் போராட்ட அறிவிப்புதான் முதல் அதிர்வு! முதலில் ஐநூறு, ஆயிரம் என கூடிய மக்கள் கூட்டம் மெல்லப் பெருகி சில ஆயிரங்களை தொட்டது. மாவட்டத்திற்கு வெளியேவும் உள்ளேயும் சில பல புதிய அன்னிய சக்திகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரத் தொடங்கின. குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் உள்ளே வந்தவர்கள் மக்களை ஆவேசம் கொள்ள வைத்தார்கள். அதன் விளைவாகத்தான் பெண்கள் வீராவேசமாக கூட்டங்களில் பேசத்தொடங்கியதும்!
இதனைத் தொடர்ந்து “போராட்டத்தின் 100-வது தினமான மே-22ம் தேதி தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு’ என கண்டனக் குரலோடு புகார் மனுவை ஆட்சியர் வெங்கடேசிடம் கொடுக்க இருக்கின்றோம். இதற்கு அனைத்து பிரிவினரும் ஆதரவு தாருங்கள்” என கோரிக்கையும் வைத்தனர் ஊர் மக்கள்.
மக்கள் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட தினமான மே -22ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுமையும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் போராட்டக்காரர்களை சந்தித்து பேச முன்வராதது மட்டும் அல்ல இதுகுறித்து... எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை.
தெளிவற்ற திடீர் 144 உத்தரவு!
குறிப்பிட்ட தினமான மே 22-ம் தேதிக்கு முன்தினம் மாலையே விழித்தது மாவட்ட ஆட்சியர அலுவலகம்! மே 21 இரவு 10.00 மணி முதல் 23ம்தேதி இரவு 10 மணிவரை 144 தடை உத்தரவை திடீரென மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதற்குப் பின்னணியில் இருந்தது கூட ஸ்டெர்லைட்டின் கோரிக்கைதான் என ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு ஆதாரத்தோடு தெரிவித்தது. நீதிமன்ற வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனம் வைத்த அழுத்தமான கோரிக்கை அது... “22-ம் தேதி போராட்டத்தை தடைசெய்ய 144 தடை உத்தரவை போடுங்கள்” என்ற ஸ்டெர்லைட் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் தன் கடமையாக ஏற்று திடீரென 144 தடை உத்தரவை பிறப்பித்தது என இந்த அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
இந்த 144 தடை உத்தரவிலும் தெளிவான விவரங்கள் இருக்கவில்லை. அதாவது, “மாதா கோயிலில் நின்று போராட்டக்காரர்கள் போராடலாம். அவர்களே ஐநூறு அடி தூரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வந்து போராடினால் அது போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஊரடங்கு உத்தரவின் கீழ் வரும்! அங்கு கூடுதல் குற்றம்” என்பது போன்ற குழப்பங்கள் இருந்தன.

அந்த கறுப்பு தினம்!
மே 22 காலை பத்து மணியளவு....தூத்துக்குடி புனித பனிமாதா தேவாலயத்தில் கூடிய போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி தம் ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே காவல்துறையினர் பாதைகளில் பல்வேறு தடுப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். மக்கள் அந்த தடுப்புக்களை தாண்டி கூட்டமாகவே முன்னேறினர்.
ஊர்வலம் வி.வி.டி சிக்னல் பகுதியை நெருங்கிய இடத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் தலைமையிலான காவல்துறையினர் ஊர்வலத்தை முழுமையாக தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது! காவல்துறை உடனே தடியடி நடத்தியதும் நிலைமை கலவரமாகியது. நாலாப்பக்கமும் சிதறி ஓடிய மக்கள் சாலை ஓரத்தில் கிடந்த கற்களை எடுத்து காவல்துறையை நோக்கி வீசினர். பதிலுக்கு காவல்துறையும் கல்வீச்சில் ஈடுபடத் துவங்க நிலைமை தலைகீழாக மாறி...அந்த இடமே கலவர பூமியாக உருமாறத் தொடங்கியது!

தள்ளு முள்ளுக்கு பிறகும் முன்னேறிய கூட்டம்!
இதன் பிறகும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அடங்கிய ஊர்வலத்தின் ஒரு பகுதியினர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். ஆட்சியர் வளாகத்தை நெருங்கியதும், ஊர்வலத்தின் முன்னால் நின்ற பெண்கள் முண்டி அடித்துக்கொண்டு ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் தலைமை வாசலை நெருங்கிவிட்டனர். அங்கு சீருடையிலும், சீருடை அணியாத எண்ணிக்கையிலும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். சீருடை அணியாதவர்கள் கையில் காணப்பட்ட கைத்துப்பாக்கியே அவர்களை, காவலர்கள் என அடையாளம் காட்டியது.
பல்லாயிரக் கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியதும் காவல்துறையினர் அங்கு தடியடி நடத்தியதும் ஆத்திரமடைந்தனர் மக்கள். இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஸ்டெர்லைட் பணியாளர்கள் குடியிருப்பு மீதும் போராடிய மக்கள் கூட்டத்தினர் கற்களை வீசினர். இதில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. சிலவற்றில் தீயும் பற்றிக்கொண்டது. நிலைமை கட்டுக்கடங்காத நிலையில் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியவர்கள், ‘காவல்துறை அதிகாரியிடமும் ஆட்சியரிடமும் மனு கொடுக்க வேண்டும் எங்களில் சிலரை மட்டும் அனுமதியுங்கள்’ என கோரிக்கை வைத்தனர். அப்போதுதான், ‘ஆட்சியர் அந்த பொழுதில் அலுவலகத்திலேயே இல்லை' என்ற அந்த சிதம்பர ரகசியத்தை சொன்னார் அங்கிருந்த காவல்துறை அதிகாரி.
வாயில் சுடப்பட்ட முதல் குண்டு!
போராட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் மத்திய மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர், ஸ்டெர்லைட் நிர்வாகம், காவல்துறை போன்றவற்றிற்கு எதிராக தொடர்ந்து ஆவேசமாக கோஷம் போட்டு வந்தனர். இந்நிலையில்.. வெனிஸ்டா (17 ) என்ற இளம் பெண் வாயில் திடீரென சுட்டது காவல்துறை. (சுட்டவர் சீருடை அணியாத காவலர்). சம்பவ இடத்திலேயே அந்த இளம் பெண் ரத்தம் சொட்டச் சொட்ட துடிதுடித்து விழுந்தாள்.
இதனை திகைப்போடு பார்த்த கூட்டம் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சிதறி ஓடியது. அதன்பின் நடந்தது தான் உலகுக்கே தெரியும்...! அரசு தந்துள்ள கணக்குப்படி 13 பேர் துப்பாகிச்சூட்டில் பலியாகினர். ஐம்பது பேருக்கு மேல் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தமாகவே ஒரு மக்கள் படுகொலை எனும் கோர சம்பவம் மடமடவென நடந்தேறி தூத்துக்குடியே ரத்தமயமாகி அதிர்ச்சியில் உறைந்தது!
மக்கள் எழுப்பும் கேள்விகள்!
இதில் எழும் கேள்விகள்.. துப்பாக்கி சூடு நடத்தும் முன் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை? திட்டமிட்டு துப்பாக்கிக் குண்டு மார்பில் பாய்ச்சப்பட்டு அனைவரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பொது இடத்தில் காவல்துறை வாகனத்தின் மீது நின்றுகொண்டு காவலர் ராஜா திலீப் சுட்ட காட்சியினை பகிரங்கமாகவே மக்கள் கண்டிருக்கிறார்கள்....

அவரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 6 நபர்கள் எனவும், இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதற்கும் அவர் பயன்படுத்திய ராணுவ துப்பாக்கியே சாட்சி எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இலக்கு தவறக்கூடாது என்பதற்காகவே ஸ்னைப்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்னைப்பர் 7.2 எம்.எம்.துப்பாக்கி இந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3800 மீட்டர் இலக்கை தாங்கிக் கொல்லும். இதனைக் கொண்டு ஆப்டிகல் சைட் 1300 மீட்டர், ஓப்பன் சைட் 1200 மீட்டர், 1300 மீட்டரில் (1.3 கிலோ மீட்டர் வரை) ஒரு இம்மியளவு கூட குறி தப்பாமல் சுடலாம். மக்கள் போராட்டத்தை கலவரமாக்கி கலைக்க எதற்காக ஸ்னைப்பர் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே தூத்துக்குடி மக்களும் போராட்டக்காரர்களும் வைக்கும் முக்கியமான கேள்வி.

ஆளும் தரப்பின் ஸ்டெர்லைட் விசுவாசமா?
இலக்கு தவறாமல் மிகச் சரியாக சுடக்கூடிய காவலர் ராஜா திலிப்பால் மக்களை பயமுறுத்தும் நோக்கில் கூட்டத்தினரின் கால்களை நோக்கி சுட்டிருக்க முடியாதா? அப்படி ஏன் அவர் செய்யவில்லை? சுட்டுக் கொல்லப்பட்ட அனைவர் நெஞ்சிலும்தானே குண்டு பாய்ந்து உள்ளது? ஸ்டெர்லைட் கொடுத்த பட்டியலில் இருந்தவர்கள் (கடந்த சில ஆண்டுகளாக போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள்) குறிப்பாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனரே?!. இதுதான் அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் ஸ்டெர்லைட்டிடம் வாங்கிய கைக்கூலிக்கு உண்மையாக பணியாற்றிய விசுவாசமா?!” போன்ற பல கேள்விகளையும் தூத்துக்குடி மக்கள் எழுப்புகின்றனர்.
ஈழத்தை விட கொடுமை!
முதல் தினத்தில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் மருத்துவமனையில் காயங்களுடன் 65 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் சொல்லப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் வந்து பார்க்க முயன்றபோது காவல்துறை அவர்களை அனுமதிக்க மறுத்தது. 2-ம் நாள் முரளிதரன் என்ற இளைஞரை சுட்டுக் கொன்று நட்ட நடு வீதியில் அவரது உயிறற்ற உடலை காவலர்கள் சாலையில் இழுத்து வந்தது ஈழத்தில் கண்ட காட்சியை விடவும் கொடூரமாக இருந்தது.

பின்னணியில் மத்திய அரசா?
“காவல்துறை தாக்குதலில் தூத்துக்குடியே அச்சத்தில் இருக்கும் நிலையில் மத்திய அரசின் உள்துறை தமிழக அரசிடம் ‘ராணுவ பாதுகாப்பு படையை வேண்டுமானால் தமிழகத்திற்கு அனுப்பட்டுமா?’ என்று கேட்டு இருப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக இருக்கிறது. மத்திய அரசின் நோக்கம் இதில் தெளிவாகத் தெரிகிறது!” என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்று 25ம் தேதி வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 13. இத்தனை பேர் மரணமடைந்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பதே இங்குள்ள மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.
வந்தவர்கள் வழக்கில் சிக்கினார்கள்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கமல், திருநாவுக்கரசு, வைகோ, திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்து பார்வையிட்டு அரசின் செயலையும் காவல்துறையையும் கண்டித்தனர். இதில் ஸ்டாலின் “நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்” என செய்தியாளர் மத்தியில் தெரிவித்த நிலையில் தூத்துக்குடி காவல்துறை இவர்கள் அனைவர் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.
காவல் துறையின் ரத்த வெறியாட்டத்திற்கு பிறகு, குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இணைய வழி தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அநீதிச் செயல் அந்த மூன்று மாவட்ட மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அநீதிக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களின் குரல்வளையை நெறிக்கும் இக்கொடூர செயல் மூலம் தமிழக அரசு மக்களை பயப்படுத்தவே நினைக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
இத்தனை நடந்த பிறகும் ஸ்டெர்லைட் தரப்பில் தாங்கள் எது பற்றியும் கவலை கொள்ளவில்லை என்றும், தாங்களே கூட மின் உற்பத்தியை சுயமாக செய்து கொண்டு மீண்டும் காப்பர் உற்பத்தியை தொடர்வோம் என்றும் துணிவோடு பேட்டி தரும் சூழ்நிலைதான் தமிழகத்தில் இன்று நீடிக்கிறது. இதை விட மேலான கொடுமையும், வேடிக்கை பார்க்கும் அவலமான ஒரு கையாலாகாத அரசும் வேறு எங்காவது இருக்குமா என்ன?!

"நானே டி.வி. பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்!"
நடந்த சம்பவங்கள் மாநிலமெங்கிலும் அனைவரையும் கொதிப்படையவும் வேதனையடையவும் செய்திருக்க.. சம்பவம் நடந்த முப்பத்தாறு மணி நேரத்திற்கு பிறகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களை சந்தித்தார். மிக மிக சம்பிரதாயமான முறையில், “துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.. வேறு வழியின்றி கூட்டத்தினரை அடக்க செய்ய வேண்டியதாயிற்று!” என்றவரிடம் நிருபர்கள் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு திணற அடித்தனர். ஒரு கட்டத்தில் பதில் சொல்லத் தெரியாது விழித்த முதல்வர், “நானே நடந்த சம்பவத்தை டி.வி. பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன்” என்று சொல்லிவிட.. நிருபர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் கடும் அதிர்ச்சி. அப்படியெனில் நடந்த சம்பவங்களை காவல் துறையினரே தனிப்பட்ட முறையில் நடத்திவிட்டனரா? எனில் அவர்களின் பின்னணியில் இருந்தது மத்திய அரசா? மாநில அரசுக்கும் கூட சொல்லாமல் உளவுத்துறையும் காவல் துறையும் முடுக்கிவிடப்பட்டதா போன்ற பல கேள்விகளுக்கும் இன்று வரை விடையில்லை.

Leave a comment
Upload