பெருந்துறையில் உள்ள பண்ணைக்கு கொண்டுசெல்லப்பட்ட இரண்டு லார் கிப்பன்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன

நடிகர் விக்ரம் லார் கிப்பனுடன் இருக்கும் ரீல் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் ஈஞ்சம்பாக்கம் பண்ணை வீட்டில் இருந்த இரண்டு லார் கிப்பன்கள், அவற்றின் அசல் உரிமையாளரான ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதனிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது வனத்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெருந்துறையில் உள்ள பண்ணை வீட்டில் இந்த அரிய வகை குரங்குகள் இருப்பதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்ததுடன், அவற்றை தற்போது பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். சென்னை வனவிலங்கு வார்டன் அளித்த உத்தரவின் பேரில், கேசவநாதனின் வளாகத்தை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிலி அப்பாலா நாயுடு தெரிவித்தார்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை வனத்துறை குழுவினர் பெருந்துறை பண்ணை வீட்டுக்குச் சென்று இரண்டு லார் கிப்பன்கள் அங்கு இருப்பதை உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கேசவநாதன் மணிப்பூரில் இருந்து இரண்டு பெண் கிப்பன்கள் மற்றும் ஒரு ஆண் கிப்பன் என மொத்தம் மூன்று லார் கிப்பன்களை வாங்கியதும், அவற்றை வைத்திருக்க மாநில வனவிலங்கு அதிகாரிகளிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்ததும் தெரியவந்தது.
அவற்றில் இரண்டு கிப்பன்கள் பின்னர் ரங்கநாதனிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது ஈஞ்சம்பாக்கம் பண்ணை வீட்டில் வளர்க்கப்பட்டன. அங்கு அவரது உறவினரான நடிகர் விக்ரம், அவற்றில் ஒன்றுடன் விளையாடியது ரீலில் பதிவாகியிருந்தது. மூன்றாவது கிப்பன், கேசவநாதனின் பெருந்துறை பண்ணை வீட்டுக்கு வந்த சிறிது நாட்களிலேயே உயிரிழந்தது. ஆனால், அதன் இறப்பு குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
“கிப்பன் உயிரிழந்தபோது, கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேதப் பரிசோதனை நடத்தி எங்களுக்குத் தகவல் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்,” என்று அப்பாலா நாயுடு கூறினார்.
கட்டாய உடைமைச் சான்றிதழைப் பெறுவதற்கு முன்பே உயிருடன் இருந்த இரண்டு கிப்பன்களும் ரங்கநாதனின் பண்ணை வீட்டுக்கு மாற்றப்பட்டிருப்பதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
வெளிநாட்டு விலங்குகளை இறக்குமதி செய்யும் எவரும், அவற்றை விற்பனை செய்யவோ மற்றொருவருக்கு பரிசாக வழங்கவோ முன் வனத்துறையிடம் இருந்து உடைமைச் சான்றிதழைப் பெற வேண்டும். விலங்கைப் பெறுபவரும் அதன் வருகையை முறையாக அறிவித்து, தமது பெயரில் உடைமைச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும், என தெரிவித்தனர் அதிகாரிகள்.

Leave a comment
Upload