தொடர்கள்
ஆன்மீகம்
கல்விச் செல்வம் அருளும் ஹயக்ரீவர்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Hayagriva, the giver of  education wealth!!

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்– மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு. - ஔவையார் (மூதுரை)

பொருள்:- ஒரு நாட்டின் அரசனையும், எவ்விதக் குற்றமும் இல்லாமல் முழுமையாகக் கல்வி கற்ற அறிஞரையும் ஒப்பிட்டும் போது, அரசனை விடக் கற்றவனே உயர்ந்த சிறப்புடையவன் ஆவான். மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட சொந்த நாட்டில் மட்டுமே மரியாதை மற்றும் சிறப்பு உண்டு. ஆனால், கல்வி கற்றவனுக்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
உலகில் அழியாத ஒரு செல்வம் என்றால் அது கல்விச் செல்வமே. கல்விச் செல்வம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்க வளரும். கற்றதை உள்ளத்தில் வைத்து அதை நன்றாக உணர்ந்து, அதன்படி நடந்து அனுபவத்தில் உண்மையைக் காண்பது ஞானம். இத்தகைய பெருமை வாய்ந்த கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்கும் தெய்வம் சரஸ்வதி. ஆனால் சரஸ்வதிக்கே ஒரு குரு உண்டென்றால் அது ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவரே ஆவார்.

Hayagriva, the giver of  education wealth!!

ஹயக்ரீவர் மனித உடலும், குதிரை முகமும், கையில் புத்தகத்தோடும் காட்சி தருபவர். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரம். இந்த ஹயக்ரீவர் அவதாரம் தச அவதாரங்களுக்கு முந்தையது. ஹய என்றால் குதிரை என்றும், க்ரீவா என்றால் கழுத்து என்றும் பொருள். ஒருவர் தன்னுடைய ஞானம் மற்றும் அறிவை பெருக்கி, அதன் மூலம் வாழ்வில் அவர்களுக்கு அனைத்து விதமான நலன்களை அள்ளிக் கொடுத்து, குதிரையைப் போல் கம்பீரமாக வாழ வைக்கக் கூடிய தன்மை கொண்டவர் ஹயக்ரீவர். கல்விச் செல்வத்தோடு சேர்த்து, பொருள் செல்வத்தைத் தரும் விதமாகத் தனது மடியில் லட்சுமி தேவியுடன் "லட்சுமி ஹயக்ரீவராகவும் அருள்புரிகிறார்.

மத்ஸ்ய புராணத்தில்…ஹயக்ரீவர் தோற்றம்:
பிரம்மா நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர, தனது சிருஷ்டி தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் பிரம்மனை விடவும் பெரியவர்களாய் நினைக்க வேண்டும் என்று வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மனிடம் இருந்து பறித்து, அதனைப் பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.

Hayagriva, the giver of  education wealth!!

வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இல்லை. உலகே.. இருளில் சூழ்ந்தது பிரம்மா செய்வதறியாது திகைத்தார்.
இதனை மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். மகாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் வந்த குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார். குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி, சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள் சங்கு, சக்கரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுத்தார்.
அசுரர்கள் கைப்பட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள் புனிதமாக்கும்படி மகா விஷ்ணுவிடம் வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த மகா விஷ்ணு வேதங்களை உச்சி முகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.

Hayagriva, the giver of  education wealth!!

அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்தார் என்றும், அவரை குளிர்விக்க லட்சுமியை அவர் மடியில் அமர்த்தினார்கள். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்திருக்கிறார். இதனால் அவரை லஷ்மி ஹயக்ரீவர் என்றனர். வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வியின் தெய்வமாகிறார்.

பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோயில்கள்:
இந்தியாவில் கல்வி மற்றும் ஞானத்தின் கடவுளாகக் கருதப்படும் ஹயக்ரீவருக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் சில பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவாற்றல் பெருகவும் பக்தர்கள் இந்த கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்கின்றனர்.

Hayagriva, the giver of  education wealth!!

திருவந்திபுரம் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் கோயில் (கடலூர்):
இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹயக்ரீவர் ஸ்தலம் கடலூர் அருகில் உள்ள ஔஷதகிரி என்ற சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 5.00 முதல் இரவு 8.00மணி வரை.

செட்டிப்புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோயில்
(செங்கல்பட்டு):

செங்கல்பட்டு அருகில் செட்டிப்புண்ணியத்திலுள்ள இக் கோயிலில், வரதராஜப் பெருமாளுடன் யோக ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார். தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை இவரது பாதத்தில் வைத்து ஆசி பெற்றுச் செல்வது இங்கு மிகப்பிரபலம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 8.00மணி வரை.

தூப்புல் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் கோயில் (காஞ்சிபுரம்):
வைணவ ஆச்சார்யரான ஸ்ரீ வேதாந்த தேசிகர் அவதரித்த திருத்தலம். ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள இந்த ஆலயமும் பரகால மடத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.

லட்சுமி ஹயக்ரீவர் கோயில், நங்கநல்லூர், சென்னை:
இக்கோயில் நங்கநல்லூரில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும், இக்கோவிலில் உள்ள ஹயக்ரீவர் சிலை சாளக்கிராமக் கல்லால் ஆனது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரை.

மதுரை ஸ்ரீஹயக்ரீவர் பெருமாள் கோயில்:
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு அருகில், வடக்குப் பார்த்த கோயிலில் ஸ்ரீஹயக்ரீவர் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

புதுச்சேரி ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் கோயில் (முத்தியால் பேட்டை):
இங்குள்ள மூலவர் விக்கிரகம் சாளக்கிராமக் கல்லால் ஆனது. பெருமாளும் லட்சுமி தாயாரும் ஒருவரையொருவர் அணைத்தவாறு காட்சியளிப்பது தம்பதியரிடையே ஒற்றுமையை அதிகரிக்கும் தலம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 6.00 முதல் இரவு 9.00மணி வரை.

பெங்களூரு ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ சந்நிதி (மெஜஸ்டிக்):
பரகால மடத்தின் மூலம் 1938-ம் ஆண்டு நிறுவப்பட்ட பழமையான கோவில். இங்கு ஹயக்ரீவருக்குத் தேன் அபிஷேகம் செய்து, அந்த பிரசாதத் தேனை உட்கொண்டால் குழந்தைகளுக்கு அறிவு வளரும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கை.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 5.30 முதல் இரவு 8.00 மணி வரை.

​​​   ​

ஹயக்ரீவர் வழிபாடு:
ஹயக்ரீவரை வழிபடப் புதன்கிழமை மிகவும் உகந்த நாளாகும். குறிப்பாக, புதன்கிழமையும் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாட்களில் அவரை வழிபடுவது கல்வி, அறிவு மற்றும் ஞாபக சக்தியைப் பன்மடங்கு பெருக்கும். புதன்கிழமை தவிர்த்து, வியாழக்கிழமையும் மற்றும் பெருமாளுக்குரிய விசேஷ நாட்களிலும் ஹயக்ரீவரை வழிபடலாம். மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரம் ஹயக்ரீவருக்கு மிகவும் பிடித்தமான நாளாகும்.
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை, துளசி மாலை அல்லது மல்லிகைப்பூ சாற்றி இவரை வழிபடுவது விசேஷம். மற்றும் சுண்டல் (குறிப்பாகக் கொண்டைக்கடலை) பிரசாதமாகப் படைப்பது வழக்கம்.
ஹயக்ரீவரை வழிபடுவதால் சிறந்த ஞாபக சக்தி, கல்வியில் வெற்றி, தெளிவான சிந்தனை, மற்றும் பேச்சாற்றல் ஆகிய நன்மைகள் கிடைக்கும்

Hayagriva, the giver of  education wealth!!

ஹயக்ரீவ மூல மந்திரம்
ஓம் ஞானானந்த மயம் தேவம்
நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே !!

இதன் பொருள்...
ஞானமும் ஆனந்தமயமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீவரை நான் வணங்குகிறேன்.

ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத் !!

Hayagriva, the giver of  education wealth!!

ஓம் ஹயக்ரீவாய நமஹ