
ஐயா..ஒரு ஆயிரம் ரூபா கை மாத்தா கொடுத்தீங்கன்னா பட்டணம் போய்ட்டு வந்திடுவேன் என சொல்லும்போதே குரல் நடுங்கியது சின்ன சாமிக்கு.
என்ன சின்னய்யா! நேத்துதானே நெல்லை ஏற்றி விட்டாய் கையிலே காசில்லங்குறே என்றார் மிராசு ராமசாமி
எங்க.. ஆழ உழுது அரும்பாடு பட்டாலும் விளைவது புண்ணியவானுக்கும்பாங்களே! அந்த கதையா இருக்கு எம்புழைப்பு என சலித்துக்கொண்டவர், என்னய்யா.. விவசாயி நாம லாபமோ, நட்டமோ விடமுடியாதில்லே என்ற ராமசாமி மடியிலிருந்து சின்னசாமி கேட்டதை எடுத்துக்கொடுத்தார்.
விறு விறு என வீடு திரும்பிய சின்னசாமி தனது மனைவியிடம் சீக்கிரம் எடுத்துக்கொடு, இப்ப வர பஸ் பிடித்தால்தான் ராத்திரிக்கு டவுனுக்கு போயி பட்டினம் பஸ்ஸைப் பிடிக்க முடியும் என்று அவசரப்படுத்தினான் மனைவி கொடுத்த சிறிய நகை மூட்டையை திறந்துப் பார்த்து,பின் அதனைச் சுருக்கிட்டு தனது துண்டினால் இடுப்பில் கட்டிக்கொண்டு கிளம்பினார்
பேருந்தில் சன்னலோரமாக அமர்ந்துக் கொண்ட சின்னசாமிக்கு முகத்தில் சில்லென்று காற்று வீச, நினைவுகள் சில மாதங்களுக்கு முன்னே நடந்தவை நினைவுக்கு வந்தன.
"நல்ல வருமானம், அரசு வேலை,அதுவும் RTO வேலைன்னு கண்ணாலம் கட்டி வச்சா போதுமா?! சொன்னதை செய்யத் திராணியில்லே என கடுஞ்சொல் மாமியார் கூறியதாக மக வந்து சொன்னதும்,
தப்பு நம்ம மேலதானே என்று ஆறுதல் கூறினார்.
இல்லைபா.. அவரும் அவங்க அம்மாகூட சேர்ந்துகிட்டு சொன்னதச் செய்யல வீராப்பு என்ன வேண்டிக்கிடக்கு என என்னை அடிக்கடி குத்தி காட்டிக்கொண்டிருக்கிறார் அப்பா, என்றாள்.
ஏம்மா அவர் எதாவது பண கஷ்டத்துல இருக்கிறாராம்மா எனக் கேட்டதற்கு அவருக்கென்ன கஷ்டம் பல வகையில் வருமானம் பாக்குறாரு என்றவள், இருந்தாலும் சொன்னதை கொடுக்கல அப்படின்னு கோபம் ரெண்டு பேருக்குமே இருக்கிறது தெரியுதுஎன்றாள் .
நீ இந்த மாதிரி பேசிட்டு இருக்காத! பாக்குறது அரசாங்க உத்தியோகம் வாங்கறது தப்புதான் இருந்தாலும்,அவருக்கு நாம யாரு புத்தி சொல்ல என அங்கலாய்த்துக்கொண்டதும், இந்த அறுவடையில் மீட்டுக்கொடுத்து விடுகிறேன்னு சொல்லும்மா என தேற்றியது நினைவில் வர,
இதோ,அதை கொடுக்க சுமந்து கொண்டு செல்கிறோம். இன்னும் உழுவைக் கடன், உரம் வாங்கிய கடன் என அடைக்க வேண்டியவை என்னவென்பதை நினைத்து தூக்கமிழந்த சின்னையாவை சுமந்த பேரூந்து சென்னை நோக்கி சென்றது.
அதிகாலை 4.30 மணிக்கு வடபழனி வந்து சேர்ந்துடுச்சே,
பக்கத்திலேதான் வீடு இந்நேரம் போய் கதவைத்தட்டி மகளை எழுப்ப மனசில்லாமல் அருகிலிருந்த பென்ஞ்சிலே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, பொழுது விடிந்ததும் போகலாம் என நினைத்து அமர்ந்தார்.
தனிமையான,அமைதியான அதிகாலை நேரம், தூக்கமிழந்த விழிகள் சின்னைய்யாவை தலை சாய்த்துப்படுக்க வைத்து விட்டது.
மழைச்சாரல் முகத்தில் திடீரென அடித்ததும் விழித்தவர்,வேட்டிய உதறி கட்டிக்கொண்டு கிளம்பியதும் மழை வலுத்திருந்தது.
“ வடபழனி காவல் நிலையம் காலை 6.30 மணிக்கெல்லாம் பரபரப்பாக இருந்தது. நிலைய எழுத்தர் முன் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் சின்னய்யா.. கண் அசந்திட்டேனுங்க, மழை வந்ததும் மக வீட்டிற்கு கிளம்பிவிட்டேன், அபார்ட்மெண்ட் வாசலிலே எனக்கு தெரிந்துவிட்டது
நகை பொட்டலம் எங்கோ விழுந்துவிட்டது, அதை தேடிக் கொண்டே இறங்கிய இடம் வரை சென்றேன், படு்த்தியிருந்த பென்ஞ்சின் அருகில் பார்த்தேன், ஆள் அரவமில்லை அந்த இடத்தில் என்றவர்,
அய்யோ.. என்ன செய்வேன் இப்போ... மகளுக்கு என்ன சொல்வேன் ... உழைச்ச காசுய்யா... அது, என புலம்பியவரை விபரங்களைக் கேட்டு பதிவு செய்த எழுத்தர், “ அமைதியாக இருங்க. ஐயா வந்ததும் நான் உங்க கூட வருகிறேன்,சென்று விசாரிக்கலாம், பார்க்கலாம் என தைரியம் சொல்லி அவரை ஆற்றுப்படுத்தினார்..
பேரூந்தில் விழுந்திருந்தால் கொஞ்சம் கடினம்தான் என கூறியதும் துக்கம் தொண்டையை அடைத்து நாக்கு வறண்டுப்போனது சின்னசாமிக்கு.
இருவரும் அங்கு சென்று தேடியும் கிடைக்காமல் நிலையம் வந்து சேர்ந்தனர். பின்பு மருமகனின் எண்ணை வாங்கி அவரை நிலையத்திற்கு வரும்படி அழைத்தார் தலைமை எழுத்தர்.
மாப்பிள்ளையைப் பார்த்ததும் பதறி எழுந்த எழுத்தர் விரைப்பாக சல்யூட் வைத்தார்.. சார் நீங்கன்னு சொல்லலை, தெரியாமல் உங்களை இங்கு கூப்பிட்டு விட்டேன், நீங்க போங்க சார்.. நான் அவரை வீட்டிற்கு அனுப்பி விடுகிறேன் என்ற போது, நிலையதினுள்ளே மாநகராட்சி பணியாளர்கள் நிலையத்திற்குள் வந்துக்கொண்டிருந்தனர்.
ஐயா...இந்த பொட்டலம் அங்க வடபழனி பேரூந்து நிலையத்தில் கிடந்தது, என் வீட்டுக்காரர்தான் இது... அது பெருக்கித்தள்ளும்
போது கிட்டிச்சு என அவர்கள் கொடுத்ததும் முகம் மலர்ந்தனர் மூவரும்..
இதான்யா... இதான். உள்ளே அடகு சீட்டு இருக்கும் பாருங்க என்ற பதறிய சின்னையா.. ரொம்ப நன்றிம்மா.. நீங்க இரண்டுபேரும் நல்லா இருக்கணும் என மனதார வாழ்த்தினார்.
உள்ளே அடகு மீட்ட சீட்டைப் பார்த்து ஊர்ஜிதமான எழுத்தர் சின்னையாவிடம் கொடுத்து எழுதி கையொப்பம் வாங்கிகொண்டார்.
கண்ணீர் மல்க வாங்கிய சின்னையா அதைப்பிரித்து பார்த்தார், தனது விரலால் எதையோ தள்ளித்தள்ளிப் பார்த்ததும்,
வாங்க மாமா வீட்டிற்கு கிளம்புங்கள் என்றார் மாப்பிள்ளை.
ஐயா... நாங்க ஒன்றையும் எடுக்கல.. எல்லாம் சரியாக இருக்குங்களா?! என கேட்டனர் தம்பதிகள்.
அந்த பொட்டலத்திலிருந்த ஒரு நீளமான செயினை எடுத்த சின்னசாமி ,
இந்தாம்மா இதை வாங்கிக்க.. என்று அந்த பெண்ணிற்கு கொடுத்தார்.
அய்யோ,உங்க நல்ல மனசுக்கு திரும்ப கிடைச்சது...இது வேண்டாங்க.. என்று வாங்கிட மறுத்தாள்.
நீயும் என் மகள்தான்மா இதை வாங்கிக்க..அப்பாகிட்ட வாங்கிறதா நினைச்சு வாங்கிக்க..என வலுயுறுத்தினார்..
நல்ல மனசுசார் உங்களுக்கு, என்ன விலை விக்குது இன்று.. எடுத்து கொடுக்கறீங்க.. அது வேண்டாங்கிறது... அது மனசு உங்களோட உசந்தது ஐயா என இருவரையும் பாராட்டினார் எழுத்தர்.
நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை ஆசை திரை விலகி நெகிழ்ந்துக்கொண்டிருந்தார், மனிதமனம் மாறி மனிதமணம் அங்கே வீசி கொண்டிருந்தது.
" இந்தாங்க மாப்பிள்ளை என அவரிடம் அனைத்து நகைகளையும் கொடுத்த சின்னய்யாவிடம்..
அப்பா....என்ற மாப்பிள்ளை, அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னை மன்னித்து விடுங்கள், வாங்க வீட்டிற்கு போகலாம்பா என்று அனைத்தபடி அழைத்துச்சென்றார் ஒரு மகனாக.

Leave a comment
Upload