
‘ஐநூறு ரூபா நோட்டுல அரைச்சு விட்டு சாம்பார் பண்ணிடலாம்.. நூறு ரூபாய் தாளைத் துருவி நூக்கல் பொரியல்ல போட்ருவோம்.. பத்து ரூவா கட்டு பச்சடிக்கு நல்லாயிருக்கும்.. இன்னிக்கி சமையல் பிரச்னை தீர்ந்தது..’
விநோதினி அந்த அதிகாலைக் கனவிலிருந்து திடுக்கிட்டுக் கண் விழித்தாள். தூங்கும்போது கூட பேங்க் ஞாபகம் தானா என்று தன்னையே நொந்து கொண்டாள்.
முந்தின நாள் மாலை தனது கிளையில் ரொக்கக் கையிருப்பு மிகவும் குறைந்திருப்பதாக கேஷியர் சொன்னவுடன், ‘கரன்ஸி செஸ்ட்’டைத் தொடர்பு கொண்டு, மூன்று விதமான பண மதிப்புகளில் மொத்தமாக இருபது லட்சம் அனுப்பச் சொன்னது வங்கி அதிகாரியான அவளுடைய ஆழ்மனதில் தேங்கியிருந்தது. ஓர் இல்லத்தரசியாக, வீட்டில் அன்றைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற சிந்தனையும் அதனுடன் இணைந்து கலவையான சொப்பனமாக மாறி விநோதினியை வைகறைப் பொழுதிலேயே முழிப்புறச் செய்துவிட்டது. அருகில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்த கணவன் செல்வராஜ் நேற்றிரவு வசைமாரிப் பொழிந்தது நினைவுக்கு வந்தது.
“பேங்க் என்னடி.. உன் தலையிலதான் ஓடுதா.. ரெண்டு நாள் லீவு போட்டா என்னாயிடப் போவுது.. உங்க பாண்டிச்சேரி மெயின் பிராஞ்ச் திவாலாயிடுமா..”
“புரிஞ்சுக்கோங்க செல்வா.. நிறைய வாட்டி சொல்லிட்டேன்.. ‘லாஸ்பெட்’ல எனக்கு எலெக்ஷன் டியூட்டி போட்டிருக்காங்க, ஒரு பள்ளிக்கூடத்துல.. மறுக்க முடியாது.. போகலைன்னா பெரிய பிரச்னை ஆயிடும்.. என் பிரமோஷனையும் பாதிக்கும்..” என்ற விநோதினியின் பதிலில் அவன் சமாதானமாகவில்லை.
“என்னோட தாய்மாமன் பொண்ணுக்கு கல்யாணம்.. நம்ம மேரேஜுக்கு அவங்க எல்லாரும் ‘பாரீஸ்’லருந்து வந்துட்டுப் போனாங்க.. இதை விட ஒனக்கு வேலைதான் முக்கியமா போயிடுச்சா.. அப்படிப்பட்ட ஜாப் வேண்டாமே.. விட்டுடு..”
“ஸாரிங்க.. என்னால ராஜினாமா பண்ண முடியாது.. பேங்க் ஆபீஸர்னு தெரிஞ்சுதானே என்னைக் கட்டிக்கிட்டீங்க.. ‘என் வேலை பத்துலேருந்து அஞ்சு கிடையாது.. நேரம் காலம் பார்க்காம உழைக்கணும்.. மூணு வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியாவுல எங்க வேணாலும் டிரான்ஸர் வரலாம்’னு எல்லாத்தையும் பொண்ணு பார்க்க வந்தன்னிக்கே உங்ககிட்ட சொன்னேனே..”
“உண்மைதான்மா..” என்று குறுக்கிட்டார் மாமனார். “போன மாசம் ரெட்டியார்பாளையத்துல என் அத்தையோட சாவுக்கும் நீ வரலை..”
“மாமா.. அன்னிக்குன்னு பார்த்து ‘நீட்’ எக்ஸாம் வந்திடுச்சு.. கேள்வித்தாள் பண்டல் எல்லாம் எங்க லாக்கர்ல வெச்சிருந்தாங்க.. என்கிட்ட ஒரு செட் சாவி இருந்துது.. காலையிலயே மேனேஜரும் நானும் போயி அதை எடுத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம்.. அந்த வேலை முடியறதுக்கே ரொம்ப லேட்டாயிடுச்சு..”
“இப்படி ஒவ்வொண்ணுக்கும் சாக்கு போக்கு சொல்லிட்டு இருந்தா என்னம்மா அர்த்தம்.. நம்ம சொந்தபந்தங்களோட நல்லது கெட்டது எதுக்குமே நீ போகலேன்னா.. உறவு விட்டுப் போயிடும்..”
“நீங்க சொல்றது புரியுது மாமா.. என் நெலமையையும் யோசிச்சுப் பாருங்க.. ஒவ்வொரு பிராஞ்ச்ல இருந்தும் ஒரு அதிகாரியைத் தேர்தல் டியூட்டிக்கு கண்டிப்பா அனுப்பணும்னு அரசாங்க உத்தரவு.. போறாத நேரம்.. என் பேரு வந்திடுச்சு.. நான் என்ன செய்ய..”
“இத பாரு வினோ.. என்ன பண்ணுவியோ தெரியாது.. நாளன்னிக்கு நீ கல்யாணத்துக்கு வந்துதான் ஆகணும்..” என்று செல்வராஜ் குரல் உயர்த்தினான்.
“எனக்கு ஏதாவது சீரியஸா வியாதி வந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணாதான் என்னால எலெக்ஷன் வேலைக்கு போகாம இருக்க முடியும்.. அப்பவும் மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்து கலெக்டர் ஆபீஸ்ல அனுமதி வாங்கணும்..”
“சரிடி.. இனிமே நீ எந்த ஃபங்ஷனுக்கும் வர வேண்டாம்.. யாராவது கேட்டா.. நான் ‘விடோயர்’னு சொல்லிடறேன்..” என்று ஆவேசமாக விஷம் கக்கினான்.
வாக்குவாதங்கள் முடிந்த ஒரு மணி நேரத்திலேயே குழைந்து பேசி, பின்னிரவில் தன் தேவையை நிறைவேற்றிக் கொண்ட கணவனின் செய்கையைக் கசப்புடன் நினைத்தபடியே புரண்டு படுத்தாள். இருட்டில் தனது கைப்பேசியை உயிர்ப்பித்து முகப்புப் படமாக வைத்திருக்கும் அரவிந்தர் மற்றும் அன்னையை சில நொடிகள் பார்த்ததே மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
*
புதுச்சேரி முதலியார்பேட்டை இல்லத்திலிருந்து தலைக்கவசத்தை மாட்டிக்கொண்டு தன்னுடைய அபிமான நீல நிற ஸ்கூட்டியைக் கிளப்பி மெதுவாக வேகமெடுத்தாள் விநோதினி. உப்பளம் சாலையில் மதுக்கடைகளும், காலனி ஆதிக்கத்தின் எச்சமாகச் சிவப்புத் தொப்பி அணிந்த போலீஸாரும், தெருப் பெயர்களில் ஆங்காங்கே ஃப்ரெஞ்சு வார்த்தைகளும் காணப்பட்டன. சட்டப்பேரவை அருகே சிக்னலில் காத்திருக்கும் போது, தேர்தலன்று வாக்குச் சாவடியில் தாமரையும், சூரியனும், இலைகளும், கையும் மோதிக் கொண்ட சம்பவம் நினைவுக்கு வந்தது.
ஆனந்தரங்கம் பிள்ளை வீதியில் திரும்பி பாரதி பூங்காவைப் புறக்கணித்து மணக்குள விநாயகர் கோவில் வாசலில் வண்டியை நிறுத்தினாள். உள்ளே சென்று அருகம்புல் மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து, கண் மூடி கை குவித்து தொழுதாள். “பிள்ளையாரப்பா.. இந்தத் தடவையாவது எனக்கு பிரமோஷன் கிடைக்கணும்.. காஷ்மீர்ல போஸ்டிங் போட்டா கூட நான் போகத் தயார்.. என் பிரார்த்தனை நிறைவேறிட்டா ஒனக்கு நூத்தியெட்டு தேங்கா உடைக்கறேன்..” என்று வேண்டிக் கொண்டாள்.
*
வங்கிக் கிளையை அடைந்தவுடன், ‘எப்போதும் புன்னகை’ என்ற மானசீக முகமூடியை அணிந்து கொண்டு இருக்கையில் உட்கார்ந்தாள் விநோதினி.
கடன்கள் பிரிவில் எழுத்தராக பணிபுரியும் நிறைமாத கர்ப்பிணி அவளிடம் வந்து “மேம்.. திங்கக்கிழமையிலருந்து நான் பிரசவ விடுப்புல போறதா இருந்தேன்.. மேனேஜர் பத்து நாள் கழிச்சு லீவு எடுத்துக்கச் சொல்றாரு.. பிராஞ்ச்ல ஆளே இல்லயாம்..” என்று கண்கலங்கினாள். “எனக்கு அடுத்த வாரம் ‘டியூ டேட்’ சொல்லியிருக்காங்க..”
அவளிடம் பேச முனைவதற்குள், கவுன்ட்டரில் ஆஜானுபாகுவான வாடிக்கையாளர் “விநோதினி செல்வராஜ்..” என்று மிரட்டினார்.
“நான்தான்.. என்ன வேணும் சார்..”
“எங்கப்பா ஒரு எக்ஸ்-ஸர்வீஸ்மேன்.. போன மாசம் ரெண்டு கோடி ரூபா டெபாஸிட்டை புது ஸ்கீம்ல மாத்திப் போட்டாரு.. அதுக்கான வட்டி நேத்திக்கே வந்திருக்கணும்.. இதுவரைக்கும் ‘எஸ்பி’ அக்கவுன்ட்ல வரவு வெக்கலை..” என்று ரசீதை நீட்டினார்.
“உக்காருங்க.. பார்க்கறேன்..” என்றாள்.
முதிர்ச்சியடைந்த பழைய வைப்பு நிதியை வேறு திட்டத்தில் புதுப்பிக்கும் போது மாதாந்திர இன்ட்ரஸ்ட் அவருடைய சேமிப்புக் கணக்குக்குச் செல்வதற்கான ஆணையைக் கணினியில் கொடுக்க விட்டுப்போனது தெரிந்தது. இப்போது அவ்வாறு செய்ய வங்கியின் மென்பொருள் இடமளிக்காது என்றறிந்ததும் விநோதினிக்குப் பதற்றம் ஏற்பட்டது.
“கனெக்டிவிட்டி இல்லை சார்..” என்று சமாளித்தாள்.
உடனே அவருடைய முகபாவம் மாறியது. “எதுக்கெடுத்தாலும் கம்ப்யூட்டர் மேல பழியைப் போட வேண்டியது.. இன்னிக்கு அந்த வட்டிக்காசை எடுத்துதான் அவருக்கு மருந்து மாத்திரை வாங்கணும்..” என்றார். அந்த முன்னாள் படைவீரரின் பென்ஷன் கணக்கில் லட்சக்கணக்கான பணம் இருப்பதைக் கணிப்பொறி காட்டிக் கொடுத்தது.
மேலாளர் இன்டர்காமில் அழைத்துக் கொண்டே இருந்தார்.
எதிரில் அமர்ந்திருந்தவர் “உங்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்குல தண்டச் சம்பளம்.. அலவன்ஸ்.. இன்சென்டிவ்.. எல்லாம் எதுக்குக் கொடுக்கறாங்க.. சீட்டைத் தேய்ச்சிட்டு போறதுக்கா.. ஒழுங்கா வேலை பார்க்கவே மாட்டீங்களா..” என்று சீறினார்.
“நீங்கள் அனுமானிப்பது போல நிர்வாகம் வங்கி அதிகாரிகளை வெல்வெட் சிம்மாசனத்தில் அமர்த்தி வெண்சாமரம் வீசுவதில்லை. முள்கம்பிகளால் சுற்றி எம்மை ஆணிப்பலகையில் நிறுத்தி இருக்கிறார்கள். ஆட்குறைப்பின் எதிரொலியாக பணிச்சுமையினாலும், மன அழுத்தத்தினாலும் நாங்கள் அவ்வப்போது சுவாசிக்கவே மறந்து விடுகிறோம். ‘பண மதிப்பிழப்பு’ சமயத்தில் அதீத வேலைப்பளுவினால் பல ஊழியர்கள் மதிப்பு மிக்க தங்களது உயிரையே இழக்க நேரிட்டது. எங்கள் கண்ணீரும், ரத்தமும் வெளியே தெரியாதவாறு நடிக்கப் பழகிவிட்டோம்” என்றெல்லாம் சொல்ல நினைத்தாள்.
“ஸாரி ஸார்.. என்ன பண்ண முடியும்னு பார்க்கறேன்.. கொஞ்சம் பொறுமையா இருங்க..” என்றபடியே மேனேஜர் அறையை நோக்கி வேகமாகச் சென்றாள். விநோதினிக்கு அடிவயிறு வலித்தது.
மேலாளர் “அந்த பிஸினஸ்மேன்.. மிஸ்டர் அஜய் செல்லய்யா லோன் தள்ளுபடி விஷயமா.. ஆஃபீஸ் நோட் போடச் சொன்னேனே.. தயார் பண்ணிட்டீங்களா..” என்று கேட்டார்.
“ஏறக்குறைய முடிச்சுட்டேன் சார்.. ஸ்டேட்மென்ட்ஸ் பிரின்ட் எடுக்கணும்..”
“அப்பறம்.. உங்களை ‘ஆரோவில்’ பிராஞ்சுக்கு டெபுடேஷன் அனுப்பச் சொல்லி.. ஜோனல் ஆபீஸ்லருந்து மெயில் வந்திருக்கு.. உடனே கிளம்புங்க..”
“சார்.. இங்க ஆடிட்டிங் நடக்குது.. நாளைக்கு நம்ம பேங்க் இன்ஸ்பெக்ஷன் வேற ஆரம்பிக்கப் போறாங்க..”
“அது மட்டுமில்ல.. ஏற்கெனவே ரெண்டு கிளார்க், ஒரு ஆபீஸர் லீவு.. அதுவும் எனக்குத் தெரியும்.. என்ன பண்றது.. ‘ஜிஎம்’ உத்தரவு.. மீற முடியாது.. சீக்கிரம் போங்க..”
விநோதினி அந்த மிலிட்டரிகாரரின் வட்டிப் பிரச்னையை மேனேஜரிடம் தெரிவிக்க, அதை அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொண்டு, “வில்லியனூர்ல ஒருத்தன் விவசாயத்துக்காக வண்டிக்கடன் வாங்கிட்டு கட்டாம இருந்தானே.. அவனோட டிராக்டரை ஜப்தி பண்ணனும்.. நீங்க டெபுடேஷன் போயிட்டு வாங்க.. அப்பறம் பார்க்கலாம்..” என்றார்.
தன் இருக்கைக்கு வந்த விநோதினி கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு, ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு எதிரே காத்திருந்தவரிடம் “சார் தயவுசெஞ்சு உள்ளே போய் மேனேஜர் கிட்ட பேசுங்க..” என்றாள்.
“ஒரு சீனியர் சிட்டிஸனோட டெபாசிட்டுக்கு வட்டி வரலேன்னு கத்திட்டிருக்கேன்.. என் பிரச்னையைத் தீர்க்காம நீங்க பாட்டுக்கு எங்கயோ கிளம்பிட்டீங்க.. நான் கேபினுக்கு போக மாட்டேன்.. இப்பவே உங்க ஹெட் ஆபீசுக்கு கம்ப்ளெயின்ட் அனுப்பப் போறேன்..” என்றவாறே மடிக்கணினியைத் திறந்தார்.
கஸ்டமருக்கு விளக்கிச் சொல்ல நேரமில்லாமல் வாசலுக்கு விரைந்து வண்டியைக் கிளப்பினாள்.
*
‘ஸ்ரீ அரபிந்தோ ஆஸ்ரம்’ என்ற பெயர்ப்பலகையைக் கடந்து உள்ளே வந்த விநோதினி இரண்டு கட்டிடங்களுக்கும் நடுவே மரங்களின் நிழலில் அமைந்துள்ள அன்னை மற்றும் அரவிந்தரின் பளிங்கு சமாதிகளை வணங்கினாள். விதவிதமான மலர்கள் மற்றும் அகர்பத்திகளின் சுகந்த நறுமணம் கமழ்ந்தது. பூவிதழ் கீழே விழுந்தால் கூட கேட்குமளவுக்கு அமைதி நிலவியது.
‘மதர் இந்தியா’ பத்திரிகையைக் கைப்பைக்குள் வைத்துவிட்டு, தன்னுடைய வழக்கமான இடத்தில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, தியானம் பண்ண ஆரம்பித்தாள். கண்களை இறுக்க மூடி சிந்தையை ஒருமுகப்படுத்த முயன்று தோற்றாள். மனம் அலைபாய்ந்தது.
இவ்வருடமும் தனக்குப் பதவி உயர்வு கிட்டவில்லை என்ற துக்கம் பொங்கியது. ‘எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு இரண்டையும் நன்றாகத்தானே செய்தேன். கிளை மேலாளரும் என்னைப் பற்றி உயர்வாகப் பரிந்துரைத்தார். வங்கிக்காக எவ்வளவு விசுவாசமாக உழைத்திருக்கிறேன். எனக்குரிய அங்கீகாரம் மறுக்கப்பட்டு விட்டதே’ என்று வெதும்பினாள்.
அந்த மாஜி ராணுவ வீரர் தனது டெபாசிட்டுக்கான மாதாந்திர வட்டி ஐந்து நாட்கள் தாமதமாக கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கிக்கும், ‘ஆம்பட்ஸ்மென்’னுக்கும் அனுப்பிய புகார்க் கடிதத்தினால், ‘சேவைக் குறைபாடு’ என்ற கரும்புள்ளி அவள் மீது விழுந்து பிரமோஷனுக்குத் தடைக்கல்லாக மாறிவிட்டது.
பாண்டிச்சேரி அன்னையின் கருணை ததும்பும் முகம் மனக்கண்ணில் தெரிந்தது. ‘கவலைப்படாதே மகளே.. நான் இருக்கிறேன்.. உனக்கு எந்தச் சமயத்தில் எதைக் கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். பொறுமையாக இரு’ என்று அந்த ஆன்மீகச்சுடரின் கனிவான குரல் விநோதினியின் செவிகளில் ஒலித்தது.
ஞாயிறன்று காலை ‘கூட்டு த்யாநம்’ செய்வதற்காக ஆசிரமத்திற்கு வந்திருந்த அவள், சஞ்சலத்தினால் அரை மணி நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வயிற்றை இழுத்துப் பிடித்தது. டாக்டரைப் பார்க்கக் கூட நேரமில்லாமல் பேங்கில் வேலைப்பளு அழுத்தியது. செல்வராஜ் தனது வியாபார விஷயமாக காரைக்கால் சென்றிருந்தான். கணவர் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று அப்போதைக்குத் தள்ளிப்போட்டாள்.
காந்தி சிலையருகில் பலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்க, சமுத்திரக் காற்று அவள் தலைமுடியை அலைக்கழித்தது. மணல்வெளியில் சற்று நேரம் அமர்ந்தபடி, தன் முயற்சியில் சற்றும் தளராத அலைகளைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டாள்.
*
‘இரைப்பை குடல் நிபுணர்’ என்று செந்தமிழில் எழுதப்பட்டிருந்த கிளினிக்கில் விநோதினி படுத்துக்கிடக்க, பெண் மருத்துவர் அவளது வயிற்றை ஸ்கேன் செய்து கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த மானிட்டரில் கருப்புத் திட்டுகள் அலைபாய்ந்தன.
செல்வராஜ் ஊரிலிருந்து திரும்பி வரத் தாமதமானதாலும், அவளுக்கு அடிவயிற்று உபாதை அதிகரித்ததாலும், டாக்டரைப் பார்த்து விடுவது என்று தீர்மானித்தாள். தனது கிளையின் வாடிக்கையாளரான ‘கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்’ நினைவு வந்தது. தட்டாஞ்சாவடி பகுதியில் அவருடைய சிகிச்சை மையத்திற்கு மாமனாருடன் வந்திருந்தாள்.
“எவ்வளவு நாளா வயத்து நோவு இருக்கு..”
“ஒரு மாசத்துக்கு மேலயே..”
“மூணு வேளையும் ஒழுங்கா சாப்பிடுவீங்களா..”
“காலையில ஓட்ஸ் கஞ்சி.. மதியம் பேங்க்ல நிறைய நாள் லஞ்ச் எடுத்துக்க நேரமிருக்காது.. கோர்ட், கடன் வசூல்னு போக வேண்டியிருக்கும்.. வெளியில காஃபி மட்டும் குடிப்பேன்.. ராத்திரி டிஃபன்..”
“கடைசியா ‘பீரியட்ஸ்’ எப்ப வந்துச்சு..”
விநோதினி யோசிக்கத் தொடங்கினாள். வங்கியில் நிதியாண்டுக் கணக்கு முடிக்கும் வேலைகளில் மூழ்கியதால் சென்ற மாதவிலக்கு வராமல் போனதைக் கூட அவள் கவனிக்கவில்லை. அம்மா, மாமியார், நாத்தனார் போன்றவர்கள் இருந்திருந்தால் நினைவூட்டியிருப்பார்கள். பெண் வாசனையே இல்லாத வீட்டில் புழங்குகிறாள்.
என்ன பதிலளிப்பது என்று தவித்துக் கொண்டிருக்கையில், கையுறையை அவிழ்த்துவிட்டபடியே “நீங்க எழுந்து உட்காரலாம்..” என்றார் லேடி டாக்டர்.
‘ஜெல்’லைத் துடைத்தெறிந்து விட்டு, மேலாடையைச் சரிசெய்தவாறே வெளியில் காத்திருந்த மாமனாரை அழைத்து வந்தாள்.
கைகழுவிக் கொண்டு இருக்கைக்குத் திரும்பிய மருத்துவர், “காலையில தலைசுத்தல்.. வாந்தி.. ஏதாச்சும் இருக்கா..” என்று கேட்டார்.
“இல்ல.. ‘ஸ்டமக் பெயின்’ மட்டும்தான்..”
“ஸ்கேன் பண்ணதுல.. நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு தெரியுது.. சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமகூட கருத்தரிக்க வாய்ப்பிருக்கு.. ‘க்ரிப்டிக் ப்ரெக்னன்ஸி’ன்னு சொல்வாங்க..” என்றார். “ஜிப்மர் ஆஸ்பத்திரியில என் தங்கச்சி ‘கைனகாலஜிஸ்ட்’டா இருக்கா.. அவ மூலமா இதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன்..”
உடனே முகமலர்ந்த மாமனார் “ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.. இந்தத் தகவலை ராஜுகிட்ட இப்பவே சொல்லு..” என்றபடியே டாக்டரிடம் பேச ஆரம்பித்தார் ”என் மருமகளுக்கு எப்பவும் பேங்க் நினைப்புதான்.. ஆபீஸ்ல பிரமோஷன் கிடைக்கலேன்னு வருத்தத்துல இருந்தா.. நீங்க ஒரு நல்ல செய்தி சொல்லிட்டீங்க..”
விநோதினி கணவரைத் தொடர்பு கொள்ள முயன்றுவிட்டு, “எங்கேஜ்டா இருக்கு மாமா..” என்றாள்.
“பேங்க்ல கிடைக்கற பதவி உயர்வு தற்காலிகம்தானே.. சர்வீஸ்ல இருக்கற வரைக்கும்தான் அதுக்கு மதிப்பு..” என்றார். “தாய்மைங்கறது அப்படியில்ல.. கடைசி வரைக்கும் புள்ளைங்களுக்கு அம்மாங்கற சந்தோஷம் நீடிக்கும்.. அது பணம் சம்பந்தப்பட்டது.. இது பந்தம்..”
“நான் வயத்து வலிக்கு மாத்திரை எதுவும் கொடுக்கலை.. உடனே இந்த ரிப்போர்ட்டை யாராவது ‘கைனிக்’கிட்ட காமிங்க.. மேற்கொண்டு அவங்க சொல்வாங்க..”
“ரொம்ப வருஷமா வாரிசு இல்லேங்கற ஏக்கம் இருந்தது.. இப்ப கடவுள் புண்ணியத்துல அந்தக் குறை தீர்ந்திடுச்சு..” என்று மகிழ்ந்தார் மாமனார். “சதா சர்வகாலம் பிராஞ்ச்.. வேலைனு ஓடிட்டே இருப்பா.. இன்னிக்கும் லீவு எடுக்க முடியாம.. ஒரு மணி நேரம் பெர்மிஷன் சொல்லிட்டு வந்திருக்கா..”
“எப்பவும் பேங்க் ஞாபகமாவே இருக்கறதால.. பொறக்கப் போற கொழந்தைங்களுக்கும் ‘டெபிட்’ ‘கிரெடிட்’னு பேர் வெச்சுடாதீங்க..” என்றார் மருத்துவர் சிரித்தபடியே.
“என்ன சொல்றீங்க..” விநோதினி குழப்பத்துடன் கேட்டாள்.
“உங்க வயத்துல ரெட்டைக் குழந்தை இருக்கு.. வாழ்த்துகள்.. டபுள் பிரமோஷன் கிடைச்சிருக்கு.. என்றார் டாக்டர்.

Leave a comment
Upload