
“என்ன பாஸ்! நான் வந்தது கூட தெரியாமல் எதையோ பறிகொடுத்தவர் போல உட்கார்ந்திருக்கிறீங்க!
துப்பாக்கி சூடு நிகழ்ச்சியின் அதிர்ச்சியா...?”
“அப்படித்தான் ஷெர்லக்! 13 பேர் மரணம் என்பது கொடுமை!”
“தூத்துக்குடி பக்கம் இன்னமும் பரபரப்பு ஓயவில்லை, இதற்குமேல் ஸ்டெர்லைட் ஆலையை நடத்துவது எல்லாம் முடியாது! தூத்துக்குடியில் அரசியல்வாதிகளிடையே சில செய்திகள் அதிர்ச்சியுடன் பேசப்படுகிறது. அந்த துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு டெல்லியில் ஒரு சந்திப்பு நடந்ததாம்!”
“என்ன அது மர்மம்?”
“மின்சார பற்றாக்குறையை தவிர்க்க நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய பேச்சுவார்த்தைகள் டெல்லியில் நடந்தன. தமிழக அமைச்சர் ஒருவர் இதற்கான பேச்சுவார்த்தையில் இருந்தார். ஸ்டெர்லைட் தொடர்புடைய வேதாந்தா நிறுவனம்தான் இந்த நிலக்கரி இறக்குமதியிலும் சம்பந்தப்பட்டவர்கள்! ‘நாங்கள் நிலக்கரி விஷயத்தில் உதவுகிறோம்.. ஸ்டெர்லைட் போராட்டத்தை நிறுத்த ஏதாவது செய்ய மாட்டீர்களா?’ என்று பேசப்பட்டதாம்.. இந்த சந்திப்பு நடந்து மூன்றாவது நாள் துப்பாக்கி சூடு...!”
“அப்படியா?”
“அதுமட்டுமல்ல.. துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் பன்னிரண்டு பேர் சில நாட்களுக்கு முன்பு, இப்போது மாற்றப்பட்டாரே அந்த மாவட்ட கலெக்டருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்களாம்!”

“மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறதே!”
“இருக்கலாம்! கலெக்டரும் ஆந்திராகாரர்.. அந்த போலீஸாரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்..
எதேச்சையாக குரூப் போட்டோ எடுத்திருக்கலாம்!”
“நடந்த துப்பாக்கி சூடு பயங்கரமானதே! நீர் அடுத்த தகவலுக்கு போகலாம்!”
“இப்போது கர்நாடகாவில் கவனிக்கப்படுகிற அரசியல்வாதி யார் தெரியுமா? டி.கே.சிவகுமார்! இவர் எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சர் அவையில் இடம்பெற்றிருந்தார். கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர். எடியூரப்பாவின் எல்லா முயற்சிகளையும் முறியடித்தவர் இவர்.”
“ஓ!”
“ராஜ்யசபா தேர்தலில் குஜராத்திலிருந்து காங்கிரஸ் தலைவர் அகமது படேல் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவு இருக்கிறதா? இவரை எப்படியவது தோற்கடிக்க பி.ஜே.பி. முயன்றது. அப்போது 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் பாதுகாப்பாக கர்நாடகாவில் தங்க வைத்தவர்தான் இந்த சிவகுமார்! அகமது படேல் வெற்றிக்கு இவரே காரணம்! அதை அடுத்து இவர் வீட்டில் வருமான வரி ரெய்டு எல்லாம் கூட நடந்தது!”
“சரிதான்.. இப்போது இவர் சாதனை என்ன?”
“அமித்ஷா, ரெட்டி சகோதரர்கள் சாகசங்களை இவர் முறியடித்தார்! காங்கிரஸில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க பி.ஜே.பி. முயற்சி செய்தது. ஆனால் சிவகுமார் பி.ஜே.பி.யிலிருந்து நாலு எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் பக்கம் இழுத்தார். அதுமட்டுமல்ல சுயேச்சையாக ஜெயித்த இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் காங்கிரஸ் பக்கம் இருக்கும்படி செய்தார்! எடியூரப்பா தோல்விக்கு இவரே காரணம்!”
“பிறகு..”

“சிவகுமார் புகழ் டெல்லி காங்கிரஸ் வட்டாரம் வரை எட்டியது! அமித்ஷாவுக்கு எதிராக எல்லா முயற்சியிலும் இனி இவரையே களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருக்கிறது.. விரைவில் அகில இந்திய காங்கிரஸில் இவருக்கு பொறுப்பு தரப்படலாம்!”
“ஆனால் அங்கே கூட்டணி ஆட்சி நிலைக்குமா?”
“சபாஷ்! சரியான கேள்வி! சந்தேகம்தான்! மீண்டும் ஆட்சியை பிடிக்க பி.ஜே.பி. பல தந்திரங்களை செய்து வருகிறது. தேவகவுடாவுக்கு ரேவண்ணா என்று இன்னொரு மகன் உண்டு. முதல்வராகிவிட்ட குமாரசாமியின் தம்பி! தேவகவுடாவுக்கு ரேவண்ணா மீதுதான் பாசம் அதிகம்! அவரைத்தான் கூட்டணியின் முதல்வராக்க ஆசைப்பட்டார் தேவகவுடா!”
“பிறகு என்ன நடந்தது?”
“நிலைமையை புரிந்துகொண்டு குமாரசாமி முந்திக்கொண்டு, காங்கிரஸுடன் உறவை பலப்படுத்திக் கொண்டார்! ரேவண்ணாவை பி.ஜே.பி. ‘நைஸ்’செய்கிறார்கள். அவர் மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுத்து கவிழ்க்கும் முயற்சி நடக்கிறது. அதோடு இன்னும் இரண்டு தொகுதிக்கு தேர்தல் நடக்க வேண்டும் அல்லவா? இரண்டிலும் ஜெயிக்க பி.ஜே.பி. வேகமாக செயல்படுகிறது! அதில் ஜெயித்த பிறகு ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி வேகம் பெறும்!”
“ஆட்சியை பிடிப்பதில் எத்தனை சூழ்ச்சிகள்?”
“அரசியல் அப்படித்தானே இருக்கும்! பி.ஜே.பி. தென்னிந்தியாவை வசப்படுத்த பெரும் திட்டங்கள் தீட்டி வருகிறது. ‘தாமரை படரல்’ என்ற பெயரில் தனித்தனி டீம் தென் மாநிலங்களில் உருவாகிறது! கவர்னர்கள்தான் இவர்களுக்கு ‘காட்ஃபாதர்’ என்கிறார்கள்...”
“தாமரை இங்கே படருமா...?”

“முதலில் பாண்டிச்சேரியில் தாமரை படரும் போலிருக்கிறது. முன்னாள் பாண்டி முதல்வர் ரங்கசாமி இரண்டுமுறை அமித்ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரை முதல்வராக்கி பாண்டிச்சேரியில் ஆட்சியை பிடிக்க பி.ஜே.பி. முயற்சிக்கும் - சீக்கிரமாக!”
- எழுந்துவிட்டார் ஷெர்லக்!

Leave a comment
Upload