
இராபர்ட் கிளைவ், (Robert Clive) 1744-ல் தனது 19வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் எழுத்தராக (குமாஸ்தாவாக) சென்னைக்கு வந்தார். அவருக்கு முறையான இராணுவப் பயிற்சி இல்லாத போதிலும், ஆற்காட்டைப் பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து வெற்றிகரமாகக் கைப்பற்றி தனது இராணுவத் திறமையை நிரூபித்தார். இவர் இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் (EIC) அதிகாரத்தை நிலைநிறுத்தியதில் முக்கிய பங்காற்றியவர். வங்காளத்தின் முதல் பிரிட்டிஷ் ஆளுநராக (Governor of Bengal) செயல்பட்ட இவர், "இந்தியாவின் கிளைவ்" என்றும் அழைக்கப்பட்டார்.
இராபர்ட் கிளைவ் தன் வாழ்நாளில் தீவிரமான ஆன்மீகவாதியாகவோ அல்லது பக்திமானாகவோ இருக்கவில்லை. அரசியல், அதிகாரம் போன்ற அடையாளங்களுக்குப் பின்னால், தன் சுயவாழ்வில் ஏற்பட்ட ஒரு தெய்வீக அனுபவத்தினால் மனமாற்றம் அடைந்தார்.

நோய் குணமாகி ஆற்காடு போரில் வெற்றி:
1751 ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவ் தனது படைகளுடன் ஆற்காட்டைக் கைப்பற்றச் செல்லும் வழியில் காஞ்சிபுரத்தில் தங்கினார். அப்போது அவருக்குக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் காஞ்சியில் வரதராஜ பெருமாளின் உற்சவமும் நடந்து கொண்டிருந்தது. பெருமாளின் மகிமைகளை அறிந்த கிளைவ், தனக்கு நோய் குணமாகி, தான் எடுத்த ஆற்காடு போர் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டார். இராபர்ட் கிளைவ்வின் உதவியாளர்கள் உடனே பெருமாள் கோயில் பட்டாசாரியர்களை அணுகி, அவர்களது வேண்டுகோளின் பேரில், வரதராஜ பெருமாளின் துளசி தீர்த்தமும் சடாரியும் இராபர்ட் கிளைவுக்கு கொண்டு வந்து அளிக்கப்பட்டது. கோயிலின் பட்டாசாரியர்கள் வழங்கிய பெருமாளின் துளசி தீர்த்தத்தைப் பருகியவுடன், அடுத்த நாள் காலை… இராபர்ட் கிளைவ் நோய் நீங்கப் பெற்று புத்துணர்ச்சியுடன் எழுந்து படைகளோடு ஆற்காடு சென்று வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை அடைந்தார்.

இதற்கு முழு முதற்காரணம் காஞ்சி வரதராஜப் பெருமாள்தான் என்ற எண்ணம் தோன்ற, அதுமுதல் அவர் வரதராஜப் பெருமாளின் தீவிர பக்தரானார். இந்த வெற்றியின் நினைவாகவும், தனக்குக் கிடைத்த உயிர்ப்பிச்சைக்கான நன்றிக் கடனாகவும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு 'நவரத்தினக் கற்கள்' பதித்த 'மகர கண்டி' என்னும் விலையுயர்ந்த ஆபரணத்தைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
"கிளைவ் மகர கண்டி"

'கண்டிகை' என்றால் கழுத்தில் அணியும் மாலை அல்லது ஹாரம் என்று பொருள். மகர வடிவங்கள் கொண்ட பதக்கத்தோடு, விலைமதிப்பற்ற நவரத்தினக் கற்கள் (வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், முத்துக்கள்) தங்கச் சங்கிலியுடன் கோர்க்கப்பட்ட இந்த மாலை கம்பீர தோற்றத்தைக் கொடுக்கும்.
பெருமாளுக்கு அணிவிக்கப்படும் விலைமதிப்பற்ற இந்த நவரத்தின மாலை "கிளைவ் மகர கண்டி" (Clive Maharakandi) என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆபரணம் இன்றும் கோயில் திருவிழாக்கள், குறிப்பாகப் புகழ்பெற்ற கருட சேவை உற்சவத்தின் போது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து அலங்காரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல நூற்றாண்டுகள் பழமையான, அரிய நவரத்தினங்கள் மற்றும் தூய தங்கத்தால் ஆன இந்த ஆபரணத்தின் இன்றைய பொருளாதாரத்தின்படி பல கோடி மதிப்பினை பெறும். இதன் காரணமாக, இந்த மகர கண்டி காஞ்சிபுரம் மாவட்ட அரசுக் கருவூலத்தில் (Treasury) மிகப் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. கருட சேவை போன்ற விசேஷ திருவிழா நாட்களின் போது மட்டும், துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருவூலத்திலிருந்து கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட பின், அன்றே மீண்டும் கருவூலத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
மாற்று நாட்டு ஆட்சியாளர்களையும் தன் ஆன்மீக சக்தியால் ஈர்த்த காஞ்சி வரதனின் பெருமைக்கு இந்த 'கிளைவ் மகரகண்டி' இன்றும் ஒரு வாழும் சான்றாகும்.
இராபர்ட் கிளைவ் வழங்கிய பிற கோயில் கொடைகள்:

1752 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற கர்நாடகப் போரின் போது, இராபர்ட் கிளைவ் சமயபுரத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகப் பிரெஞ்சு சிப்பாய் ஒருவர் கிளைவ்வை மிக அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டார். ஆனால், துப்பாக்கிக் குண்டு வெடிக்காமல் அவர் உயிர் தப்பினார். இதற்கு நன்றிக்கடனாக, சமயபுரம் கோயிலின் திருப்பணிகளுக்காகவும், அன்றாட வழிபாட்டு முறைகளுக்காகவும் (பூஜைகள்) பெரும் தொகையை அவர் நிதியாக வழங்கினார்.
இந்தச் சம்பவம் பற்றி ஐசிஎஸ் அதிகாரி எஃப்.ஆர். ஹெமிங்வே தனது 'திருச்சினோபோலி மாவட்ட அரசிதழில்' (Trichinopoly District Gazette) விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
கர்நாடகப் போர்களின் போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வளாகம், ராணுவ அரணாகப் பயன்படுத்தப்பட்டது.
அப்போது கோயிலின் புனிதத்தன்மைக்குக் கேடு விளைவிக்காமல், வழிபாட்டு முறைகளுக்குக் கிளைவ் உரியப் பாதுகாப்பு அளித்தார். போரில் தனக்குக் கிடைத்த வெற்றிகளுக்கு உள்ளூர் தெய்வங்களின் ஆசி இருப்பதாக அவர் நம்பியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
திருச்சியில் கிளைவ் தங்கியிருந்த காலகட்டத்தில் (இன்றும் அங்கு அவர் தங்கியிருந்த 'கிளைவ் ஹாஸ்டல்' கட்டிடம் உள்ளது) மலைக்கோட்டை கோயிலின் நிர்வாகத்திற்கும் பல உதவிகளைச் செய்துள்ளார். இதைத்தவிர சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் உள்ள அமிர்தவல்லி தாயாருக்கு, கிளைவ் 'பச்சைக் கல் பதக்கம்' ஒன்றை வழங்கியுள்ளார்.

போர்களில் தனக்குக் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நன்றி கூறும் வகையிலும் இராபர்ட் கிளைவ் இத்தகைய வழிபாட்டுப் பொருட்களை கோயில்களுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்.


Leave a comment
Upload