அத்தியாயம் 5: மன்னிப்பு

விதுரர் பீஷ்மரை விட்டுச் சென்ற பின், தான் கூறியபடி விரைவில் திரும்பி வரவில்லை; சில நாட்கள் கழித்துத்தான் வந்தார்.
அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரை நோக்கி இரு கரம் கூப்பி நமஸ்காரம் செய்தார்.
"வா விதுரா, வா! சீக்கிரமாகத் திரும்பி வருகிறேன் என்றாயே... இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டதே?" என்றார் பீஷ்மர் பலவீனமான குரலில்.
"கடந்த சில நாட்களில் நடந்த ஒரு சில விஷயங்கள் உங்கள் காதில் பட்டிருக்கலாம் பெரியப்பா. அது பற்றி மீண்டும் உங்களிடம் கூற வேண்டாம் என்று நான் நினைத்தாலும், எனக்குத் தெரிந்த விவரங்களைத் தெளிவுபடுத்துவது என் கடமை என்று தோன்றுகிறது. வருத்தம் தரும் அந்தச் செய்திகளை மறுபடி உங்களிடம் கூறுவதற்காக அடியேன் வருந்துகிறேன்." என்று தயங்கியபடித் தொடங்கினார் விதுரர்.
"18-ஆம் நாள் போரின் இறுதியில், துரியோதனன் பீமனால் வீழ்த்தப்பட்டான். அன்றைய மாலைப் பொழுதில் பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்யகி மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் தங்களின் மகா வெற்றிக்குப் பின் பாண்டவர் பாசறைக்குத் திரும்பினர்.
அன்றிரவு கிருஷ்ணர் பாண்டவர்களிடம், 'இன்று இரவு நாம் பாசறையில் தங்கக் கூடாது; வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்குவோம்' என்று கூறினார்.
ஆனால், பாண்டவர்களின் ஐந்து புத்திரர்கள், துருபதனின் மகன்களான திருஷ்டத்யும்னன், சிகண்டி மற்றும் எஞ்சியிருந்த பாண்டவப் படை வீரர்கள் அனைவரும் தங்களின் வழக்கமான கூடாரங்களிலேயே உறங்கச் சென்றனர்.
அப்போது கௌரவப் படையில் எஞ்சியிருந்த தலைவர்கள் மூவரே: அஸ்வத்தாமன், கிருபர், மற்றும் கிருதவர்மா.
கிருபரையும் கிருதவர்மாவையும் பாண்டவர் கூடாரத்தின் வாசலில் காவல் காக்கச் சொல்லிவிட்டு, அஸ்வத்தாமன் நள்ளிரவில் பாண்டவர் பாசறைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்தான்.
அஸ்வத்தாமன், தனது தந்தை துரோணரைக் கொடூரமாகக் கொன்ற திருஷ்டத்யும்னனின் கூடாரத்திற்குள் புகுந்து முதலாவதாக அவனைக் கொன்றான். பின்னர், உறங்கிக் கொண்டிருந்த பஞ்ச பாண்டவர்களின் மகன்களையும் இரக்கமின்றிக் கொன்று தீர்த்தான்.
அதன் பின்னர், அங்கே உறங்கிக் கொண்டிருந்த சிகண்டியையும் பயங்கரமாகத் தாக்கினான். சிறிது நேரத்தில் சிகண்டியும் அங்கே இறந்து போனான்!
அதன் பின், பாண்டவர்கள் தங்கள் பிள்ளைகள் இறந்ததை அறிந்து கதறித் துடித்தனர்; அஸ்வத்தாமனைத் தேடிச் சென்றனர். பாண்டவர்களுக்கும் அவனுக்கும் இடையே கடுமையான அஸ்திரப் போர் மூண்டது. இறுதியாக, அஸ்வத்தாமன் பாண்டவ வம்சத்தின் கடைசி வாரிசான உத்தரையின் வயிற்றில் இருந்த கருவை (பரிட்சித்துவை) அழிக்க பிரம்மாஸ்திரத்தை ஏவினான். ஆனால், கிருஷ்ணர் அந்த வாரிசைக் காத்து, அஸ்வத்தாமனின் நெற்றியில் இருந்த நாகமணியைப் பறித்து, அவனை என்றென்றும் அலைந்து திரியுமாறு நாட்டை விட்டு விரட்டிவிட்டார்."
"இப்போது ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் தர்மன் முடிசூடப் போகிறான். பாண்டவர்கள் அனைவரும் விரைவில் உங்களை வந்து பார்ப்பார்கள் பெரியப்பா..." என்று சொல்லி முடித்தார் விதுரர்.
பீஷ்மர் நீண்டதொரு பெருமூச்சு விட்டார்.
"அவரவர்கள் செய்த தவறுகளின் அளவுக்கு ஏற்ப அவர்களுக்குத் துன்பம் ஏற்படுவது பிரபஞ்ச விதி விதுரா. அதனால்தான் இவ்வளவு கொடூர மரணங்கள்! தர்மனும் பாண்டவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல; அவர்களுக்கு என் அனுதாபங்கள்.
ஆனால், பாவம் சிகண்டி... என் மீது அவளுக்கு இருந்த வன்மத்தைத் தவிர, வேறு எந்தத் தவறும் அவள் இந்த ஜென்மத்தில் செய்யவில்லையே!
அவளுக்கு ஏன் அஸ்வத்தாமனின் கையால் அவ்வளவு கொடிய இறப்பு?"
என்றார் பீஷ்மர் வேதனையுடன்.
சிறிது நேரம் பேசாமல் மௌனமாக இருந்த விதுரர், பீஷ்மரை நோக்கி மீண்டும் கைகூப்பிக் கூறினார்:
"பிதாமகரே! நீங்கள் கேட்டுக் கொண்டபடி என்னால் சிகண்டியை உங்களிடம் உயிருடன் கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை. ஆயினும், சிகண்டி மரணிக்கும் முன் நடந்த ஒரு மிக முக்கியமான செய்தி என்னிடம் உள்ளது. அதை உங்களிடம் கூறலாமா?"
"ஆகா! தாராளமாகக் கூறு விதுரா!" என்றார் பீஷ்மர் ஆர்வத்துடன்.
"அன்று நள்ளிரவில் பாசறையில் பாண்டவ புத்திரர்களையும், திருஷ்டத்யும்னனையும், சிகண்டியையும் கொன்ற அஸ்வத்தாமன், நேராகச் சென்று இறக்கும் தருவாயிலிருந்த துரியோதனனிடம் இந்தச் செய்தியைக் கூறினான். அந்த விவரங்கள் இன்று உலகிற்கே தெரியும். ஆனால், அஸ்வத்தாமன் கூறியதில் ஒரு முக்கியமான செய்தியை இப்போது தங்களிடம் சமர்ப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்."
"நள்ளிரவில் அஸ்வத்தாமன் சிகண்டியைத் தாக்கியபோது, சிகண்டி மரணக் காயமடைந்து சரிந்தான். அப்போது அஸ்வத்தாமன், 'மாவீரன் சிகண்டியே, என்னை மன்னித்துவிடு! உன் மீது எனக்கு எந்தத் தனிப்பட்ட பகையும் இல்லை. இது என் தந்தையைக் கொன்றவர்களுக்கான பழிவாங்கல்; என் கடமை என்று நினைத்துச் செய்தேன்' என்று கூறி கை கூப்பினான். தன் வாழ்க்கையின் கடைசிப் படியில் நின்றிருந்த சிகண்டி, அஸ்வத்தாமனிடம் தன் இறுதி வேண்டுகோளைக் கேட்டான்:"
'அஸ்வத்தாமனே! நான் யார் உன்னை மன்னிப்பதற்கு? உனக்குக் கடமையாகத் தோன்றியதை நீ செய்தாய்; உனக்கும் எனக்கும் நடுவில் தனிப்பட்ட பகை ஏதுமில்லை. என் வாழ்நாள் முழுக்கப் பீஷ்மரைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையிலேயே வாழ்ந்திருந்தேன் நான். கடைசியில் அதை நிறைவேற்றியும் விட்டேன்.'
'ஆனால், அவர் போர்க்களத்தில் கீழே சாய்ந்த அன்றே, என் மனதிலிருந்த கோபமும் பழிவாங்கும் வெறியும் என்னை விட்டு முற்றிலுமாக ஒழிந்துபோயின. பீஷ்மரைப் பழிவாங்க நான் கடைசியில் உபயோகித்த அந்தப் பெண்மை கலந்த வழிமுறைக்காக எனக்குக் கிடைத்த பரிசுதான், உன் கையால் கிடைத்த இன்றைய மரணம் என்று நான் நினைக்கிறேன்.'
'இன்று என் மனம் மிக அமைதியாக இருக்கிறது. கங்கையின் புத்திரனான மாவீரர் பீஷ்மரிடமும், அவரது அன்னையான கங்காதேவியிடமும் என் மனமார்ந்த வருத்தங்களையும் மன்னிப்புகளையும் நான் கோருகிறேன். என்னுடைய இந்த இறுதிச் செய்தியைத் தயவுசெய்து பிதாமகர் பீஷ்மரிடம் சேர்த்துவிடுவாயா அஸ்வத்தாமா?'
"இவ்வாறு கூறியபடியே தன் உயிரைத் துறந்தான் சிகண்டி. இதுதான் பெரியப்பா, சிகண்டியின் ஆன்மா உங்களுக்குச் சமர்ப்பித்த மன்னிப்புக் கடிதம்!" என்று நெகிழ்ச்சியோடு முடித்தார் விதுரர்.
கங்கையின் குமாரனான பீஷ்மர் இதைக் கேட்டவுடன், ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
நிச்சயமாக அது ஒரு நிம்மதிப் பெருமூச்சாகத்தான் இருந்திருக்க வேண்டும்! நினைத்த நேரத்தில் தன் மரணத்தை அழைக்கும் 'இச்சை மரண வரம்' பெற்ற அந்த மாமனிதருக்கு, தன் மனதில் பல வருடங்களாக இருந்த அத்தனை பாரமும், குற்ற உணர்ச்சியும் அப்போது அப்படியே கழன்றுபோயின.
உத்தராயண புண்ணிய காலத்துக்காக... இந்த உலகை விட்டுத் தன் ஆன்மா நீங்கும் அந்தப் புனித நேரத்துக்காக... அவர் எல்லையற்ற மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் காத்திருக்க ஆரம்பித்தார்!
(முற்றும் )

Leave a comment
Upload