
இலண்டனில் மூன்றாம் ஆண்டு கம்பன் விழா கடந்த சனி, ஞாயிறு(ஜூன் 27,28 தேதிகளில்) வார இறுதியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளும் இசை மற்றும் நடன நிகழ்வுகள் கம்பன் விழாவில் இடம்பெற்றிருந்தன. இந்த ஆண்டு அவற்றைத் தவிர்த்து, இயல் என்னும் அடிப்படையில் கம்பராமாயணம் சார்ந்த பேச்சுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. தமிழில் புலமை வாய்ந்து, ஆழ்ந்து சிந்திக்கும் பல அறிஞர் பெருமக்கள் தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும், கட்டணமின்றி , உணவு அளித்து, பல புதுமைகளை உள்ளடக்கி மெருகேறிக்கொண்டே செல்வது, விழா அமைப்பாளர்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.பல தன்னார்வ தொண்டர்களும் இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு இரவு பகல் பாராது உழைத்து தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர் .

தமிழகத்திலிருந்து மிக மூத்த பேச்சாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் இலக்கியச்சுடர் இராமலிங்கம் மற்றும் வளர்ந்து வரும் பேச்சாளரான தாமல் கோ.சரவணன் இருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலக்கியச்சுடரின் பேச்சைக் கேட்கும் போது, குறிப்பாக "நல்லிளம் சிங்கங்காள்" என்று தொடங்கும் அவரது உரை என் தமிழாசிரியை எனக்கு நினைவுபடுத்தியது. சிங்கக்குரலோன் என்று இவரை பற்றி மாணவியரிடம் கூறி மகிழ்வதோடு, ஒரு பேச்சு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் எங்களுக்கெல்லாம் எடுத்துக் கூறி பூரிப்பார். அது எத்தகையதொரு சத்திய வாக்கு என்பதை நேரில் அவரது பேச்சை கேட்கும் தருணத்தில் உணர்ந்தேன் .கர்ஜிக்கும் குரலில் ,ஆழமாகவும், கேட்போரை சிந்திக்க வைக்கும் வகையிலும் அமைந்திருக்கும் இவரது பேச்சுக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. இந்நிகழ்வில், "தந்தையும் தனயனும்" என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய தனியுரை, பிரகலாத சரித்திரத்தை எங்கள் கண்முன்னே படம்பிடித்துக் கொண்டுவந்தது . தாமல் சரவணனின் பேச்சு இளைஞனுக்கே உரிய துடிப்போடும், தமிழ் மொழியின் வளத்தோடும் நிறைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது, "ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்" என்கிற தலைப்பில் கம்பனின் புதுமைகளையும், அவன் கூறாத, சிறப்பான செய்திகளையும் கூறி, அரங்கை அதிர செய்தார். அவர் மேலும் பல உயரங்கள் தொட விகடகவியின் சார்பில் மனமாற வாழ்த்துகிறோம். சரவணன் அவர்களது தலைமையில் இளையோர் அரங்கில் பேசிய, லண்டனைச் சேர்ந்த இளம் பேச்சாளர்களின் தமிழ்ப் பேச்சும் சுவைபட அமைந்திருந்தது.


இலங்கையிலிருந்து உயர்திரு ஆறு.திருமுருகன் மற்றும் ஸ்ரீபிரசாந்தன் இருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர். திருமுருகன் அவர்கள் தமிழ் மற்றும் சமய சொற்பொழிவுகளிலும் சிறந்து விளங்குவதோடு, பல தொண்டு நிறுவனங்களையும் நிறுவியுள்ள சிறந்த மாமனிதர். இவரது பேச்சு மட்டுமல்ல, செயல்களும் இன்றைய இளைஞர்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கம்பராமாயணத்தில் இடம்பெற்ற உணர்ச்சி மிகுந்த தருணங்களை எடுத்துக் கூறிய இவரது எழிலுரை அருமையிலும் அருமை. நாங்கள் அனைவரும் அண்ணன் என்று அன்போடும், பாசத்தோடும் அழைக்கும் ஸ்ரீபிரசாந்தன், தனக்கே உரிய பாணியில், உணர்ச்சிகரமாகவும்,வீராவேசமாகவும், காதலியை வர்ணிக்கும் காதலனைப் போன்றும் பல பரிணாமங்களில் கம்பனை விளக்கிக் கூறினார். "பஞ்சு ஒளிர், விஞ்சு குளிர்" என்று சூர்ப்பணகை பற்றிய அறிமுகப் பாடலை கூறி, கதாபாத்திரத்தை ஆராய்ந்த விதம், அதை கேட்க, காணக் கண்கோடி வேண்டும். இலண்டன் கம்பன் கழக உறுப்பினரான எனக்கு, இந்த முறை பேச வாய்ப்பளித்த கம்பன் கழக அன்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் இலண்டன் கம்பன் கழகம் நடத்தி வருவதோடு, இதில் கலந்து கொள்ள வலியுறுத்தி பல தளங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த முறையும் அரங்கம் நிறைந்த கம்பன் விழா என்றாலும், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். மொழிப்பற்று என்பது, பேச்சளவில் தான் இருக்கிறதோ என்கிற ஐயத்தை இந்தக் காட்சி என்னுள் தூண்டியது. கடந்த இரு ஆண்டுகளை நான் ஒப்பிட்டுப் பார்த்தால், ஊடகத்துறையில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் வந்திருந்தபோது ஓரளவு இந்தியத் தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் .

அப்படி என்றால், நாம் மொத்தமாக ஊடகத்தின் அடிமைகளாகி விட்டோமா என்கிற எண்ணமும் எழுகிறது. இன்றைய சூழலில் ஒரு தரமான நிகழ்வில் கலந்து கொள்வதைத் தாண்டி, பிரபலங்களோடு புகைப்படங்கள் எடுப்பதிலும், அதனை தனது முகநூலில் பதிவிடுவதிலும் தானா கம்பன் ரசிக்கப்படுகின்றான். அடுத்த தலைமுறைக்கு நீங்கள் இலக்கியத்தை எடுத்துச் செல்வதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். இந்தத் தலைமுறை தமிழையும், தமிழ் சார்ந்த நிகழ்வுகளையும் புறக்கணிப்பது மன்னிக்க முடியாத குற்றம். "வாய்ச்சொல்லில் வீரரடி" என்கிற வார்த்தை இன்றைய இந்தியத் தமிழர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதே உண்மை!

Leave a comment
Upload