தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் மதன்

20180425202556713.png


எல்மதன் விஜயநாதன், மதுரை.


கேள்வி: மறுஜென்மம் என்பது உண்டா?

பதில்: போன ஜென்மம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இருக்காது. அதுமாதிரிதான் மறுஜென்மும். அரிதாக சிலர் போனஜென்ம நிகழ்ச்சிகளை நினைவு கூர்கிறார்கள். போனஜென்மத்தில் ஜெய்ப்பூரில் ஒரு சந்தில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் வசித்தேன் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் இதெல்லாம் செட்டப் என்று ஒதுக்குகிறார்கள். மொத்தத்தில் மறுஜென்மம் என்பது மத அடிப்படையிலான ஒரு நம்பிக்கை. நிரூபணமாகவில்லை. உலகின் ஜனத்தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்படியென்றால் ‘போன ஜென்மம்’ என்பதே இல்லாமல் புது மனிதர்கள் பிறக்கிறார்களா? கோடான கோடி விந்தணுக்களில் ஒரே ஒரு விந்தணுதான் மனிதன். அவன் பிறகு வளர்கிறான், வாழ்கிறான், மடிந்து போய் சூன்யத்தில் கலந்து விடுகிறான். அகண்டவெளியில், பூமியில், மனிதனின் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நிகழ்கிற வாழ்க்கைதான் குறிப்பிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை. அது முடிந்தபின்... அத்தோடு சரி!


20180425203652338.jpg 20180425210910241.jpg
கே.தத்தாத்ரேயன், சேலம்


கேள்வி: ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் காஞ்சி மகா பெரியவர் வரை பார்க்கும்போது, கடவுள் இருப்பதை ஒப்புக்கொள்ளாத்தான் மனம் நினைக்கிறது... கடவுள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த மகான்கள் பொய் சொல்வார்களா என்ன?

பதில்: பொய் சொல்ல மாட்டார்கள்தான். ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிற அப்பாவி மகான்கள் அவர்கள் என்பது நாத்திகர்களின் வாதம்.


20180425211002512.png2018042521095437.png
நந்தினி கணேஷ், சென்னை.


கேள்வி: மரங்களில் உங்களைக் கவர்ந்த மரம் எது?

பதில்: விழுதுகளுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் ஆலமரம் என்று சொல்லலாம் என்று பார்த்தால் அதை முந்திக்கொண்டு தன்னை முழுமையாக நமக்கு அர்ப்பணிக்கும் வாழை மரம் நினைவுக்கு வருகிறது. வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் மனிதன் பயன்படுத்துவது ஒரு ஆச்சர்யம்!



எம். கோபாலகிருஷ்ணன், குன்னக்குடி.


கேள்வி: ராஜராஜ சோழன், கிருஷ்ணதேவராயர், சிவாஜி - இந்த மன்னர்களை ஒப்பிட முடியுமா? இவர்களது தனித்தன்மை பற்றி...?

பதில்: ராஜராஜ சோழன் எப்படி தோற்றமளித்தார் என்பது பற்றிய குறிப்புகள் நம்மிடையே இல்லை. ஆனால் தஞ்சை பெரிய கோயில் மாதிரி ஒரு அற்புதத்தை கட்டியவர் எப்பேர்ப்பட்ட மன்னராக இருக்க வேண்டும்! கிருஷ்ணதேவராயர் எப்படி தோற்றமளித்தார் என்பது பற்றி போர்ச்சுகல் நாட்டு தூதுவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். நல்ல உயரம். சற்றே அம்மை வடுக்கள் நிறைந்த முகம். கம்பீரமான தோற்றம். முழங்கால் வரை நீண்ட நெடிய கரங்கள். மாலை நேரத்தில் மல்யுத்தத்தை ரசிப்பார். திடீரென களத்தில் இறங்கி சாம்பியனுடன் மல்யுத்தம் புரிவார் (ஜெயித்தாரா என்று தகவலில்லை) ராயர் மாதிரி சிவாஜி உயரம் கிடையாது. ஜாக்கிசான் மாதிரி உடலமைப்பு. கொரில்லா தாக்குதலில் கில்லாடி. மொகலாயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய சூரர். கிருஷ்ணதேவராயரும், சிவாஜியும் இல்லாமல் போயிருந்தால் இந்தியா முஸ்லீம் நாடாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்!



காயத்ரி, சேலம்.


கேள்வி: இந்திய மாநிலங்களை 30 நாடுகளாக மாற்றவேண்டும் என தா.பாண்டியன் கூறுகிறாரே?

பதில்: என்னைக் கேட்டால் கோயமுத்தூர், மதுரை, திருச்சி, கடலூர் - இவைகளையும் தனி நாடுகளாக மாற்றலாம். தமிழ்நாட்டுக்குள்ளேயே எத்தனை விதமான பிரதமர்கள் ஆட்சிபுரிவார்கள்?!



மாணிக்கவாசகம், கன்னியாகுமரி.


கேள்வி: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்ற அந்தக் கால பழமொழி இன்றைய வாட்ஸப் உலகில் கச்சிதமாக பொருந்துகிறதே...?

பதில்: பழமொழிகள் எப்போதுமே, எந்த இடத்திலும் பொருந்தும். அழகான வேலைக்காரி முதுகில் வண்டு ஒன்று உட்காருகிறது.. அதை நீங்கள் தட்டிவிடுகிறீர்கள். தட்டும்போது மட்டும் மனைவி பார்த்துவிடுகிறார். தப்பாக எடுத்துக் கொள்ளலாமா? தீர விசாரிக்க வேண்டாமா?!


2018042520391866.jpg
ஜெயகுமார், ஊத்துக்கோட்டை.


கேள்வி: நேற்று கட்சி ஆரம்பித்து இன்னமும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத கமல், தன் தலைமையில் அனைத்துக் கட்சி காவிரி கூட்டம் கூட்டுவது தமாஷாக இல்லையா?

பதில்: பெரியார் தேர்தலையே சந்திக்கவில்லை. கட்சி நடத்தி பெருந்தலைவராக இல்லையா? தேர்தல் என்பது அரசியலில் ஒரு பகுதிதான். கமல் காவிரி கூட்டம் நடத்துவது தேர்தலை நோக்கிய ஒரு பயணம்தான். என்.டி.ஆர். மாதிரி எடுத்த எடுப்பில் தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன சொல்வீர்கள்?



ரவிச்சந்திரன், கும்பகோணம்.


கேள்வி: குமாரசாமி வந்தாச்சு, காவிரி தண்ணீர் வருமா?

பதில்: குமாரசாமி, முனுசாமி, கோபால்சாமி யார் வந்தாலும் காவிரி தகராறு பிடித்த விஷயமாகத்தான் இருக்கும். ரொம்ப ஆசைப்படாதீர்கள்.


20180425204015942.jpg
தமிழ்ச்செல்வி, சிதம்பரம்.


கேள்வி: உலகில் மிகச் சிறந்த உணவு எது?

பதில்: என்னைக் கேட்டால் பழங்கள்தான் சிறந்த உணவு. ரெடிமேட்!



ராமதுரை, திருவெற்றியூர்.


கேள்வி: அரசியல்வாதிகளும், சில பெரும் பணக்காரர்களும் எப்பொழுதும் வெள்ளை உடை அணிவதேன்?

பதில்: வெள்ளை உடை தூய்மையானது. சிம்பிளானது. கலர் உடைகள் அணிவதையெல்லாம் கடந்த நிலைக்குப் போக தூய்மையான வெள்ளை உடையை அணிந்து தலைவர் மக்களுக்கு தொண்டு செய்யப் புறப்பட்டுவிட்டதாக அர்த்தம். சன்யாசிகள் காவி உடை அணிவதைப் போல அது!



ஸ்ரீதர், செம்பரம்பாக்கம்.


கேள்வி: கையாலாகாத, சட்டம் ஒழுங்கை சரிவர பராமரிக்க இயலாத இந்த தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டாமா?

பதில்: ஜனநாயகத்தில் எந்த கூத்து வேண்டுமானாலும் நடக்கும். லல்லு பிரசாத் மனைவி ஆட்சி செய்யவில்லையா? இங்கே எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஆட்சி புரியவில்லையா? மத்திய அரசு சிவப்புக் கொடி காட்டும் வரை ஆட்சியில் இருக்கும் ஒரு தற்காலிக அரசுதான் இது. தூத்துக்குடியில் ஜாலியன்வாலாபாக் ஸ்டைலில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. என்ன ஆட்சி இது?!


20180425204129184.jpg
சிவசண்முகம், வேலூர்.


கேள்வி: காது கேட்கவில்லையென்றால் ‘ஸ்பீக்கர் அவுட்டா?!’ என்று கேட்கிறார்கள். காது என்பது ‘ஒலிவாங்கி’தானே? பிறகேன் அதனை ‘ஒலிபெருக்கி’ என்கிற அர்தத்தில் கேட்கிறார்கள்?

பதில்: காது வெளியிலிருந்து ஒலியை வாங்கி மூளைக்கு ஸ்பீக்கர் மூலம்தானே அனுப்புகிறது?! அதான்!



நடேசன், சிவகங்கை.

கேள்வி: ‘ஜெயலலிதா இன்று இல்லையே!’ என்பதை தமிழக மக்கள் அனைவரும் மனதார உணர்கிறார்கள். நீங்களும் அப்படித்தானா?

பதில்: சிலர் அண்ணா ஆட்சி இல்லையே என்பார்கள். சிலர் கர்ம வீரர் காமராஜ் ஆட்சி இல்லையே என்பார்கள். ஏன்? சிலர் பிரிட்டிஷ் ஆட்சி இல்லையே என்றுகூட வருத்தப்படலாம். இருப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு. உங்களுக்கும் தேவை!



செந்தில்குமார், அண்ணாநகர், சென்னை.


கேள்வி: ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்று சொல்வது ரீல்தானே?

பதில்: ரீல்தான். அது புராணக் கதை. ஆண் குரங்கிலிருந்தும், பெண் குரங்கிலிருந்தும் வந்தவர்கள்தான் நாம். ஆணின் (Penile Bone) உறுப்பில் இருந்த எலும்பிலிருந்து உருவானவள்தான் பெண் என்று சுவையான தகவலை ஒரு புத்தகத்தில் படித்தேன். ஏனென்றால், எல்லா விலங்குகளுக்கும் ஆணுறுப்பில் ஒரு சிறு எலும்பு உண்டு. அதாவது கூடலுக்காக உறுப்பு விரைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது. மனிதனின் உறுப்பில் அந்த எலும்பு கிடையாது. எங்கே போச்சு? பெண்ணைப் படைப்பதற்காக அதைக் கடவுள் எடுத்துக் கொண்டு போய்விட்டார் என்பது ஒரு நவீன ‘புராண’ கதை! உண்மையில் அந்த எலும்பு இல்லாமலேயே விறைத்துக் கொள்ளும் திறன் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பெற்றது ஒரு அபூர்வமான விஷயம்!



ஜாகீர் உசைன், செங்கல்பட்டு.


கேள்வி: தூத்துக்குடி...?!

பதில்: சுருக்கமாக ‘முத்துக்குளிக்க வாரீகளா?’ என்பது போய் ‘தோட்டாவை சந்திக்க வாரீகளா?’ என்று ஆகிப்போனது கொடுமை!


20180425210123930.jpg2018042521014276.jpg20180425210159693.jpg20180425210215636.jpg
லஷ்மி, சிந்தாதிரிப்பேட்டை.


கேள்வி: முன்பெல்லாம் இந்திய அரசியல் தலைவர்களில் நீங்கள் கார்ட்டூன் போட ஏதுவாக நிறைய முகங்கள் இருந்தது. (உதாரணம் - ஜெகஜீவன்ராம், (இந்திராவை தோற்கடித்த) ராஜ்நாராயண், சரண்சிங் போன்றோர்) இப்போது கார்ட்டூனுக்கு ஏற்ற Funny Faces யார் யார்?

பதில்: யாருமில்லை என்பது வருத்தமான விஷயம். அந்தத் தலைவர்களெல்லாம் இல்லாதது கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு பெரிய இழப்பு. கார்ட்டூனுக்கு ஏற்ப எத்தனை வித்தியாசமான முகங்கள்! ஏதோ ராகுல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக Funny ஆகிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்!



முத்துப்பாண்டி, காஞ்சீபுரம்.


கேள்வி: அழகான கிரிக்கெட் விளையாட்டை கெட்டு குட்டிச்சுவராக்கியது இந்த T20 என்கிறேன். உங்கள் கருத்து...?

பதில்: பத்து பேர். ஆளுக்கு ஒரே ஒரு ஓவர். அதில் சிக்ஸர்கள் அடித்து ஜெயிக்க வேண்டும். எதிர்காலத்தில் கிரிக்கெட் இப்படி மாறும். அப்போது ‘இப்படி மாற்றி அழகான T20யை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்களே!’ என்று புலம்புவீர்களா. நடக்கப்போகிறது பாருங்கள்!