தொடர்கள்
கதை
முதல் காதல் குலசேகர்

2026071510332943.jpg

அப்போது சாப்ளினுக்கு இருபத்தொன்று. அவரின் காதலுக்குரியவளுக்கு வயது பதினாறு. பெயர் ஹெட்டி.. அவள் ஒரு தேவதை. ஃபிரட் கார்னோ பல்சுவை மேடை நிகழ்ச்சி குழுவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக அவர் உருவெடுக்க ஆரம்பித்திருந்த நேரம் அது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடகத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மூலம், மேடை நிகழ்ச்சியில் கவனிக்கத்தக்கவராக மாற ஆரம்பித்திருந்தார். இன்னும் சில ஆண்டுகளில் ஹாலிவுட் இவரை தூக்கி வைத்து மௌனப்பட உலகின் முடிசூடா மன்னனாக கொண்டாடப் போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

அந்த நாட்களில் ‘ஷோ கேர்ள்’ என்கிற அழகிய இளம்பெண்கள் நிகழ்ச்சிகளின் இடைப்பட்ட நேரத்தை தங்களின் நடனத்தால் நிரப்புவார்கள். அதில் புதிதாய் இடம் பிடித்திருந்தவள் தான் அந்த தேவதை. அவளை அதுவரை சாப்ளின் பார்த்தது கூட இல்லை. ஆனால் அதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருப்பது அப்போது இருவருக்குமே தெரியாது. அந்த கணங்களை சாப்ளின் தன் வாழ்நாள் முழுக்க மறக்கப் போவதில்லை என்பது தெரிந்திருக்க நியாயமில்லை.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பினார்கள். அவர்கள் ஒப்பனை கலைத்து உடை மாற்றிக்கொள்ள அரங்கின் பின்புறம் நீண்ட அறை உண்டு. அங்கே முதலில் வந்த சாப்ளின் தன்னுடையஉடையை மாற்றிக் கொண்டு பாத்ரூம் சென்று முகத்தை கழுவ ஆரம்பித்தார். அதேநேரம் அந்த இளம்பெண்ணும் தன் நடன பங்களிப்பை நிறைவேற்றி விட்டு காஸ்ட்யூம் மாற்றும் ஹாலுக்குள் அடியெடுத்து வைத்தாள்.

வந்த வேகத்தில் அவள் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றவும், அங்கே அவர் முகம் துடைத்தபடி எதேச்சையாக வரவும் சரியாக இருந்தது. சாப்ளின் அந்த தேவதையின் கண்களில் ஜாலமிடும் மருட்சியில் உறைந்துபோய் விட்டார். அது ஒரு தன்னிச்சையான நிகழ்வு. அவரின் காலம் அந்த புள்ளியில் நின்று கொண்டது. அந்த நொடியில் அவர் அவரிடம் இல்லை. இல்லாத இருத்தலாய் அசையாமல் நின்று கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட அவளுக்கும் அதே மாதிரியொரு நிலை தான். சட்டென மாற்று உடை எடுத்து வேகவேகமாய் அணிந்து கொண்டாள். அது புதுபாணியில் வடிவமைக்கப்பட்டிருந்த குர்தீஸ் போன்றதொரு உடை. அதன் முதுகுப்பக்கம் கயிறு இழுத்திழுத்து அவசரஅவசரமாய் முடி போட ஆரம்பித்தாள். அவளின் கண்களில் இப்போது மருட்சி தணிந்து மெலிதாக கோபம் துளிர்க்க ஆரம்பித்தது.

‘இதை நான் மேனேஜர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண போறேன்..’

2026071510335379.jpg

அவருக்கு எதுவுமே கேட்கவில்லை. ஓசையற்ற உலகில் அவர் காற்றில் நீந்தும் சிறகாய் அதிசயஉலகில் மிதந்து கொண்டிருந்தார். திலுக்கு சாப்ளின் கோபத்தோடு ஏதாவது சொல்வார் என எதிர்பார்த்து ஏமாறுவது அவள் பார்வையில் தெரிந்தது. அவர் பார்வையில் இருக்கும் சுடர் அவளை கூசச் செய்ய, அவள் கண்கள் தாழ்ந்து கொண்டது. மடமடவென தன்னுடைய ஹேன்ட் பேக் எடுத்துக்கொண்டு விருட்டென வெளியேற யத்தனித்தாள். அப்போது சாப்ளின் ஒரு நிமிஷம் என்று நிறுத்தினார். அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

‘உங்க ஜாக்கெட் பின்னால ஒரு கயிறு கட்டாம விடுபட்டிருக்கு..’ என்றார்.

அப்போது தான் அவள் அதை உணர்ந்து முடியிட முயன்றாள். சாப்ளின் எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கையில் எடுத்து அவள் முதுகுப்பக்கம் பிடித்தார். உடனே முடிச்சு லெகுவாக விழுந்து விட்டது. இப்போது சற்றே மாறுபட்டிருந்தது அந்த ஏறிடல். புறப்பட்டு அவரை கடக்கையில் மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள். அவர் பார்வை இம்மி பிசகவில்லை.

‘இப்போ கூட நான் கம்ப்ளைண்ட் பண்ணத் தான் போறேன்’ என்றவள், சரசரவென வெளியேறிவிட்டாள். கதவை கடப்பதற்கு முன் ஒரு முறை திரும்பி கண்களில் மட்டுமான புன்னகையோடு ‘தேங்ஸ்’ என்றாள்.

அவ்வளவு தான். அவள் வெளியேறி நேராக அவர் உள்ளிறங்கி விட்டாள். அவளின் அந்த வாசம் அவருக்குள் நொடியில் நிரந்தர படிமமாய் செதுக்கிக் கொண்டு விட்டது. அவர் சுவரில் சாய்ந்தபடி அசைவின்றி நின்று கொண்டிருந்தார். இமைகள் செயல் மறந்து போயிருந்தன. இதுவரை அறிந்திராத, தாங்கிக் கொள்ள முடியாத சுகானுபவம்.

20260715103415225.jpg

சொன்ன மாதிரி அவள் ஒன்றும் சொல்லவில்லை. சாப்ளின் உணர்ந்து கொண்டு விட்டார். அதன் பிறகு அடிக்கடி பார்வைகள் ஈசிக் கொள்கிற மின்னல் துளி சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் இருந்தன.

அன்று அவளுக்கு பிறந்த நாள். அவள் வந்ததும் சாப்ளின் முதல் ஆளாக வாழ்த்து சொன்னார். அவளுக்கு ஆச்சர்யம்.

‘எப்படி தெரியும்?’

‘தெரியும்’

அவள் மறுபடியும் அதே வார்த்தையை சொன்னாள்.

‘தேங்ஸ்’

‘இன்னைக்கு டின்னர் தரப்போறேன்’

அதற்கும் அதே தேங்ஸ் தான்.

‘நிகழ்ச்சி முடிஞ்சதும் வாசல்ல காத்திட்டிருப்பேன்’

ஒரு நொடி யோசித்து, ‘ம்’ என்றாள். அவரின் கண்களை கண்களால் சிதறாத நேர்கோட்டில் தரிசித்து இதயம்வரை துளைத்துச் சென்று பார்க்கக் கூடிய அந்த ஒளிரும் பார்வை அவளுக்கு பிடித்தமானதாக இருந்ததாலோ என்னவோ அவளிடம் சம்மதம் கேட்காமலேயே அவளுதடுகள் அந்த எழுத்தை உச்சரித்து விட்டிருந்தது.

அன்று நடன நிகழ்ச்சியில் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றாள். வெளியே இருவரும் புறப்படும்போது வானம் உற்சாகத்தில் தூறல் போட ஆரம்பித்தது. அவருக்கு கவலை. எங்கே அவள் அதை காரணமாக சொல்லி வராமல் போய் விடுவாளோ? ‘நல்லாருக்குல.. எனக்கு சாரல்ல நனையறதுனா ரொம்ப பிடிக்கும்’ என்றாள். அவள் சொல்லி முடிப்பதற்குள் சாப்ளின் நனைந்து முடித்திருத்திருந்தார். மனதில்.

அந்த விசாலமான நடைபாதையில் ஒரு குடைக்குள் பயணித்தார்கள். இருவரும் தங்களின் எதிர்கால திட்டம், ரசனைகள் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டார்கள்.ஏழ்மையின் துயரத்தை கடந்து தன்னையும், தன்னை சூழ்ந்தது இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த இளைஞருக்கு தெரிந்திருக்கிறது என்பது அவளுக்கு தெளிவாய் தெரிய வர ஆச்சர்யத்துடன் சாப்ளினை நோக்கினாள்.

ஃபிரட் கார்னோ மேடை நிகழ்ச்சி குழு அமெரிக்கா பயணிக்க இருப்பதும், அதில் அவர் இடம் பெற்றிருப்பதும் அவள் தெரிந்து கொண்டாள். அந்த விசயம் அவர் சொன்ன போது அவளின் கண்களில் மெலிதான வாட்டம் வந்து போனது.

அதற்குள் குறிப்பிட்ட இடம் வந்து விட அவர் கால்கள் நின்றன. அதை பார்த்தும் அவளுக்கு ஆச்சர்யம். அங்கே ஒரு நடைபாதை டிஃபன் கடை தென்பட்டது. ‘இங்கேயா உங்க ட்ரீட்?’

‘ம்’

அங்கே சென்றதும் அவர் சில ஐட்டங்கள் ஆர்டர் செய்து, ஆவி பறக்க கொண்டு வந்து கையில் தந்தார். அவள் தயக்கத்துடன் சாப்பிட ஆரம்பித்தாள். சும்மா சொல்லக்கூடாது. அவள் வாழ்நாளில் அப்படியொரு சுவையான உணவை சாப்பிட்டிருக்கவில்லை. உடனே ஈரம் தோய்ந்த விழிகளில் ஏறிட்டு, தேங்ஸ்’ என்றாள்.

இதை நான் எதிர்பாக்கவேயில்லை’

‘இந்த நாளை நான் மறக்கவே மாட்டேன்’

‘நானும்’

மனம் நிறைய, உண்டு முடித்தார்கள். இப்போது இருவர் கைகளிலும் சுவையான தேநீர். அப்போது மழை ‘ச்சோ’ வென கொட்ட ஆரம்பித்தது. அவர்கள் குடைக்குள் மிகவும் நெருக்கமானர்கள். தேநீர் கோப்பைகளில் இருந்து விரியும் ஆவி ஒன்றையொன்று காற்றில் தொட்டுக் கொண்டன.

‘இந்த கணத்திலேயே என் வாழ்க்கை நின்னுட கூடாதான்னு இருக்கு.. அப்படி மட்டும் நின்னுட்டா என்னை விட அதிர்ஷ்டக்காரன் இந்த உலகத்தில வேற யாருமே இருக்க முடியாது ..’

அவர் மனதில் தோன்றியதை தன்னிச்சையாய் சொல்லிக் கொண்டே சென்றார். அவள் பிரமிப்புடன் அந்த வார்த்தைகளில் நனைந்து கொண்டிருந்தாள்.

அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

‘அது எப்படி நடக்கும். காலத்தை யாராலயும் நிறுத்த முடியாதே.. அது யாரையும் பொறுட்படுத்தாம நகந்துட்டு தானே இருக்கும்..’

‘நிறுத்த முடியும்.. உன்னோட நினைவுகளால..’

அவள் கேள்வியோடு பார்த்தாள்.

அவர் உடனே கேட்டு விட்டார். அவள் கரம் பற்றி மெத்மென முத்தமிட்டு தன்னை மீறிக் கொண்டு சொன்னார்.

‘நீ என்னோட அமெரிக்கா வந்துடேன்..’

‘எதுக்கு?’

‘என்னால உன்னை விட்டு எப்பவுமே பிரியமுடியும்னு தோணலை..’

‘என்ன?’

‘உன் கூடவே இருக்கனும்.. ஒரு நொடிகூட பிரியாம.. வாழ்நாள் முழுசும் உன் கூட இப்போ மாதிரியே.. இந்த நொடியில எப்படி நான் உணர்றேனோ அப்படியே..’

‘அது எப்படி சாத்தியம்?’

‘நூறு சதவீதம் அது எனக்கு சாத்தியம்..’

‘யூ ஆர் கிரேஸி மேன்’

‘.. ஆன் யூ யெங் லேடி’

அவள் பிரமிப்பாய் பார்த்தாள். அவளின் புன்னகைக்கும் கண்கள் மலர்ச்சியில் விரிய ஆரம்பித்தன.

‘அது எப்படி முடியும்?’

‘நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ..’

அவள் சில நொடிகள் கேள்வியாய் பார்த்தாள்.

‘என் வயசு என்ன தெரியுமா.. பதினாறு.. நான் இன்னும் படிக்க வேண்டியது இருக்கு.. அந்த செலவுக்கு உதவியா இருக்குமேன்னு தான் இந்த பார்ட் டைம் வேலைக்கே வந்திருக்கேன்.. அதுக்குள்ள நாம எப்படி.. அதுவும் நாம பழகி கொஞ்சநாள் கூட ஆகலை.. அதுக்குள்ள... இப்படி அதிரடியா ஒரு முடிவை என் மேல தள்ளி விட்டா என்ன செய்வேன் நான்.. என்னால எப்படி.. சொல்லத் தெரியலை.. ஆனா..ஆனா..’

அவர் இடைமறித்து சொன்னார்.

‘இப்போ பேசிட்டிருக்கிறது நான் இல்ல.. நீ தான்.. உன் சார்பா உன் உணர்வுகளை, கடன் வாங்கி பேசிட்டிருக்கேன்..’

‘சீரியஸா தான் சொல்றியா?’

அவர் பேசவில்லை. இமைக்காமல் பார்க்கும் அந்த பார்வையில் ஈரம் பாரிக்க ஆரம்பித்தது.

அவள் சொன்னாள்.

‘நான் மறைக்க விரும்பலை.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ரொம்பவே.. இந்த சில நாட்கள்லயே எனக்குள்ள ஒரு இடத்தை உரிமையா கேட்டு வாங்கிட்ட தான்.. அதே சமயம் எனக்கு என்னோட லட்சியங்கள் இருக்கு. அதே மாதிரி உனக்கு உன்னோட லட்சியங்கள் இருக்கு. அதை பத்தி யோசிச்சி அடைய நினைக்கிறதை அடைஞ்ச பிறகு யோசிக்க வேண்டியதை இப்பவேன்னா எப்படி.. கல்யாணம் பத்தி யோசிக்க, இன்னும் காலம் இருக்கு..’

‘என் காதலை நிரூபிக்க என்ன செய்யனும்?’

‘என் மேல உள்ள காதல் உனக்கு அத்தனை உசத்தின்னா அமெரிக்கா போ.. நிகழ்ச்சியை வெற்றிகரமா பண்ணு.. அங்க எவ்வளவோ பெரியபெரிய படைப்பாளர்கள் உன்னோட நிகழ்ச்சியை பாக்க வாய்ப்பிருக்கு.. அவங்களை இம்ப்ரஸ் பண்ணிக் காட்டு.. நடிப்புல ஒரு இடத்தை பிடிச்சிக் காட்டு.. அப்புறம் ஒத்துக்கறேன்.. உண்மையாவே நீ என் மேல வச்சிருக்கிற காதல் அற்புதமானது தான்னு..’

‘அது நடக்கும். அதை யாராலயும் தடுக்க முடியாது.’

‘எப்படி அவ்வளவு நம்பிக்கையா சொல்ற?’

‘நான் சொல்லலை.. உள்ள இருக்கிற நீ சொல்ல வைக்கிறதை நான் அப்படியே ஒப்பிக்கிறேன்..’

‘அதுவரை கண்டிப்பா என்னை நீ பாக்கக் கூடாது’

‘அது முடியாது.. நான் தான் உன்னை எப்பவுமே எனக்குள்ள பாத்துட்டிருக்கனே..’

அவள் மீண்டும் மின்னலாய் அந்த ஆச்சர்ய புன்னகை சிதற விட்டாள்.

அவர் மறுபடி அவள் கையை பற்றி முத்தமிடுகிறார். அவளுக்குள் அந்த கதகதப்பு பரவி மனசெங்கும் சிலிர்க்க வைக்கிறது.

சாப்ளின், ‘அடுத்து நான் உன்னை சந்திச்சா இந்த உலகமே வியந்து பாராட்டுற ஒரு கலைஞனா தான் சந்திப்பேன்.. இது நடக்கும்.. நீ தந்த காதலை மட்டும் துணைக்கு எடுத்துட்டுப் போறேன்.. குட் பை..’ என்றார்.

அடுத்த நொடி அவளிடம் குடையை தந்து விட்டு, மழையில் நனைந்தபடி தாளாத உற்சாகத்தோடு ஓட ஆரம்பித்தார். தூரமாக போய் அந்த திருப்பத்தில் திரும்புவதற்கு முன் அடக்கமாட்டாத மகிழ்ச்சியுடன் அவளை பார்த்து, ‘ஜெயிச்சிட்டு வரேன்..’ என்றார் கட்டை விரல் காட்டி சைகையிலேயே சொன்னார். அவள் பார்வையில் அவர் புள்ளியாகி கொண்டே போனார். ஆனால் மறையவே இல்லை.

எப்போதும் பூத்திருக்கும் அந்த புன்னகை பூங்கொடியை நினைவில் ஏந்திக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார். காலம் மளமளவென ஓட ஆரம்பித்தது. அவர் நினைவில் அவள் மட்டும் அப்படியப்படியேஉறைவுற்று, அவரை இயக்கிக் கொண்டு இருந்தாள். அவர் படிப்படியாய் மேடை கலைஞனாய், திரைப்படத்தில் துணைநடிகராய், கதாநாயகராய், எழுத்தாளராய், விநியோகஸ்தராய், தயாரிப்பாளராய், இயக்குநராய் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தார். வைக்கிற அடி எல்லாம் நெத்தி அடி. இப்போது அவர் உலகம் அறிந்த நடிகராய் பரிணமித்து விட்டார்.

அது முதலாம் உலகப்போர் நடந்திருந்த காலக்கட்டம். யுத்தத்தில் இறந்தவர்கள் பாதி. யுத்தத்தின் பக்கவிளைவால் ஏற்பட்ட நோய்தொற்று மூலம் இன்ஃபுளுவன்சியா ஜுரம் வந்து இறந்தவர்கள் பாதி.

அவள் இருந்த பகுதி பாதிப்பு அதிகம் நிகழ்ந்த பகுதி தான். அந்த எண்ணம் தன்னிச்சையாய் அவரை வதைக்க ஆரம்பித்திருந்தது. என்ன ஆகியிருக்கும்? வேறு எங்காவது இடம் பெயர்ந்திருப்பாளா? அவள் நினைவுகள் மட்டும் அவரிடம் பத்திரமாக இருந்தது. அவள்? இப்போது எங்கே இருப்பாள். படித்துக் கொண்டிருப்பாளா? முடித்திருப்பாளா? ஒன்றும் தெரியாது. ஆனால் போனதும் தெரிந்து கொள்வதில் பெரிதாய் கஷ்டம் எதுவும் இருக்கப்போவதில்லை. இனியும் தாமதிக்கப் போவதில்லை என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிற வேளையில் தான் அவரை அந்த இன்ப அதிர்ச்சி தேடிவந்தது.

1918. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவருக்கு ஹெட்டி கவிதையாய் ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அவர் அந்த கடிதத்தை தாளமுடியாத உணர்வுப் பிரவாகத்துடன் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப திரும்பத்திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருந்தார்.

அவள் அங்கே சாப்ளின் நடித்த படங்கள் ஒவ்வொன்றையும் பலமுறை பார்த்துப் பரவசித்துக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய படிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், சாப்ளின் உணர்ந்த கணங்களை இப்போதுதான் தான் உணர ஆரம்பித்திருப்பதாகவும், இந்த உணர்வு சம்பிரதாய உறவிற்கு அப்பாற்பட்டது என்றும், அந்த ‘குட் பை’ க்குள் உறைந்திருக்கிற உணர்வின் அர்த்தத்தைஇப்போது முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது என்றும், இன்னும் என்னென்னவோ.. என்ன எழுதுகிறேன் என்றே தெரியாமல் மனது போகிற போக்கில் உள்ளே உள்ளதை கொட்டிக்கொண்டிருப்பதாகவும், எந்தவித ஒப்பனையும் இல்லாமல், தன்னை மீறிய பரவசத்தில் கொட்டியிருந்தாள்.

அவருக்கு எல்லாம் புரிந்தது. அதில் எழுதியிருப்பதும், எழுத நினைத்து எழுதாமல் விட்டிருப்பதும். சாப்ளினை பார்க்க மனது ஆவலாய் துடிக்கிறது என்றும் ததும்பியிருந்தாள். இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததற்காக திரும்பத் திரும்ப மன்னிக்கும்படி எழுதியிருந்தாள். இத்தனை நாள் சாப்ளின் உச்சம் தொட வேண்டுமென்பதற்காகவே அவள் அவரை பார்க்க தோன்றிய ஆவலை அடக்கிக்கொண்டிருந்திருப்பதை அவரால் அந்த வார்த்தைகளில் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவர் ஜென்மம் சாபல்யம் அடைந்து கொண்டிருப்பதை பரிபூரணமாய் உணர ஆரம்பித்தார். இதற்குமேல் இந்த உலகத்திடம் தான் எதுவும் கேட்கப் போவதில்லை என்று மானசீகமாய் சத்தியபிரமாணம் மனதிற்குள் எடுத்துக் கொண்டார். இருப்பு கொள்ளவில்லை. அவசரஅவசரமாய் முக்கிய அலுவல்கள் அனைத்தையும் முடித்து விட்டு லண்டன் புறப்பட்டார்.

இந்த மகிழ்ச்சியை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறேனோ? இந்த ஒரு நொடி நினைப்பிற்கே இத்தனை மகிழ்ச்சியை மனது உணர்கிறதே? வாழ்நாள் முழுவதும் இந்த நினைவுகள் எத்தனைஎத்தனை மகிழ்ச்சியை கொட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கப் போகிறதோ? அதை எப்படி இந்தமனது தாங்கிக் கொள்ளப் போகிறதோ தெரியவில்லை. மனது என்னென்னவோ பேசிக் கொண்டது. பயணமெங்கும் எங்கெங்கெல்லாமோ அவளோடு பயணித்தபடி இருந்தது. அவளை மாதிரி ‘ஓவல்’வடிவில் முகமும், திருத்தமான பற்களும், வசீகர புன்னகையும், உணர்வுகளை நொடியில் உறிஞ்சிக்கொள்ளும் காந்த பார்வையும் அவர் நினைவில் வந்து வந்து ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது. அத்தனை பெண்களும் அவளை போலவே தோன்றினார்கள். உலகமெங்கும் அந்த ஒரே ஒரு பெண் மட்டுமே பல ரூபங்களில் உலாவுவதாக அவர் உணர்ந்தார்..

ஊர் போய் இறங்கியதும் நேராக ஹெட்டி இருக்கிற இடம் தேடிப் போனார். அங்கே அவள் இல்லை. யுத்தத்தின் பாதிப்பில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக காய்ச்சலில் படுத்தவள் எழுந்திரிக்கவே இல்லை என்கிற சேதி மட்டும் தான் அங்கே மிச்சமிருந்தது. சமீபத்தில் தான் அவள் பிரியா விடை பெற்றிருந்த சேதி அவர் மனதில் வந்து ஓங்கி அறைந்தது. அவர் அந்த அதிர்வை தாங்க முடியாமல்உறைந்து போய் சுயம் மறந்து நின்று கொண்டிருந்தார்.

அவளை கடைசியாக சந்தித்த இடத்திற்கு போய் அந்த ஈரம் சொட்டும் நட்டநடு ராத்திரி தனிமையில் அவளும் அவரின் நினைவுகளுமாய்...

வலித்தது. அந்த வலியின் ருசியை இன்னதென்று அரிதியிட்டு சொல்லி விட முடியாது என்றே தோன்றியது. ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு ருசியாய் அது மாயாஜால தன்மை கொண்டதாய்உணர்வுகளில் பயணித்தபடி இருந்தது. அந்த வலி அவருக்குள் நிரந்தர வடுவாய் படிந்து தான் கொண்டு விட்டது. காலத்தையும் உறைய வைத்து விடுகிற சக்தி கொண்ட அந்த நினைவலைகள் இனி அவரின் ஞான சக்தியாய், இயங்கு சக்தியாய் அவரோடு இறுதி வரை உயிர்ப்போடு பயணிக்கும்...