தொடர்கள்
விகடகவியார்
மீண்டும் கூவம் ? ஜாசன்

20260715084413219.jpg

விவசாயம், வீட்டு உபயோகம் ,சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது கூவம் ஆறு என்று சொன்னால் நம்புவீர்களா ? ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன்பு சுத்தமான குடிநீர் என்றால் அது கூவம் ஆற்று நீர் என்று இருந்தது உண்மை. நகரப் பகுதிகளில் படகு போக்குவரத்துக்கு கூட கூவம் பயன்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் முதல் பகுதியில் கப்பல் போக்குவரத்து நடந்தது. கூவம் ஆறின் முடிவு கடலுக்கு அருகில் இருந்ததும் ஒரு காரணம்.

ஆனால், இப்போது 'வாயைத் திறந்தால் கூவம் 'என்று அவதூறு வார்த்தைகளுக்கு உதாரணம் ஆகிவிட்டது. அந்த அளவுக்கு கழிவு நீர் சாக்கடை குப்பை சகலமும் நிறைந்த நாற்றம் அடிக்கும் மிகப்பெரிய சாக்கடையாக இன்று கூவம் காட்சி அளிக்கிறது. சென்னை மாநகரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் கூவத்தை ஒப்பிடும்போது அது சென்னையின் கருப்பு புள்ளிதான் கொஞ்சம் பெரிய கருப்பு புள்ளி .கூவம் ஆறு. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கேசவரம் அருகே தொடங்கி மேற்கு மற்றும் மத்திய சென்னை வழியாக பாய்ந்து நேப்பியர் பாலம் அருகே வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது .கூவம் ஆறு ஆழம் அதிகம் இல்லை. எனவே தண்ணீர் மெதுவாகத்தான் பாயும் அதிக அளவு கழிவு குப்பைகள் கொட்டுவதால் முக துவாரம் அடைபடுதல் வெள்ளப்பெருக்கு போன்றவை கூவம் கரையோரம் உள்ள மக்களை மழை காலத்தில் பெரிய அளவு பாதிப்பு செய்யும். 2014 -ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கூவம் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்திய போது அதன் வழித்தடத்தில் 118 இடங்களில் ஆற்றுக்குள் கழிவுகள் திறந்து விடப்படுவதை மாசுக்கட்டுப்பாடு வாரியம் கண்டறிந்தது. ஆற்றில் கழிவுநீர் திறந்து விடப்படும் இடங்களை அடைக்காமல் ஆற்றை சுத்தப்படுத்துவதில் மட்டும் அரசு கவனம் செலுத்துவது பணத்தை வீணடிக்கும் செயல் என்கிறார்கள் நீரியல் ஆய்வாளர்கள். கூவம் ஒரு கொள்கை தோல்வி என்பதை எந்த ஆட்சியாளர்களும் ஒப்புக்கொள்ள மறுத்து அவர்கள் சுய லாபத்திற்காக கூவத்தை சுத்தப்படுத்துகிறோம் என்று கோடிகளை கொள்ளையடிக்கிறார்கள் என்ற விமர்சனத்தையும் நீரியல் ஆய்வாளர்கள் குற்றச்சாட்டாக சொல்கிறார்கள். நாள்தோறும் தொடர்ந்து நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்காமல் தூர் வாருவது ,வேலி அமைப்பது ,அழகுபடுத்தல் என்ற பெயரில் ஊழல் செய்து பணத்தை கொள்ளை அடிக்கிறது ஆளுங்கட்சி என்பதுதான் உண்மை. திருவள்ளூரில் கூவம் என்ற ஊருக்கு அருகே இந்த ஆறு இருந்ததால்கூவம் ஆறு என்று அழைக்கப்பட்டது என்று மீனவ நண்பர்கள் கூறுகின்றனர். இந்த நதியில் அளவிட முடியாத எண்ணிக்கையில் இறால் மீன்கள் கிடைக்கும் என்று எங்கள் தாத்தா சொல்லி ஆதங்கப்படுவார் என்கிறார் ஒரு மீனவர் உள்ளூர் மீனவர்களுக்கு வருமானத்தை அள்ளித்தரும் சொர்க்கமாக அந்த காலத்தில் இருந்தது என்றும் சொல்கிறார் அந்த மீனவர். கூவம் அடையாறு ஆகிய நதிகளை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் ஆளுங்கட்சி பல கோடிகளை வீணாக்குகிறது செய்கிறது. ஆனால், எந்த பலனும் இல்லை. 1967-ஆம் ஆண்டு திமுக அரசு வந்த போது கூவம் மேம்பாட்டு திட்டம் தொடங்கி 1970 வரை நடந்தது .நதியில் திறந்து விடப்படும் கழிவுகளை திசை மாற்றுவது ,கரைகளை பலப்படுத்துவது,முகத்துவாரத்தில் மணல் சேராமல் பார்த்துக் கொள்வது அல்லது தடுப்பது படகுத்துறை அமைப்பது என்ன பெரிய அளவில் திட்டமிடப்பட்டது. 1973-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கூவத்தில் படகு சேவை தொடங்கி வைத்தார் . ஆனால், அந்தத் திட்டத்திற்கு பெரிய அளவு ஆதரவு கிடைக்கவில்லை சில மாதங்களில் முடங்கிப்போனது .கருணாநிதியின் ஆட்சி ஊழல் பற்றி குறிப்பிடும்போது கூவம் ஊழலும் பேசும் பொருளானது. 1998-ஆம் ஆண்டு திமுக அரசு நதி மேம்பாட்டிற்காக 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. 2000 -2001 காலகட்டத்தில் சென்னை நகர நதி பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியது .எல்லாமே ஊழல் தான் கூவம் சீரமைக்கப்படவில்லை . அதிமுக ஆட்சியிலும் கூவத்தை சீரமைக்கிறோம் என்று புறப்பட்டார்கள். அதற்காக 3833 கோடி திட்ட மதிப்பீடு என்று முடிவு செய்து முதல் கட்டமாக 500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா அம்மையார் இது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று முடிவு செய்து அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டார். அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் அமைச்சர் நேரு கூவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக 604.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக சொன்னார். ஆனாலும் கூவம் நாற்றம் கழிவுகள் தொடர்கதையாகத்தான் இருந்தது தொடர்கிறது .

தற்போது தமிழக வெற்றிக்கழக அரசும் கூவம் ஆற்றின் மீது தனது பார்வையை திருப்பி இருக்கிறது .இந்த அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் கூவம் மற்றும் அடையாறு நதியை சென்னையின் அடையாளங்களாக மாற்றுவதற்கு உலகளாவிய டெண்டர்கள் கோரப்பட்டு, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யப்படும். கூவம் மற்றும் அடையாறில் படகு பயணம் செய்யும் ,குழந்தைகள் ஆனந்தமாக குளித்து மகிழும் அளவுக்கு நதிகளின் தரம் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருக்கிறார். ஊழலின் ஊற்றுக்கண் கூவம் என்பது தான் வரலாறு .ஜோசப் விஜய் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.