
ஹலோ 8321 மாலாக்காதானே, மேடவாக்கம், கூட் ரோடு பிக்அப் என தகவல்
சொல்லிய மறுமுனை டையத்திற்கு போயிடுங்க என உத்திரவாக வந்ததும்
மணியைப் பார்த்த மாலாவிற்கு மதியம் 1.30 என காட்டியது கை கடிகாரம்.
இந்த தொழிலில் நேரமே கிடையாது, ரோட்லேயே நிக்கணும், எப்போ
கூப்பிட்டாலும் போகனும், மறுத்தால் அன்று முழுவதும் call இருக்காது என
நினைத்தவள் சரியென ஒத்துக்கொண்டாள்.
மதியம் தனது மகளை பெண் பார்க்க வருவதாக சொன்னார்களே
அவர்கள் வருவதற்குள்ளாவது நாம் வீட்டிற்கு சென்றுவிடவேண்டும் என
இப்போதே கவலைத்தொற்றிக்கொண்டது மாலாவிற்கு.
சுமாரான வேலையில் இருக்கும் தன் ஒரே மகள் ஆஷாவை ஒரு நல்ல
இடத்தில் திருமணம் செய்து கொடுத்திட வேண்டும் என எல்லா
அம்மாக்களைப்போலவே இவளுக்கும் ஆசைதான். அதற்காகத்தான் காலம்
நேரம் பாராமல் உடல்நோக உழைத்துக் கொண்டியிருக்கிறாள் மாலா.
தன் கணவனைக் குடிக்கு இழந்த பிறகு உறவினர்கள் எவ்வளவோ
அறிவுரைகள் சொன்னார்கள் இதெல்லாம் வேண்டாம், நம் குடும்பத்திற்கே
அவமானம் என்றார்கள்,
இன்று அவமானம் என சொல்பவர்கள்தான், நாளை காசு பணம்
கையில் இல்லேனா நக்கலாக சொல்லிக்காட்டுவதோடு சரி, உதவ
மாட்டார்கள் ஆனால் உபத்திரவத்திற்கும் குறைவிருக்காது என உணர்ந்து
முடிவு செய்துதான் இந்த தொழிலில் இறங்கினாள் மாலா.
ஏதோ ஒரு நாளைக்கு இரண்டு மூன்று நபர்கள் வருவதினாலே
கொஞ்சமாக கையில் பணம் புரளுது,அதை சிறுகச்சேர்த்து மகளின் மணம்
முடித்து விடவேண்டும் என்ற கொள்கையோடு மனத்திற்கு பிடித்து இந்த
வேலையைச் செய்கிறாள்.
மேடவாக்கம் நகர் உள்ளே வந்ததும்,போனை எடுத்து விலாசம் மற்றும்
வருவதற்கான சரியான ரூட்டைக்கேட்டு அந்த வீட்டின் முன் நிறுத்தானாள்
வாகனத்தை ஒலா வாடகை வண்டி ஓட்டுநர் மாலா.
போகலாமா சார் என மாலா கேட்க, அண்ணாநகர் ஆர்ச் போம்மா என்று
பதில் வந்தது அவர் மனைவியிடமிருந்து..
GPS ஆன் செய்து வாகனத்தை லாவகமாக இயக்கினாள் மாலா.
ஏனம்மா ? நீ எப்படி இந்த டிரைவிங் லைனில் வந்தாய் ? என அக்கறையாக
கேட்டவர் , மனைவி தன்னை முறைத்ததைக் கூட கவனியாமல் என்னிடம்
பதில் வாங்குவதிலேயே குறியாக இருந்ததை ரியர்வியூ கண்ணாடியில்
பார்த்ததும் புரிந்தது மாலாவிற்கு..
சிரிப்பை பதிலாக கொடுத்து என் வீட்டுக்காரர் கல்யாணமான புதிதில்
எனக்கு கற்றுக்கொடுத்தது சார் இது, மேலும் டிரைவிங் பிடிச்சிருக்கு சார்
அதனால் செய்கிறேன் என்றதும்,
போதும் பேசியது ரோட்டைப் பார்த்து கவனமாக ஓட்டு என்று பயத்தோடு
மனைவி கூறியதும் புரிந்தது மாலாவிற்கு ..சாருக்குத்தான் மண்டை நிறைய
கேள்விகள் இருந்திருக்கும் போல.. ஆச்சிரியமாக என்னைப் பார்த்தபடி
வந்தார்.
ஹலோ, சந்திரா வீட்டிலிருக்கியா ? நாங்கள் இங்கியிருந்து கிளம்பி
விட்டோம், தம்பீ சரவணனை ஆபிஸிலிருந்து நேரே அங்கே வரச் சொல்லி
விடுகிறேன் நீயும் நேரத்திற்கு வந்துவிடு என்று கூறினாள்
சரவணா, ஆபீஸ் முடிந்து நேரே இன்றைக்கும் அங்கே போயிடாதேடா,
ஒழுங்கா டிரெஸ் மாத்திகிட்டு அந்த வீட்டிற்கு வந்திடு,
நாங்கள் உனக்காக அங்கே காத்தியிருக்கோம், முடிந்தால் பர்மிஷன் போட்டு
வந்துவிடு ப்ளீஸ் இன்றைக்கும் அங்கே போயிடாதேடா என கொஞ்சினாள்
அம்மா,
அவன் போகலை என்றாலும் நீயே ஞாபகப்படுத்திவிடுவாய் போலிருக்கே,
அதெல்லாம் இன்றைக்குப் போகமாட்டான் கவலைப் படாதே என தேற்றினார்..
எல்லாம் என் தலையெழுத்து, என தலையில் அடித்துக்கொண்டவள்,
இப்படி ஒரு கெட்டபழக்கம் எங்கியிருந்து வந்ததோ தெரியலை எம்
பிள்ளைக்கு ? எல்லாம் இந்த அரசும்,அவன்
சேர்க்கையும்தான் காரணம் இரண்டும் சரியில்லை என்றாள் அம்மா..
இவன் புத்தி என்ன புடலாங்காய் வாங்கப் போனதா? புத்தியில்லே?!
அரசே கடைகளை திறந்தாலும் எல்லோருமா குடிக்கிறானுக ?
இவன் சரியில்லை அதை முதலில் சொல்லு என்றார் அப்பா..
ஆமாம் உடனே வந்திடுங்க, உங்க டார்ச்சரனாலேதான் அவன் குடிக்கவே
ஆரம்பித்தான், வேலை இல்லாமல் ஆறுமாதம் வீட்டிலிருந்தான் என அவனை
கரிச்சி கொட்டினீங்களே அப்ப ஆரம்பித்ததுதான் இந்த பழக்கம், இப்போ நான்
சம்பாதிக்கிறேன் குடிக்கிறேன் என்கிறான் என்ன செய்வது என தலையில்
அடித்துக்கொண்டாள் அம்மா
இதெல்லாம் எப்போ திருந்திறது ? கல்யாணம் ஆகிறது என நொந்துக்
கொண்டார் அப்பா
யார் குடிக்கலை, அப்படி பார்த்தால் பாதி பேருக்கு திருமணமே ஆகாது,
அதுவும் என் பையனுக்கு என்ன குறைச்சல் கை நிறைய சம்பாதிக்கிறான்,
சொந்தமாக அவன் பெயரிலே வீடு இருக்கு, இவை எதுவும் பெண் வீட்டாருக்கு
தெரியக்கூடாது, ஆமாம் பார்த்துக்கோங்க... என்று அடக்கிய அம்மாவை
கண்ணாடி வழியாகப் பார்த்தாள் மாலா.
கல்யாணம் முடிந்தால் எல்லாம் சரியாகிடும்,வருபவள் வந்து சொன்னால்
கேட்பான், மீதியை அவள் பார்த்துப்பாள் என்ற அம்மாவை பார்த்து தனக்குள்
சிரித்துக்கொண்டாள் மாலா.
அண்ணாநகர் வரவும் சாந்தி மருத்துவமனையருகே இறங்கி பூ மற்றும்
பழங்கள் வாங்கிக் கொண்டவர்களை இறக்கி விட்டுவிட்டு வாழ்த்துக்ளைக்
கூறி தனது வீட்டிற்கு புறப்பட்டாள் மாலா.
மாலாவின் மனது முழுக்க அவர்களின் பேச்சே வந்துப்போனது,
அவர்களின் பிள்ளை குடிப்பதை நிறுத்துவது வீட்டிற்கு வரும் மருமகளின்
பணி என்பதைப்போல் பேசியதும், தனது மகன் மீது எந்த தவறுமில்லை,
எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்று அவர்கள் நினைப்பதும்,
பாவம் யார் வீட்டுப் பெண்ணோ அதுவும் தன்னைப் போலவே அவதிப்
படபோகிறது என வருந்தி நினைத்தபடி வாகனத்தை இயக்க, இவளிருக்கும்
கணபதி நகர் வந்தியிருந்தது.
வாசலில் நின்ற ஆஷா, காரின் அருகே வந்து, மாப்பிள்ளை வீட்டார் வந்துக்
கொண்டிருப்பதாக தகவல் சொல்ல, வந்தால்.... வரவேற்று உட்கார வை
ஆஷா, அம்மா பூ,பழங்கள் வாங்கி வருகிறேன் என்று சென்றவள் வாங்கிக்
கொண்டு தனது வீடு திரும்பினாள்.
வாங்க..வாங்க என வந்தவர்கள் மாலாவை வரவேற்றதும், வெட்கப்பட்ட
மாலா, நான்தான் உங்களை எல்லாம் வரவேற்கணும், இதோ வந்திட்டேன்,
பேசிக்கிட்டிருங்க என்று அவர்களைப் பார்த்தபடி உள்ளே வந்தாள்.
நிசப்தமாக இருந்ததை மாப்பி்ள்ளையின் அம்மாவே முதலில் பேசி
உடைத்தாள். ஆஷாவைப் பற்றியும் உங்களின் உழைப்பைப்பற்றியும் நிறைய
சொல்லியிருக்கான் என் பையன். பொறுப்பானவள் என்பது அவளைப்
பார்த்ததும் தெரிகிறது.
எங்கள் பையனுக்கு சுமாரன வேலைதான் ஆனால் அவனும் ரொம்ப
பொறுப்பானவன், அக்கறையானவன், அப்பா இறந்த பின்னே குடும்பத்தை
தூக்கி சுமப்பதற்காக தனது படிப்பை பாதியில் விட்டதால் சரியான வேலை
கிடைக்கவில்லை, வருமானம் குறைவாகவிருந்தாலும்,எந்த ஒரு கெட்டப்
பழக்கமும் அவனை அண்டாமல் நான் வளர்த்திருக்கேன், ஆஷா எங்கள்
வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி, அவளும் சந்தோஷமாக இருப்பாள் என்று
மட்டும் உறுதியாக கூறுகிறேன் என்றாள் மாப்பிள்ளையின் அம்மா.
என்ன ஆஷா உனக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கா ? என்று கேட்டாள்
மாலா
நம்ம கார் 8321 எனக்கு வேண்டாம் என்றவள், நீ கஷ்டப்பட்டதே
போதும்மா.. என்றாள்

Leave a comment
Upload