தொடர்கள்
பொது
மறைந்து கொண்டிருக்கும் இளங்கலைத் துறைகள்! -சத்யபாமா ஒப்பிலி

20260430065609761.jpeg

ஒரு ஆசிரியராக இந்த பதிவு இந்த நேரத்தில் மிகவும் அவசியம் என்று தோன்றுகிறது. அதுவும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனும் துறையின் விரிவுரையாளராக இருக்கும் நிலையில், இந்த பதிவு ஏதாவது தடத்தில் இருந்தாகவேண்டும் என்று தோன்றியது. இதழியல் துறை வேறு விதமாக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இதை கற்க விரும்பும் மணாக்கரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் வருகிறது. கணிதம், வேதியியல், இயற்பியல் துறைகளும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு கண்டு கொண்டுதான் இருக்கின்றன. வணிகத்துறையும், கணினி துறையும் எப்பொழுதும் போல தழைத்துக் கொண்டு இருக்கின்றன. எல்லாத்துறைகளிலும் இப்பொழுது மிக முக்கியமாக இணைக்கப்படுவது செயற்கை நுண்ணறிவு. கணிதத்தில் வணிகமும்,வணிகத்தில்உளவியலும், உளவியலில் மென்பொருளும், ஊடகத்தில் மேலாண்மையும் கலந்துவிட்ட பாடதிட்டங்கள் தான் இப்பொழுது. இண்டஸ்ட்ரி ரெடி – இது தான் பெரும்பான்மையான பாடத்திட்டங்களின் அஸ்திவாரம். இப்படி எல்லாவிதங்களிலும் கல்லூரிகள் தங்கள் துறைகளைத் தயார் படுத்திக்கொண்டாலும் மாணவ மாணவியர் தேர்ந்தெடுப்பது என்னவோ ஒரு சில துறைகளைத்தான்.


ஒரு இதழியல் விரிவுரையாளராக இப்போது நான் காண்பது கடந்தகாலத்தைக் காட்டிலும் மிகவும் மாறுபட்ட ஒரு சூழல். எழுபத்தைந்து பேர் படித்த இந்த துறையில் சேர்வோர் இல்லாமல் நாற்பது பேராக குறைந்து விட்டது. பாடத்திட்டங்கள் வலுவாகத்தான் இருக்கின்றன. எங்கே தவறு என்பது புரியவில்லை. கொரோனாவிற்கு பிறகு அனைவரிடமும் வாழ்க்கையை நோக்கும் முறை மாறிவிட்டதாகத் தான் தோன்றுகிறது.குழந்தைகளிடமும், பெற்றோர்களிடம் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது.

நமது கல்வி திட்டமே சற்று கேள்விக்குரியது தான். பத்தாம் வகுப்பிலேயே அந்த குழந்தைக்கு தெரிந்துவிட வேண்டும் தான் யாராக ஆவதென்று. STEM படித்தாலாவது மேலாண்மை படிக்க வாய்ப்பிருக்கிறது. வணிகம் படித்தால் STEM பக்கம் திரும்பி பார்க்கக் கூட முடியாது. பத்தாம் வகுப்பில் இதை தீர்மானிப்பதென்பது கொஞ்சம் அபத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லாமல் அதைத்தான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின் மருத்துவமோ, பொறியியலோ கிடைக்கவில்லை என்றால், அறிவியல் சம்பந்தப் பட்ட வேறு துறை தேடலாம்.

ஆனால் இதழியல், சமூகவியல் போன்ற துறைகளுக்கு தேவை ஒரு தீர்க்கமான அணுகுமுறை. சில குழந்தைகளுக்கு, ஒரு சில பெற்றோர்களுக்கு தான் இது புரிகிறது. இதழியல் துறையை எடுத்துக் கொண்டால் அதற்குத் தேவை உலகத்தை அறிந்து கொள்ளும் ஆவலும், தன் எழுத்தால் எதையாவது சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையும். அந்த நம்பிக்கை தொடரலாம், மாறலாம், நாம் இதற்கு சரிபட்டு வரமாட்டோம் என்று தோன்றலாம். ஆனால் கட்டாயமாக உலகத்தைப் பற்றிய புரிதல் வந்திருக்கும். மாணவியரின் நேர்காணல் போது நான் கேட்கும் முதல் கேள்வி, “ Why Journalism?” என்பது தான்.வெவ்வேறு பதில்கள் வரும். சினிமாவைப் பார்த்து இதழியல் ஒரு adventure வாழ்க்கை என்ற எண்ணமும் இருக்கும். மூன்று வருட படிப்பில் நன்றாகவே நிஜம் புரியும். இந்த கட்டுரைக்காகவே இதழியல் படித்து முடித்த இரண்டு மாணவியரிடம், இந்த துறை உங்களுக்கு என்ன சொல்லிக்கொடுத்தது என்று கேட்டேன். இருவரும் ஒருசேர உலகம் தெரிந்தது என்றார்கள்.
எத்தனையோ யூடியூப் சானல்! தடி எடுத்தவெனெல்லாம் தண்டல்காரன் என்பது போல யார் வேண்டுமானாலும் செய்திகளைத் தரலாம் எனும் காலத்தில் எது இதழியல் என்று சொல்லிக்கொடுத்து களத்திற்கு அனுப்புவது மிகவும் முக்கியம் என்பது என் கருத்து. ஊடக நிறுவனங்களே ஏதோ ஒரு கட்சி சார்ந்து ஒருமுகமாக இருக்கும் காலத்தில் “objectivity” எனும் அடிப்படை கொள்கையே இங்கு தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது. பத்திரிகை நெறிமுறை ஒரு சாதாரண யூடியூபருக்கு எந்த அளவிற்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இன்று நம்மை வந்து சேரும் நூற்றுக்கணக்கான போலி செய்திகளுக்கு இவர்களும் காரணம் என்று தயங்காமல் சொல்லலாம்.

ஒரு பொறியியல் அல்லது மருத்துவத்திற்கு எப்படி கல்லூரி கல்வி முக்கியமோ அது போல தான் இதழியலுக்கும் இருக்கவேண்டும் . நான்காவது தூண் என்பது வெறும் பேச்சுக்கு இல்லை.மற்ற தூண்களை கேட்கும், வழி நடத்தும் முக்கியமான தூண் இது. இதழியல் துறைக்கு நுழைவதற்கு இது அடிப்படை தகுதியாக கொள்ளலாம். என்னுடைய சக ஆசிரியையிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்ன ஒன்று எனக்கு மிகவும் முக்கியமாக பட்டது. பள்ளியில் இது போன்ற துறைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஒரு நாட்டை திறம்பட உருவாக்க, சீரமைக்க இதுவும் ஒரு முக்கியமான துறை என்பது பள்ளிகளிலேயே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். ஒரு பாடம் இதழியலாக இருந்தால், அவர்களுக்கு பள்ளியிலேயே புரியும் இதன் முக்கியத்துவம். அந்த காலத்தில் சென்னை பல்கலை கழகத்தில் மட்டும் தான் இதழியல் இருந்தது. படிக்கும் ஆர்வம் இருக்கும் மாணவ மாணவியர் இரண்டு மூன்று வருடங்கள் காத்திருந்து அதில் சேர்ந்த கதைகளெல்லாம் உண்டு.

இது ஏதோ ஒரு துறையைப் பற்றிய ஒரு ஆசிரியரின் புலம்பலாகக் கூட தோன்றலாம். ஆனால் இதர சில துறைகளின் நிலைமையும் இதுதான். சென்னையில் மட்டுமே சில தனியார் கல்லூரிகளும் 29 அரசு கல்லூரிகளும், கணிதம், வேதியியல், இயற்பியல் துறைகளை மூடிவிட்டன. இது எதிர்கால அறிவியல் கல்விக்கே சவாலாக அமையும். இன்று கணிதத் துறையை மூடிவிட்டால் நாளை கணிதம் சொல்லிக்கொடுப்பவர் யார்?


இது ஒரு கடினமான சூழ்நிலை தான். பத்து பேருக்காக ஒரு துறை இயங்குவது என்பது கடினம். இப்படியே போனால் இந்த துறைகள் இல்லாமல் போய்விடுமா என்றால் இப்போதைய சூழ்நிலையில் என்னால் கூறமுடிந்தது, அவை வேறு ஒரு பெயரில் வேறு ஒரு அவதாரத்தில் வரலாம் - இயற்கை நுண்ணறிவு ஆசிரியர் இடத்தை எடுத்துக் கொள்ளும் வரை.


மேலிருந்தவாரியாக நோக்கினால் இந்த மாற்றம் இப்போதைய காலத்தின் தேவை. ஆனால் இது நம்மை கொண்டு போய் சேர்க்கும் இடம் சரிதானென்று தீர்மானமாக சொல்ல முடியவில்லை.