தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 12 ஜி.ஏ.பிரபா

20260604055955441.jpeg

12) தாண்டவ ஸாக்ஷிணீ I

ஈச்வர பிரேரணகரீ சேச தாண்டவ ஸாக்ஷிணீ I

ஈஸ்வரோத்ஸங்க நிலையா சேதிபாதா விநாசினீ II

​அம்பிகையே நிரந்தரமானவள். அவளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். அவளையே பணிந்து அடித்தாமரைகளைப் பிடித்துக் கொண்டால் சாம்ராஜ்ய பதவி கொடுப்பாள் என்கிறார் அபிராமி பட்டர்,

​வையம் துரகம் மதகரி மாமகுடம்

​பெய்யும் கனகம், பெருவிலை ஆரம் பிறைமுடித்த

​ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு

​செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

என்று உறுதியாகக் கூறுகிறார்.

​அவள் ஈஸ்வரனின் ஜகத்தை உற்பத்தி செய்வதில் இணைந்து செயல்படுகிறாள். அவருடைய தாண்டவ நடனங்கள் அனைத்திற்கும் அவளே சாட்சியாக இருக்கிறாள். அன்னையுடன் இருக்கும்போது ஆனந்தத் தாண்டவம், அவளைப் பிரிந்தால் ருத்ர தாண்டவம் என்கிறார்கள் பெரியோர்கள்.

​இந்த உலகை ஆளும் ஈஸ்வரனின் பிரியமானவள் என்பதால் எப்போதும் அவர் மடியில் அமர்ந்திருக்கிறாள் அம்பிகை. அதனால் ஆனந்தமாக இருக்கும் அம்பிகை, தன்னிடம் கையேந்தும் பக்தர்களின் குறை தீர்க்க ஈசனிடம் வேண்டுகிறாள். அவளின் கடைக்கண் பார்வையிலேயே மகிழ்ந்து ஈசன் அவள் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்து விடுகிறார் என்கிறது ஸ்ரீசௌந்தர்ய லஹரி.

​மனிதனாகப் பிறந்தவர்கள் வாழ்வில் எதுவும் அவர்கள் விரும்பியபடி நடப்பதில்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதும் இல்லை. அவரவர் கர்மவினைப் படி நடப்பதை அனுபவித்துத் தீர வேண்டும். ஆனால் அதன் வலிமையைக் குறைத்துத் துன்பங்களைப் போக்குபவள் என்று ஈதிபாதா வினாசின்யை என்கிறது த்ரிசதி.

​இவருக்கு இதுதான் என்று விதிக்கப் பட்டிருக்கிறது. வாழ்வில் நம் மனதில் ஏற்படும் ஆசைகளும் அம்பிகை விதித்ததே. அதனால் அவளையே தியானித்தால், வேண்டத் தக்கதை உணர்த்தி, வேண்டும் பொருள் யாவற்றையும் அளிப்பாள். எனவேதான் ஆசைப்படாததை எல்லாம் அடைய விரும்பாதவள் என்கிறது த்ரிசதி. எதை அடைய முடியுமோ, அதை மட்டுமே ஆசைப்பட வேண்டும் என்று ஈஹா விரஹிதாயை என்ற ஸ்தோத்திரத்தின் மூலம் உணர்த்துகிறாள்.

​அவள் நம்மைக் காக்கவே பலப்பல ரூபங்களில் அவதரிக்கிறாள். அவளைத் துதிக்கும் நாமங்கள் பலகோடி என்றாலும்,லலிதா சஹஸ்ரநாமமும், த்ரிசதியும் முக்கியமானவை. அவள் சத்-சித்- ஆனந்த வடிவானவள். அவள் எப்போதும் பேரறிவு வடிவானவள். அறிவுதான் அழகு. ஞானமே அழகு. அறிவே ஒப்பற்ற அழகுடன் ஜொலிக்கிறது. அவள் வடிவாம்பிகை.

​சரணாகதி செய்த பக்தனின் பிராரப்த கர்மாவை, விஷத்தை எடுப்பது போல் விலக்கி விட்டு அவனுக்கு முக்தி அளிப்பவள் அம்பிகை. நம்மை இயக்குவது அவள் அருள் மட்டுமே. எனவேதான் தான் தவறு செய்தாலும் அது உன் சித்தமே என்று அம்பிகை மேலேயே பழி போடுகிறார் நீலகண்ட தீட்சிதர்.

​த்வத் பிரேரணேன மிஷத ச்வஸதோபி மாத

​ப்ரமாதி கேபி ஸதி கர்மணி மே ந தோஷ:

என்கிறார்.

​உன் சங்கல்பத்தால் மட்டுமே நான் ஓடியாடித் திரிகிறேன். அதனால் என் தவறுகளால் நான் குற்றவாளி என்று நினைக்க மாட்டேன். தாய் ஊட்டும் போஜனத்தை அதிகமாக உண்ணும் குழந்தை அதி போஜனம் செய்யும் குற்றத்திற்கு ஆளாகுமா என்று அம்பிகையிடமே வினவுகிறார்.

​சரணாகதி என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. அவளிடம் பூரண நம்பிக்கை வைப்பதுதான். அது மட்டுமே முக்கியம். மற்ற உடல் அங்கங்கள் சரணாகதியில் இருக்கிறதா என்ற கவலை வேண்டியதில்லை. அனுதினமும் அவளை நாம ஸ்மரணை செய்து கொண்டிருந்தால் போதும். அவளை நம்பி, அவள் நாமத்தையே உச்சரிப்பது கூட சரணாகதிதான். அதுவும் அவள் நினைத்தால் மட்டுமே நடக்கும்.

​ஞான மார்க்கம் மூலம் முக்தியை அடைவது என்பது மிகக் கடினம். வேதங்கள், உபநிஷத்துகளை பொருள் உணர்ந்து அத்யயனம் செய்யவே பல ஜென்மங்கள் வேண்டும். அதுவும் கோடியில் ஒருவருக்கே அது சித்திக்கும்.

​மேலும் வெவ்வேறு மகரிஷிகள் வெவ்வேறு விதமாகக் கூறியிருக்கிறார்கள். எனவே குழப்பம் ஏற்படும். ஆனால் அம்பிகையைச் சரண் புகுந்தால் போகும் வழி எது என்பதை அவள் மிகச் சரியாக வழி காட்டுவாள். நமக்கு எது நன்மை என்பது அவளுக்கேத் தெரியும்.

​எனவே அவளைச் சரணடைவது மட்டுமே நமக்கு ஒரே வழி.

******************