தொடர்கள்
பொது
மருத்துவம் என்பது சேவை! - வேங்கடகிருஷ்ணன்

20260713145827224.jpg

டாக்டர் துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்

20260713151332973.jpg

ஒரு மருத்துவமனை என்பது நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் இடம் மட்டுமல்ல; அது நம்பிக்கையைத் தரும் இடமாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மருத்துவ சேவையுடன் சமூக அக்கறையையும் இணைத்துச் செயல்படும் ஒரு முக்கியமான நிறுவனமாகத் திகழ்கிறது.

ஆந்திர மகிளா சபையின் கீழ் இயங்கும் இந்த மருத்துவமனை 1950-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாக்டர் துர்காபாய் தேஷ்முக் தொடங்கிய தாய்ப்பால் விநியோக மையத்திலிருந்து உருவான இந்த நிறுவனப் பயணம், இன்று பல்துறை மருத்துவமனையாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், நியோனேட்டாலஜி மற்றும் முதியோர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இங்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் பல் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை, இருதய மருத்துவம், நீரிழிவு, நாளமில்லாச் சுரப்பி, சிறுநீரகம், மனநலம், நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு ஆலோசனைகளும் கிடைக்கின்றன.
துவக்கத்தில் இருந்தே இயற்கை பிரசவத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடந்து வரும் மருத்துவமனை இது. இன்று வரை அதனைத் தொடர்ந்து வருகிறது.

20260713150317606.jpg

இந்த மருத்துவமனையின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களில் ஒன்று முதியோர் மருத்துவப் பிரிவு. வயது முதிர்ந்தவர்களின் தனிப்பட்ட மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய சேவை அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது அதன் சமூகப் பார்வையை வெளிப்படுத்துகிறது.

20260713150419367.jpg

24 மணி நேர ஆய்வக சேவை, ECG, X-Ray, அல்ட்ராசோனோகிராம், Colour Doppler மற்றும் Blood Storage Centre போன்ற வசதிகளும் மருத்துவமனையில் உள்ளன.

20260713150504992.jpg

ஆனால் மருத்துவமனையின் சேவை மருத்துவமனை வளாகத்துக்குள் மட்டும் முடிவதில்லை. தினமும் இரண்டு Outreach Vans மூலம் குடிசைப் பகுதிகள் மற்றும் புறநகரங்களில் உள்ள முதியோர் மற்றும் ஏழை, எளிய மக்களின் வீட்டு வாசலுக்கே சென்று இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. மாதம் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள்நடத்தப்பெற்று, தகுதியானவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை, தேவையான தடுப்பூசிகள் மற்றும் தகுதியான நோயாளிகளுக்கு இலவச உள்நோயாளி சிகிச்சை போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.

20260713151135112.jpg

மருத்துவ அறிவும், மனிதநேயமும் இணைந்தால் மட்டுமே முழுமையான சுகாதார சேவை உருவாகும். டாக்டர் துர்காபாய் தேஷ்முக் அவர்களின் சேவை நோக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் இந்த மருத்துவமனை, சென்னையின் மருத்துவ வரலாற்றில் மனிதநேயத்தின் ஒரு முக்கிய அத்தியாயமாகத் தொடர்கிறது.

20260713145939454.jpg

75 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வரும் இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான, மருத்துவர். விஜயலக்ஷ்மி சுதாகரை , மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள அவரது அலுவலகத்தில் விகடகவி வாசகர்களுக்காக நேரில் சந்தித்தோம். மிகவும் ஆர்வமுடன் நம்மிடம் பேசிய அவர் மருத்துவமனை பற்றிய அனைத்து தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். சுற்று வட்டார மக்கள் இந்த மருத்துவமனையின் சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற அவரது கோரிக்கையில் அவரது சேவை மனம் வெளிப்பட்டது.
தரமான மருத்துவம் , மிகச் சரியான கட்டணத்தில், அதுவும் பொது மக்களுக்கு ஏற்ற வகையில் என்பதே இம் மருத்துவமனையின் நோக்கமாகும்.. இதை சரியான வகையில் அனைத்து மக்களும் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்..என்ற அவரது கோரிக்கையை வாசகர்களிடம் சமர்ப்பிக்கிறோம். அந்த அற்புத மருத்துவ சேவையை பாராட்டி அவரிடமிருந்து விடை பெற்றோம்.

கிளம்புகையில் மருத்துவமனை செயலாளர் சதீஷ் அவர்களையும் சந்திக்க நேர்ந்தது.

அவரும் நடுத்தர மற்றும் அடிமட்ட மக்களுக்கான மருத்துவ சேவைகள் மேலும் விரிவாக்கப்பட இருக்கிறது அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

20260715065458474.jpg

மருத்துவர் விஜயலஷ்மி சுதாகர்...பேட்டி காணொளி வாசகர்களின் பார்வைக்கு ...