
எண்பதாவது சுதந்திர தினம் நாம் கொண்டாடும் இந்த வேளையிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்கிறது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்த இருக்கிறார். இதற்காக டெல்லி செங்கோட்டை முதல் தலை நகரம் முழுவதும் 20000-க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு டெல்லி தலைநகரம் ஹை அலர்ட் வளையத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மக்களால் பெருவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் சுதந்திரக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த துப்பாக்கி முனை குண்டு துளைக்காத கூண்டு பல அடுக்கு கெடுபிடிகள் பாதுகாப்பு அரண் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு இப்படிப்பட்ட சூழலில் தான் இந்தியா சுதந்திர காற்றை இன்றும் சுவாசிக்கிறது.
பல நகரங்களில் பல அடுக்கு பாதுகாப்பு தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பு சோதனை என்பது தொடர்கதையாக தான் இருக்கிறது.
காஷ்மீர்
70-களில் குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீங்கள் காஷ்மீர் கடைகளில் உங்களை நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா என்று தான் கேட்பார்கள். காஷ்மீர் இந்தியாவில் தானே இருக்கிறது என்று நாம் சொன்னால் இல்லை இல்லை என்று அவசரமாக அவர்கள் மறுப்பார்கள். எல்லா வீடுகளிலும் பாகிஸ்தான் டிவி தான் முக்கிய இடத்தை வகிக்கும் தேசியக்கொடி என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவே தெரியாது. இது அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் குடியரசு தினம், சுதந்திர தினம் நாட்களில் அவசர அவசரமாக கொடி ஏற்றி அதே வேகத்தில் கொடிய இறக்கி மடித்து வைத்து விடுவார்கள். காஷ்மீரில் சுதந்திர தினம் குடியரசு தினம் இப்படித்தான் கொண்டாடப்பட்டது. எல்லாவற்றையும் மாற்றியது பாஜக அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை தரும் 370 சட்டப்பிரிவை நீக்கியது. காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசம் லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசம் என்று பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஊடுருவலை பெரிய அளவு தடுத்தது மோடி அரசின் சாதனை. இப்போது தேசியக்கொடி பறக்கிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டாலும் தேசியக்கொடி அவசர அவசரமாக இறக்கப்படுவது இப்போது இல்லை. அதே சமயம் நேபாளம், சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை இவை எவையுமே நமது நட்பு நாடுகள் என்று சொல்ல முடியாது. பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கை காரணமாக சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி செல்வதை துணிச்சலாக தடுத்து நிறுத்தி இருக்கிறது. மோடி அரசு .இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் ஒரு பிச்சைக்கார நாடு தான் .பணவீக்கம் பஞ்சம் பசி என்று இருந்தாலும் தீவிரவாதத்திற்கு பல கோடிகளை செலவழிக்கிறது. பாகிஸ்தான் அரசு .சீனா இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் நேபாளம் இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நிதி உதவி செய்து தங்கள் ஆதரவு நாடுகளாக திருப்பி வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்தியா மீதான பயம் சீனாவுக்கு இன்றும் தொடர்கிறது. இந்தியாவை பொறுத்த வரை உதட்டில் சிரிப்பு உள்ளத்தில் பகை சீனாவின் கொள்கை இதுதான். ஆனால், இந்தியாவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் கோபம் சீனாவுக்கு இப்போதும் இருக்கிறது.
பாராளுமன்ற ஜனநாயகம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் ஒத்திவைப்பு என்பது தான் அன்றாட செய்தியாக இருக்கிறது. மக்களவை இயங்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் செலவாகிறது என்று மக்களவைத் தலைவர் தெரிவிக்கிறார். நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 7023 நிமிடங்கள் வீணாகி உள்ளன. இதனால் மக்களின் வரிப்பணம் 175 கோடி வரை விரையம் ஆகி இருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் மக்களவை 19% நேரமும் மாநிலங்களவை 39% நடந்துள்ளது. இரண்டு அவைகளின் செயல்பாட்டுத் திறன் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் நேரலையில் ஒளிபரப்பப்படுகின்றன. .அவற்றுக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையும் தற்சமயம் அதிகரித்து வருகிறது. நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் நமக்காக என்ன பேசினார் என்று ஆர்வம் தொகுதி மக்களுக்கு இருப்பது இயல்பு. ஆனால், தேவையற்ற அமளி சர்ச்சை காரணமாக நாம் தவறான ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டோமோ என்ற ஆதங்கம் தொகுதி மக்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதே சமயம் ஓட்டுக்கு பணம் கொடுத்து தானே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உறுப்பினரின் எண்ணமும் தவறானது என்பதற்கு உதாரணம். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் .வாக்குக்கு பணம் தராமல் ஒரு கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுங்கட்சியாக மாறி இருக்கிறது. உங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஒரு கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை அரசியல் தலைவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
அதேசமயம் பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வருவது என்பது அபூர்வமாக இருக்கிறது. அவர் பாராளுமன்றத்துக்கு வருவதே தலைப்புச் செய்தி என்ற அளவில் தான் அவர் வருகை இருக்கிறது .இது ராகுல் காந்திக்கும் பொருந்தும் பண்டித ஜவஹர்லால் நேரு இந்திரா காந்தி போன்றவர்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற நடவடிக்கை உன்னிப்பாக கவனித்து ஆக்கப்பூர்வமான உறுப்பினர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பொறுமையாக பதில் அளித்த வரலாறும் உண்டு. இவற்றையெல்லாம் பாராளுமன்ற நூலகத்தில் உள்ள ஆவணங்களை படித்தாலே இப்போது இருக்கும். உறுப்பினர்களுக்கு தெரியும் பிரதமர் இந்திரா காந்தி மீது ஒன்பது முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் அவர் பொறுமையாக பதில் சொல்லி தான் சமாளித்தார் .இதுதான் பாராளுமன்ற ஜனநாயகம் மக்களுக்காக பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவது என்பது வேதனையான விஷயம் .இது மக்களின் வரிப்பணத்தை விரையம் செய்கிறோம் என்பதை எப்போது தெரிந்து கொள்வார்கள் .மக்களுக்காக எப்போது பேச போகிறார்கள் என்பதுதான் வாக்காளர்களின் ஆதங்கம்.
இந்தக் குளிர்காலகூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் மசோதாவை தவிர 11 மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன இதுவும் சரியான அணுகுமுறை அல்ல.
இலவசங்கள்
எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா மாநில அரசுகளும் இலவசங்களை வாரி வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. .நிரந்தர திட்டங்கள் பற்றி எந்த அரசும் யோசிப்பதில்லை. நதிநீர் இணைப்பு என்பது இந்தியாவின் பொருளாதரத்தை தூக்கி நிறுத்தும் என்ற உண்மையை அரசியல் தலைவர்கள் தெரிந்தும் தெரியாமல் தவிர்க்கிறார்கள். வறட்சி வெள்ளம் என்பது தொடர்கதையாக தான் இருக்கிறது. நியாய விலைக் கடைகளில் தரப்படும் இலவச அரிசி மற்றும் கோதுமை தரம் மிகக் கேவலம். இது அரசுக்கு தெரிந்தும் தெரியாமல் போல் நடிக்கிறது. இப்படி இலவச அரிசி, கோதுமை வழங்குவது பெரிய சாதனையாக மத்திய மாநில அரசுகள் பெருமை பேசுகின்றது இன்னொரு கேலி வேடிக்கை .அக்கபூர்வமான திட்டங்களை பற்றி எந்த அரசும் யோசிப்பது கிடையாது .சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் 1500 காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் போட்டி தேர்வுக்கு 15 லட்சம் பேர் எழுதினார்கள் .வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதைவிட ஒரு அளவுகோல் தேவையில்லை. மத்திய மாநில அரசுகள் நிரந்தர திட்டங்கள் பற்றி யோசிப்பதில்லை.
ஒரு பக்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று ஒரு குரல் இன்னொரு பக்கம் ஒரு இயக்குனர் ஜாதி இல்லாதவர் என்று ஒரு சான்றிதழ் தேவை என்று நீதிமன்றத்தில் வழக்கு ஜாதி ஒழிய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் மேடைப்பேச்சு 80 ஆண்டுகளாக அரசியல் பிம்பம் போலியாகத்தான் உருவெடுத்து இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு அடையாளம். ஆனால், பாரத பிரதமர் இந்தியா வளர்கிறது என்கிறார் குறிப்பிட்ட பொருளாதார இலக்கை விரைவில் அடைவோம் 2047-ல் நமது இலக்கு நிச்சயம் நடக்கும் என்று சொல்கிறார் .ஆனாலும் ஒரு பக்கம் வரி ஏய்ப்பாளர்கள், பல்லாயிரம் கோடி வங்கி கடனை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த பணக்காரர்கள், வங்கி கடனை கட்ட முடியவில்லை என்று தற்கொலை செய்து கொள்ளும் மானஸ்த விவசாயிகள் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை செய்யும் இளைஞர்கள் இப்படி 80 -வது சுதந்திர இந்தியாவில் நிறைய முகங்கள் இருக்கிறது. பிரதமர் மோடி இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதுதான் இன்று இந்தியாவின் கேள்வி. பிரதமரை உலகமே போற்றுகிறது 34 நாடுகள் அந்த நாடுகளின் உயரிய விருதுகளை தந்து அவரை கௌரவித்து இருக்கிறது .இந்தியாவுக்கும் அவர் நிறைய செய்திருக்கிறார். ஆனால், அவர் செய்ய வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கிறது இதுதான் உண்மை.


Leave a comment
Upload