
இன்று நாம் நம் நாட்டின் 80வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.
1947 ஆம் ஆண்டு நள்ளிரவில் உரத்த குரலில் நேரு இந்திய விடுதலையை அறிவித்த அப்பொன்னான தருணத்தை ஒவ்வொரு சுதந்திர விழாவின் போதும் நாம் மகிழ்வுடன் நினைவு கூர்கிறோம். மறக்க முடியாத அவ்வுரை நம் நினைவில் சுழலுகிறது.
" விதியுடன் நாம் ஓர் உடன்படிக்கை செய்துக் கொண்டோம். நள்ளிரவு 12 மணி அளவில், உலகம் உறங்கிகொண்டிருக்கிற வேளையில் இந்தியா விழித்தெழுந்து உயிர்ப்பையும் விடுதலையையும் பெறுகிறது. ஒரு காலகட்டம் நிறைவடைந்து பழையதிலிருந்து புதுமைக்கு மாறும் நிலையில், நீண்ட நெடிய காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா பேசத் தொடங்கும் போதுதான் வரலாற்றில் அரிதான ஒரு தருணம் வருகிறது. ."
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்த இம்மாபெரும் தேசம், நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் விடுதலை பெற்றது. இன்று உலக அரங்கில் தன்னிறைவு பெற்ற நாடாக, எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. வல்லரசுகளுக்கு இணையாக நம் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;" என்று பாரதி பாடினார்.
ஆனால் இது போன்ற தருணத்தில் நாம் கடந்து வந்த பாதையை சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். நமது சாதனைகளைக் கணக்கீடு செய்கையில், அவற்றை அடைய நமக்கு வழி காட்டிய தலைவர்களை, அறிஞர்களை நாம் நன்றியுடன் போற்ற வேண்டிய நாள் இந்நாள்.
இந்திய விடுதலையை சாத்தியமாக்கிய தேசப்பிதா காந்தி, நவஇந்தியாவின் சிற்பி நேரு , அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கார், 'வறுமையே வெளியேறு' என்று முழங்கிய இந்திரா காந்தி, தொழிற்நுட்ப வளர்ச்சியைக் கனவு கண்டு , நவீன இந்தியாவை உருவாக்க திட்டமிட்ட ராஜிவ் காந்தி , பொருளாதார சீர்திருத்தத்துக்கு வழி வகுத்த பி.வி. நரசிம்மராவ், அவருக்கு நிதி அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் இருந்து தாராளமயமாக்கலை நெறிப்படுத்திய மன்மோகன் சிங், ' பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விடிவெள்ளியான வி.பி..சிங், ஏவுகணை மனிதர்' என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம் இன்று நாம் காணும் ஒளிரும் டிஜிட்டல் இந்தியாவை வழி நடத்தும் பிரதமர் நரேந்திரமோடி என்று நம் வணக்கத்துக்குரியவர்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

இந்த எண்பது ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வளர்ச்சியை நாம் கண்களால் காணும் பேறு பெற்றுள்ளோம்.
'இரவில் வாங்கினோம், இன்னும் விடியவில்லை' என்ற எதிர்மறை கவிதைகள் தோற்கும் வண்ணம், சமூக வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தொழிற்துறை வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு என எல்லா துறைகளிலும் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு எவ்வித சமரசமும் இன்றி முன்னுரிமை பெற்றுள்ளது. நிதி நிலை பகிர்வில் ராணுவத்துக்கு முதலிடம் தரப்படுகிறது.சீனப் போர் , பாகிஸ்தானுடன் நடத்திய போர்களில் நம் வீரர்கள் காட்டிய தீரம்,தலைவர்கள் காட்டிய தலைமைப்பண்பு போற்றத்தக்கது
வர்த்தகம்,தனி மனித வருவாய் இவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. .வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவரின் சதவீதம் குறைந்துள்ளது.
நமது முதல் தன்னிறைவு உணவில் தொடங்கியது என்றே சொல்லலாம்.
விடுதலை பெற்ற சில ஆண்டுகள் வரை இந்தியா உணவு பற்றாக்குறையால் அவதி பட்டது. பிற நாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வந்தது.
அறுபதுகளில் தொடங்கிய பசுமைப் புரட்சி இந்தியாவெங்கும் புதிய விடியலை ஏற்படுத்தியது. நார்மன் போர்லாக் , எம்.எஸ் .சுவாமிநாதன் என்னும் ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதலில், நம் வயல்கள் பொன் விளைவிக்கும் நிலங்களாக மாறின. நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது .அரிசி, கோதுமையை நாம் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உணவு உற்பத்தி வளர்ந்துள்ளது.
1970 ஆம் ஆண்டு மலர்ந்தது வெண்மைப் புரட்சி.தேசிய பால்வள வாரியத்தின் திட்டமாக அறிவிக்கப்பட்ட இந்த பால் உற்பத்தி புரட்சிக்கு வித்திட்டு வழிகாட்டியவர் கேரளாவின் வர்கீஸ் குரியன்.

இவ்வெண்மைப் புரட்சி நம் தேசத்தின் பால் பற்றாக் குறையை தீர்த்தது மட்டும் அல்லாமல் பால் உற்பத்தியில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றியது .இப்போது ஆண்டுதோறும் .220 மில்லியன் மெட்ரிக் டன் பால் இந்தியாவில உற்பத்தி செய்யப்படுகிறது. உலகத்தின் தேவையில் 22% பால் உற்பத்தி இந்தியாவே செய்கிறது.
1974 ஆம் ஆண்டு மே பதினெட்டாம் நாள் நம் வரலாற்றில் மிக முக்கிய நாள். அன்று இந்தியா ராஜஸ்தானின் பொக்ரானில் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. Smiling Buddtha என்ற செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்ட இந்த சோதனை ' அமைதிக்கான சோதனை' என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னாலும், ஒட்டு மொத்த உலகமே நம்மை அச்சத்துடன் திரும்பி பார்த்தது. பாகிஸ்தானுடன் போர் முடிந்த பின்னர் நடந்த இந்த சோதனையை கண்டு வல்லரசு நாடுகள் அதிர்ந்தன . இதே போன்ற சோதனை 1998லிலும் நம் விஞ்ஞானிகள் நடத்திக் காட்டினர்.

இந்த அற்புதத்தை நிகழ்த்திய அறிவியல் அறிஞர்கள் அடுத்த ஆண்டில் செயற்கை கோள் செலுத்தி பிரமிக்க வைத்தனர். 1975 ஆம் ஆண்டு இஸ்ரோ ஆர்யபட்டா முதல் செயற்கை கோளை விண்ணில் அனுப்பி புதிய சகாப்தத்தை எழுதினார்கள். அதைத்தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன ..பாஸ்கரா , ரோகிணி ,இன்சாட் , என்று நாமகரணம் சூட்டிய இச்செயற்கை கோள்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கும் , தகவல் தொடர்புக்கும் உறுதுணையாக இருக்கின்றன.
இந்நிகழ்வுகளுக்கு இடையில் பொருளாதாரத்தை மேம்படுத்தஒரு அற்புதம் நடந்தது. .இந்திராகாந்தி வங்கிகளை 1969 ஆம் ஆண்டு தேசியமயமாக்கி, எல்லா மக்களுக்கும் வங்கிகளின் கதவுகளைத் திறந்து வைத்தார். நாட்டின் முக்கியமான தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இச்செயல் இந்திய பொருளாதார வளர்ச்சியில் இது ஒரு மைல் கல். வங்கித்துறை நல்ல வேலை வாய்ப்புகளைத் தரும் துறையாக மாறியது. பொதுத்துறை நிறுவனங்களான BHEL,BEL, BEML ,LIC போன்ற துறைகள் புத்தாக்கம் செய்யப்பட்டன.
அரசு அலுவலகங்கள், வங்கிகளில் கணினி செயல்பாடு தொடங்கியது. அது பின்னாளில் தகவல் தொழிற்நுட்ப புரட்சிக்கு வித்திட்டது. இப்போது நாம் காணும் தொழிற் நுட்ப பூங்காக்களுக்கு அடித்தளம் அமைத்தது, LPG Model (Liberalisation Privatization , Globalisation ) எனப்படும் தாரக மந்திரம். தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் உலகமயமாக்கல் என்னும் இந்த மூன்றும் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தத்தையும், வளர்ச்சியையும் தந்தன.
அதைப்பற்றி விரிவாக பேசுவோம்
தொடரும்


Leave a comment
Upload