
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இது ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் நிறைவடைந்து, 80-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாளாகும்.

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான சிதம்பரம் ஶ்ரீ நடராஜர் கோயிலில் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே, இக்கோயிலின் கிழக்குக் கோபுரத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் நமது தேசியக் கொடி இன்றும் ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்பட்டு வருகிறது. (சுமார் 135 அடி (41 மீட்டர்) உயரம். இரண்டாம் குலோத்துங்க சோழனால் தொடங்கப்பட்டு, பாண்டிய மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. இதில் 108 பரதநாட்டிய முத்திரைகள் செதுக்கப்பட்டுள்ளன)
கிழக்கு கோபுரத்தில் பறக்கும் தேசியக் கொடி:

இந்த ஆண்டும் (2026) சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வழக்கம்போல கோயில் கிழக்குக் கோபுரத்தின் மீது தேசியக் கொடி ஏற்றப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீட்சிதர்கள் சார்பில் தேசப் பற்று நிகழ்வுகள் பாரம்பரிய முறைப்படி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2026 சுதந்திர தினத் திட்டமிடல் (தோராய நேரம்)

காலை 06:00 - 07:00 மணி: முதல் கால பூஜை முடிந்தவுடன், தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து சித்சபையில் உள்ள நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் பாதங்களில் சமர்ப்பித்துச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள்.
காலை 07:15 - 07:45 மணி: வேத மந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் (மேளதாளம்) முழங்கத் தீட்சிதர்கள் கொடியைக் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டு வருதல்.

காலை 08:00 மணிக்குள்: கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொடிக்கம்பத்தில் தீட்சிதர்களின் செயலாளர் தலைமையில் தேசியக் கொடியை மிகுந்த தேசப்பற்று உணர்வுடன் ஏற்றி, அங்கிருக்கும் தீட்சிதர்களும் பக்தர்களும் இணைந்து தேசிய கீதம் பாடி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு போன்ற இனிப்புகள் பிரசாதமாக வழங்குதல்.

வரலாற்றுக் கல்வெட்டு ஆதாரங்கள்:
நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், கோயிலின் மேற்கு கோபுர முன் மண்டபம் அருகே, நாடு சுதந்திரம் அடைந்த வரலாற்றுத் தகவலைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர்.
தேசபக்திச் சிறப்பு:
தமிழகத்தின் பிற கோயில்களில் இல்லாத தனித்துவமாக, இங்கு ஆன்மிகத்துடன் தேசபக்தியும் இணைத்துப் போற்றப்படுகிறது.
1962-ஆம் ஆண்டு சீனாவுடனான போரின்போது, இந்திய அரசு இராணுவத்திற்கான நிதியைத் திரட்டிக்கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி உதவியது.

எப்படிச் செல்வது:
இந்த 2026 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் காண நேரடியாகச் சிதம்பரம் செல்ல
பேருந்து வசதி: சென்னையில் (கோயம்பேடு/கிளாம்பாக்கம்) இருந்து புதுச்சேரி, கடலூர் வழியாகச் சிதம்பரத்திற்குப் பொது மற்றும் தனியார் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.
இரயில் வசதி: சென்னை எழும்பூரில் இருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், மற்றும் திருப்பதி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய இரயில்கள் சிதம்பரம் இரயில் நிலையம் வழியாகச் செல்கின்றன.

சிதம்பரம் ஶ்ரீ நடராஜர் கோயில் ஆன்மீகமும் தேசபக்தியும் ஒருங்கிணைந்து அமைந்ததே தமிழ்நாட்டிற்கே பெருமை..!!
வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!


Leave a comment
Upload