தொடர்கள்
கல்வி
ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் ஒரு 'ஜாலி பார்வை' - டிராகன்

ஹாங்காங்கில் உலகத் தரவரிசை (QS Ranking) என்ற ஒரு தராசை வைத்துக் கொண்டு, "என் தட்டு மேல, உன் தட்டு கீழ" என்று மல்லுக்கட்டும் ஹாங்காங்கின் பல்கலைக்கழகங்கள் .....

2026043007353817.jpg

1. தி யுனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங் (HKU) – "நாங்க பரம்பரை பணக்காரங்கப்பா!"

இந்தப் பல்கலைக்கழகம் தான் ஹாங்காங்கின் 'தலைமகன்'. பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலேயே (1911-ல்) ஆரம்பிக்கப்பட்டதால், இவர்களுக்குள் ஒரு தனி 'இளவரசர்' திமிர் இருக்கும்.

லொகேஷன் லந்துகள்: ஹாங்காங் தீவின் மலைச்சரிவில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. இங்கே படிக்கும் மாணவர்களின் கால்கள், ஏறி ஏறியே இண்டஸ்ட்ரி ரெடி ஆவதற்கு முன்னால் 'ஹைக்கிங் ரெடி' ஆகிவிடும்!

பில்டப்: "நாங்க தான் ஃபர்ஸ்ட்" என்பது இவர்களின் தாரக மந்திரம். மருத்துவம், சட்டம் என்று பெரிய பெரிய படிப்புகள் எல்லாம் இவர்களின் கையில். இங்கே படிக்கும் மாணவர்களிடம் "தம்பி, உங்க காலேஜ்..." என்று ஆரம்பித்தால், உடனே காலரைத் தூக்கிவிட்டு ஆங்கிலத்தில் 'ஆப்ஜெக்டிவிட்டி' பேசி நம்மை தலைசுற்ற வைப்பார்கள்.

20260430073631514.jpeg

2. தி சைனீஸ் யுனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங் (CUHK) – "நாங்க இயற்கை விரும்பிகள்!"

அடுத்ததாக, நியூ டெரிட்டரிஸ் பகுதியில் இருக்கும் மலைக் காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் 'கிராமத்து மாப்பிள்ளை' தான் இந்த CUHK.

சுற்றுச்சூழல் விநோதம்: காலேஜுக்குள் போனால் பல்கலைக்கழகத்திற்குள் வந்தோமா அல்லது முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள் வந்தோமா என்று சந்தேகம் வரும். அந்த அளவுக்கு மரங்களும், குன்றுகளும் நிறைந்த இயற்கை சூழல்.

கலாச்சாரக் காவலர்கள்: பெயரிலேயே 'சைனீஸ்' இருப்பதால், இவர்களுக்கு பாரம்பரியம் மற்றும் சமூக அறிவியலில் (Social Sciences) கொஞ்சம் ஈடுபாடு அதிகம். HKU-காரர்கள் கோட்-சூட் போட்டுக் கொண்டு அலையும் போது, இவர்கள் அமைதியாக லைப்ரரிக்குள் உட்கார்ந்து உலகத்தை எப்படி மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

20260430073654435.jpeg

3. ஹாங்காங் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (HKUST) – "யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்ட்ரெஸ் அண்ட் டென்ஷன்!"

பெயரில் 'சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' (STEM) இருக்கிறதே என்று ஆசையாக உள்ளே நுழைந்தால், 'அம்மாடியோவ்' என்று அலற வைத்துவிடுவார்கள். மாணவர்களால் அன்போடு (மற்றும் பயத்தோடு) "University of Stress and Tension" என்று அழைக்கப்படும் கல்வித் தொழிற்சாலை இது.

வியூ பாயிண்ட் வித்தை: இது இருக்கும் இடம் ஒரு சொர்க்கம்—தெளிந்த கடல் பக்கத்தில், அழகிய கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்ட கேம்பஸ். ஆனால் சோகம் என்னவென்றால், மாணவர்களுக்கு அங்குள்ள அசைன்மென்ட்களையும், கோடிங் (Coding) பிராஜெக்டுகளையும் பார்க்கவே நேரம் சரியாக இருக்கும்; கடலைப் பார்க்க நேரம் இருக்காது!

ரோபோட்டிக்ஸ் உலகம்: மனித உணர்ச்சிகளை விட செயற்கை நுண்ணறிவுக்கும் (AI), வணிகத்திற்கும் (Business) தான் இங்கே முதல் மரியாதை. இங்கிருந்து வெளியே வரும் மாணவர்கள் 'இண்டஸ்ட்ரி ரெடி' ரோபோக்களாகவே மாறிவிடுகிறார்கள்.

20260430073801539.jpg

4. தி ஹாங்காங் பாலிடெக்னிக் யுனிவர்சிட்டி (PolyU) – "நடுவூர் நாயகன்!"

கௌலூன் (Kowloon) பகுதியின் மையத்தில், சிவப்பு செங்கல் கட்டிடங்களோடு 'ரெட் போர்ட்' போல காட்சியளிக்கும் ஒரு ஏரியா தான் இந்த PolyU.

எதார்த்த சிகாமணிகள்: மற்ற மூன்றும் மலைகளிலும், கடலோரத்திலும் ஒதுங்கி வாழ, இந்த பாலிடெக்னிக் மட்டும் தான் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலேயே டிராஃபிக் ஜாமுக்கு நடுவில் 'நானும் ரௌடி தான்' என்று நின்றுகொண்டிருக்கும்.

பயன்பாட்டுக் கல்வி: இவர்களின் தாரக மந்திரமே பிராக்டிகல் தான். டிசைன் (Design), இன்ஜினியரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று நேரடியாக வேலைக்கு உதவும் விஷயங்களில் இவர்கள் கில்லாடிகள். "பெரிய தத்துவம் எல்லாம் பேசத் தெரியாதுப்பா... வேலை கிடைக்குமா, சம்பளம் வருமா?" என்று கேட்கும் எதார்த்தமான பெற்றோர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நிறுவனம்!

20260430073830101.jpg

5. சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங் (CityU) – "நாங்க பக்கத்து வீட்டுக்காரங்கப்பா!"

PolyU-வை போலவே இவர்களும் கௌலூன் (Kowloon) டவுனுக்குள், அதுவும் ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு (Festival Walk) பக்கத்திலேயே குடித்தனம் நடத்துகிறார்கள்.

மால் கலாச்சாரம்: இங்கே படிக்கும் மாணவர்களுக்கு லைப்ரரிக்கு போவதை விட பக்கத்தில் இருக்கும் மாலில் விண்டோ-ஷாப்பிங் செய்யத்தான் கால் கடுக்கிறது.

உலகத் தரவரிசையில் (QS Ranking) எப்படியாவது மேலே வர வேண்டும் என்று இவர்களின் நிர்வாகம் செய்யும் அஜா குஜா வேலைகள்..., சத்தமில்லாமல் பல புதுப்புது இண்டஸ்ட்ரி ரெடி கோர்ஸ்களையும், பிசினஸ் படிப்புகளையும் அறிமுகப்படுத்தி 'பிக் ஃபோர்' கூட்டத்திற்கு டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

20260430073858738.jpeg

6. ஹாங்காங் பாப்டிஸ்ட் யுனிவர்சிட்டி (HKBU) – "நான்காவது தூணின் கோட்டை!"

இதழியல் (Journalism) மற்றும் ஊடகத் துறை என்று வந்துவிட்டால், ஹாங்காங்கில் இவர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.

ஸ்பெஷல் பஞ்ச் : "தடி எடுத்தவனெல்லாம் யூடியூபர்" ஆகும் இந்த காலத்திலும், முறையான 'பத்திரிகை நெறிமுறை' (Media Ethics) மற்றும் 'ஆப்ஜெக்டிவிட்டி' (Objectivity) என்றால் என்னவென்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பும் தார்மீகப் பொறுப்பு இவர்களிடம் தான் இருக்கிறது.

கலை உலக நாயகர்கள்: சினிமா, கம்யூனிகேஷன், தியேட்டர் ஆர்ட்ஸ் என்று கலை உலகிற்கு ஆட்களை சப்ளை செய்யும் முக்கிய ஏரியா இது. ஆனால் பாவம், இப்போதைய டிஜிட்டல் வேகத்தில் வணிகத்துறையும் கணினித்துறையும் தழைத்தோங்குவதால், இங்கேயும் மீடியா படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் டல்லடிக்கத் தான் செய்கிறது.

20260430073959385.jpg

7. லிங்னான் யுனிவர்சிட்டி (LingnanU) – "நாங்க லிபரல்... ரொம்ப லிபரல்!"

ஹாங்காங்கின் எல்லையோரத்தில் (Tuen Mun) அமைதியாக இருக்கும் ஒரு 'ரிசார்ட்' போன்ற கேம்பஸ். ஹாங்காங்கின் ஒரே அரசு தாராளமயக் கலைப் பல்கலைக்கழகம் (Liberal Arts University) இதுதான்.

வித்தியாசமான அப்ரோச்: "எங்களுக்கு இன்ஜினியரிங் கோடிங் எல்லாம் வராதுப்பா... நாங்க இலக்கியம், வரலாறு, தத்துவம், சமூகவியல் (Social Sciences) பேசுவோம்" என்று தனியாகக் கொடி பிடிப்பவர்கள்.

எதார்த்த நிலை: பத்தாம் வகுப்பிலேயே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அவசர உலகத்தில், தீர்க்கமான அணுகுமுறையோடு சமுதாயத்தை உற்றுநோக்க விரும்பும் ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே இந்த இடத்தின் அருமை புரிகிறது. கார்ப்பரேட் உலகில் இவர்களை 'அவுட் ஆஃப் சிலபஸ்' போலப் பார்த்தாலும், மனித நேயத்தை வளர்ப்பதில் இவர்கள்தான் கிங்!

20260430074100498.jpg

8. தி எஜுகேஷன் யுனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங் (EdUHK) – "நாங்கதான் வாத்தியார் ஃபேக்டரி!"

இயற்கை எழில் கொஞ்சும் டாய் போ (Tai Po) மலையின் உச்சியில், உலகமே தனி என்று ஒதுங்கி வாழும் 'குருகுலம்' இது.

எதிர்காலக் கேள்விக்குறி: ஹாங்காங்கின் அடுத்த தலைமுறை ஆசிரியர்களை உருவாக்குவதே இவர்களின் வேலை. ஆனால், இப்போதைய சூழலில் பல தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற தூய அறிவியல் துறைகளை மூடி வருவதால், "நாளைக்கு நாம டிகிரி முடிச்சா யாருக்கு மேத்ஸ் சொல்லிக்கொடுப்பது?" என்ற கவலை இவர்களிடமும் எட்டிப் பார்க்கிறது.

AI பயம்: இயற்கை நுண்ணறிவைக் கொண்ட ஆசிரியர்களின் இடத்தை 'செயற்கை நுண்ணறிவு' (AI) முழுமையாக எடுத்துக் கொள்ளும் வரை, இவர்களின் வாத்தியார் வேலைக்கு எந்தப் பங்கமும் வராது என்று தங்களைத்தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள்!

20260430074510266.jpeg

9. தி ஹாங்செங் யுனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங் (HSUHK) – "நாங்க காசு மழையில நனைபவர்கள்!"

ஹாங்காங்கில் இந்த ஹாங்செங் பெயரிலேயே ஒரு கல்வி நிறுவனம் இருக்கிறது. அதுதான் "தி ஹாங்செங் யுனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங்" (The Hang Seng University of Hong Kong - HSUHK).

ஷாதின் (Shatin) பகுதியில், ஒரு கார்ப்பரேட் ஆபீஸ் போல பளபளவென்று காட்சியளிக்கும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் இது. ஹாங்செங் வங்கியின் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டதால், இவர்களின் ரத்தத்திலேயே 'பணம்' கலந்திருக்கும்!

கல்லூரியா, கார்ப்பரேட் ஆபீஸா?: உள்ளே நுழைந்தால் மாணவர்களை விட பிசினஸ் மேக்னட்களைத்தான் அதிகம் பார்க்க முடியும். "வணிகத்துறையும், கணினித்துறையும் எப்பொழுதும் போல தழைத்துக் கொண்டு இருக்கின்றன" என்று நாம் முன்பு பார்த்தோமே, அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் இந்த காலேஜ் தான்.

பக்கா 'இண்டஸ்ட்ரி ரெடி': இவர்களின் தாரக மந்திரமே பிசினஸ், ஃபைனான்ஸ், மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் (Supply Chain) தான். இங்கே படிக்கும் மாணவர்களிடம் "உலகத்தைப் பற்றிய புரிதல்" இருக்கிறதோ இல்லையோ, "பங்குச்சந்தையைப் பற்றிய புரிதல்" அக்குவேறாக ஆணிவேறாக இருக்கும்!

மற்ற காலேஜ் மாணவர்கள் கவிதை, இதழியல், ஆப்ஜெக்டிவிட்டி என்று பேசிக் கொண்டிருக்கும் போது, இந்த ஹாங்செங் மாணவர்கள் "நாளைக்கு ஹாங்செங் இண்டெக்ஸ் (Hang Seng Index) ஏறுமா, இறங்குமா? நமக்கான வேலைவாய்ப்பு (Placement) எப்படி இருக்கும்?" என்று கால்குலேட்டரோடு சுற்றிக் கொண்டிருப்பார்கள். பக்கா கமர்ஷியல் ஏரியா!

மொத்தத்தில் ஹாங்காங்கில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும், உலகத் தரவரிசை என்னும் மாயச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு 'இண்டஸ்ட்ரி ரெடி' மாணவர்களைத் தயாரிக்கும் மில்லாக மாறிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், இந்த கார்ப்பரேட் அலைக்கு நடுவிலும் உலகம் தெரிந்து, சமுதாயத்தை மாற்றத் துடிக்கும் ஒரு சில மாணவர்களை உருவாக்கும் இந்த நிறுவனங்களின் அவஸ்தைகள் அவசியமே !!!

சமீபத்தில் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின் வருகை அதிகமாகியிருக்கிறது. காரணம் தாய்நாடு சீனாவிலிருந்து மாணவர்கள் வருகை குறைந்திருப்பதால் இந்திய மாணவர்களை வரவேற்கிறது ஹாங்காங்.

உலகத் தரம் வாய்ந்த நகரம் பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது என்பதால் இங்கு படிக்கும் மாணவர்களின் பார்வை நிச்சயம் பரந்து பட்டதாக மாறும் என்பது உறுதி.