தொடர்கள்
சோகம்
இன்று போய் நாளை வருவாயா ??- பிரகாஷ் பாலகிருஷ்ணன்

20260604053659660.jpg

'பதினாறு வயதினிலே'விலே கோவையில் இருந்து 'கிழக்கே போகும் ரயிலில்' சென்னை வந்த 'ராஜன்' ஐ 'பாக்கியராஜ்' ஆக 'சிகப்பு ரோஜாக்கள்' கொடுத்து வரவேற்றது தமிழ் திரையுலகம் அவரை 'புதிய வார்ப்புகள்'ஆக கதாநாயகன் வாய்ப்புக்கொடுத்து மேலும் உயரச் செய்தது.

அந்த 'கன்னி பருவத்திலே' அவர் தீட்டிய 'சுவர் இல்லா சித்திரங்கள்' அவர் திரை வாழ்க்கையின் திருப்புனையான 'நிறம் மாறாத பூக்கள்'. அவர் வாழ்வில் பூத்த காதல் 'பாமா ருக்குமணி' என்றில்லாமல் பிரவீனாவை காதலித்து 'ஒரு கை ஓசை' யாய் இல்லாமல் இருவரும் கரம் பிடித்ததை மறக்க முடியுமா?

அந்த 'இளமை கோலத்தில்' அவரின் 'மௌன கீதங்கள்' இசைத்து திரை கதையாசிரியர் என்ற பெரும் சாம்ராஜ்யம் தொடங்கியதை மறக்க முடியுமா? 'மௌன கீதங்கள்' ஐ ரசிக்கும் பொழுதே 'இன்று போய் நாளை வா' என்று சொல்லி எல்லோரையும் 'விடியும் வரை காத்திரு'க்க 'அந்த ஏழு நாட்கள்' களை மறக்க முடியுமா?

'தூறல் நின்னு போச்சு' என்று வில்லனாய் வலம் வந்த நம்பியாரை காமெடி கலந்த நடிகராக்கியதை மறக்க முடியுமா? அது 'பொய் சாட்சி' அல்ல என்று சொல்லி 'டார்லிங், டார்லிங், டார்லிங்' என்று ரசிகர்களை அழைத்த நேரத்தில் காதல் மனைவி இறந்த பொழுது உனக்கிருந்த துக்கத்தை மறக்க முடியுமா?

'விதி' யால் பூர்ணிமாவின் 'முந்தானை முடிச்சு' வில் இணைந்த பந்தத்தைமறக்க முடியுமா? அது வெறும் 'தாவணி கனவுகள்' ஆகாமல் 'சின்ன வீடு' தேடாமல் இணைபிரியா பந்தமானதை மறக்க முடியுமா?

இன்றய முதல்வரின் தந்தைக்கு பெரும் வெற்றி கொடுத்த நீ 'நான் சிகப்பு மனிதன்' என்பதை மறக்க முடியுமா? யாருக்கு எழுதினாலும் குருவுக்கு எழுதிய 'கைதியின் டைரி' ஐ மறக்க முடியுமா?

ஹிந்தி சூப்பர் ஸ்டார் தோல்வி என்று எல்லோரும் சொல்ல அந்த டைரி ஐ கடைசி பாதையாக 'ஆக்கிரி ராஸ்தா' என்று பெரும் வெற்றி பாதையை அமைத்ததைமறக்க முடியுமா?

'எங்க சின்ன ராஜா' வாக நீ 'இது நம்ம ஆளு' தான் என்று திரும்பி வந்ததை மறக்க முடியுமா? எம்.ஜி.ஆர். மறைந்த பின்னும் அவரின் 'அண்ணா என் தெய்வம்' ஐ 'அவரச போலீஸ்' ஆக வந்து அவர் தோன்றும் பொழுது அவருக்கு விண்ணுக்கு கேட்கும் அளவில் கைத்தட்டு பெற்றதை மறக்க முடியுமா?

ஜோக்கராய் வந்து நீ ஆடிய 'ருத்ரா' தாண்டவத்தைமறக்க முடியுமா? 'ஆராரோ ஆரிராரோ' பாட்டு பாடி 'சுந்தர காண்டம்' கொடுத்ததை மறக்க முடியுமா? 'அம்மா வந்தாச்சு' என்று 'ராசுக்குட்டி' சொல்லிய நேரம் உன் 'வீட்டில் விசேஷம்' என்று சொன்னதை மறக்க முடியுமா?

'ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி' என்று சொல்லி பலநாள் காணாமல் பூத்த உன் 'பாரிஜாதம்' த்தை மறக்க முடியுமா?

உன் குருநாதரை பார்க்க உனக்கு என்ன அவ்வளவு அவசரம்?

நீ தோன்றும் நேரமெல்லாம் கருத்தும் சிரிப்பும் நிரம்பிய உன் திரை காட்சிகளைதொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது உன்னை மறக்க முடியுமா?

'இன்று போய் நாளை வா' என்று திரும்ப திரும்ப உன் படங்களை பார்க்க தூண்டிய உன்னை காலன் இன்று போய் நாளை வராமல் எடுத்து சென்றானே?

மரணித்த நீ என்றும் எங்கள் மனங்களில் 'இன்று போய் நாளை வா' என்றில்லாமல் என்றும் இருப்பாய். -- கண்ணீருடன்