
டாக்டர் உ. வே. வெங்கடேஷ் ஸ்வாமி ராமாயணத்தில் நமது கேள்விகளுக்கு பதில்களைத் தொடர்கிறார்.
- கேள்வி : இராமாயண பாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒரு பாடத்தை நமக்கு சொல்கின்றனர். ஏன் லட்சுமணன் மனைவி, பரதனின் மனைவி, சத்ருக்னன் அவன் மனைவி பற்றி அதிகம் சொல்லப்படவில்லை?
பதில் : கேள்வியிலேயே பதில் உள்ளது. ராமாயணம் என்பது சீதா ராமர்களின் வரலாறு. எனவே அதில் அவர்களைத் தவிர மற்றவரின் வரலாறுகளில் ஃபோகஸ் இருப்பதில்லை. வால்மீகியின் பாணி, எடுத்த கருத்தை ஒரே நேர்க்கோட்டில் சொல்வது. மேலும் வேத வேதாந்த அர்த்தங்களை விளக்க வந்தது ராமாயணம். எனவு சரித்ரத்தைக் கொண்டு வேத வேதாந்தக் கருத்துகளை எப்படி எளிமையாக விளக்குவது என்பது தான் இங்கு முக்கியமே ஒழிய, ஒவ்வொருவரும் என்ன செய்தார் என்று கதை சொல்வது 'முக்கிய' நோக்கம் அன்று.
நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை நான் கூறாமல், எனக்குத் தெரிந்த மற்ற விஷயங்கள் அனைத்தையும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தால், சரியாக இருக்குமா என யோசித்துப் பாருங்கள். அதுபோலத் தான்இதுவும்
- கேள்வி : ராமாயணம் வால்மீகி நடந்ததை எழுதியதா? அல்லது எழுதப்பட்டது நடந்ததா?
பதில் : பட்டாபிஷேகம் வரை நடந்த பிறகு எழுதினார். உத்தர காண்டத்தில் இறுதிப் பகுதியில் மட்டும் நடக்கப் போவதையும் முன்கூட்டியே எழுதினார்
7) கேள்வி : ராமன் தன்னை அவதாரம் என்று சொல்லிக்கொள்ளவேயில்லை...தெய்வத்தன்மை வெளிப்படவில்லை அப்படியிருக்க பலசாலி, மந்திரங்கள் தெரிந்த, வரம் பல பெற்ற ராவணனை வீழ்த்தியது
பதில் : அகஸ்திய ரிஷியின் ஆசி, அவர் தந்த வில் அம்பு, அவரது உபதேசங்கள்.
இறைவன் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாது, குரு அருளால் சாதாரண மனிதன் எதையும் சாதிக்கலாம் என்பதையும், அறவழியில் நாம் வாழ்ந்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் வாழ்த்தலாம் என்பதையும் நமக்கு ராமன் உணர்த்துகிறார்.
- கேள்வி : லட்சுமணனை தன் மகனாக பாவித்த சீதை, காட்டில் அப்படி ஒரு அபாண்டத்தை போடுவது ஏன் ?
பதில் : இறை அடியாருக்குத் தீங்கு இழைத்தாலோ, அவர்களைக் காயப்படுத்தினாலோ, அதற்கு தண்டனை கிடைக்கும் என்று நமக்கு உணர்த்த அவள் செய்து காட்டினாள். அதன் பிறகு அதன் தண்டனையாக அசோக வனத்தில் துன்புற்றாள்.
இது தாயார் நமக்கு உணர்த்தும் செய்தி என்று புரிந்து கொள்ள வேண்டும்
அடியவரிடம் அபசாரப் படுபவர் மஹாலக்ஷ்மியாகவே இருந்தாலும், திருமால் அவளுக்கும் தண்டனை தந்திடுவார்
- கேள்வி : ராமாயணத்தில் ஜாபாலியின் அவசியம் என்ன?
பதில் : அவர் நாஸ்திகம் பேச, அவருக்குப் பதில் அளிக்கும் சாக்கில், நாஸ்திக வாதத்தின் தீங்குகளையும், பிழைகளையும் ராமன் சுட்டிக் காட்டும் வாய்ப்பு கிடைத்ததே
- கேள்வி : பரசுராமரும் விஷ்ணுவின் அவதாரம் எனும்போது..ராமனால் கர்வ பங்கம் ஏன்?
பதில் : பரசுராமர் பெருமாளின் சக்தியை வாங்கி வந்த ஜீவாத்மா, முழு பெருமாள் அல்லர். ராமன் வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்த சாட்சாத் பெருமாள். நிஜத்தின் முன் நிழல் தோற்கத் தானே செய்யும்?
- கேள்வி : ராவணனையும் மற்ற அரக்கர்களை அழிப்பதற்கு தான் ராமாவதாரம் என்றால் ...அதன் பின்னரும் (உத்தர ராமாயணம்) தொடர வேண்டிய அவசியம் என்ன...? கர்ப்பிணி மனைவியை காட்டில் மீண்டும் விட்டு வரச் செய்தது ஞாயமா?
பதில் : ராமன் தன்வாழ்வில் தர்மத்தைக் கடைபிடித்து அதன் மூலம் மக்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்ட அவதாரம் தேவை. அழிக்கப் பட்ட தீய சக்திகள் மீண்டும் தலைதூக்காது இருக்க அவதாரம் தொடர வேண்டும்.

Leave a comment
Upload