தொடர்கள்
கதை
லாஜிக் ! வி.கே.லக்ஷ்மிநாராயணன்

2026072907495590.jpeg

அன்று வாசலுக்குச் சென்ற பூரணியின் கண்களில் பளிச்சென்று அந்தக் காட்சிபட்டது.

உடனே ரெளத்ரமானாள். இத்தனை நாளும் இப்படித்தான் நடக்கிறதோ? நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது . விடு விடுவென்று உள்ளே சென்று சூட்டோடு சூட்டாக தன் புருஷனிடம் வார்த்தைகளைக் கொட்டிவிட்டாள்.

“ பாருங்க, அந்தப் பொன்னிக்கு எவ்வளவு திமிரு! வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே தன் புத்தியைக் காட்டிட்டா.”

பொன்னி மீது தன் மனைவிக்கு ஏன் இவ்வளவு கோபம் என்று ரமேஷுக்கு தெரியவில்லை. இத்தனைக்கும் நேற்று வரை இருவரும் சுமூகமாகத்தான் இருந்தனர். இன்று மட்டும் ஏன் இப்படி ?

மனதில் குழப்பத்தோடு மனைவி அருகில் சென்று அவள் கையை ஆதூரத்துடன் பற்றினான்.

“ என்னாச்சு பூரணி ? எதுக்கு இப்படி அந்தப் பொன்னி மேலே இவ்வளவு

கோபமாயிருக்கே?” ரமேஷ் சாஃப்டாக கேட்டான்.

பட்டேன்று தன் கையை உதறியவள், “ நேரா விஷயத்துக்கு வரேன்.” என்றவள், “ வாசல் பெருக்கி, ஜலம் தெளிச்சு கோலம் போட அவள் கேட்ட 800 ரூபாய்க்கு மறு பேச்சில்லாமல் ஒத்துக்கிட்டோமில்லையா?” எனக் கேட்டாள் கோபம் குறையாமல்.

“ ஆமாம், அதன்படி இன்னி வரைக்கும் கரெக்டா தானே நடந்துக்கறா; அதிலென்ன சந்தேகம் ?”

“ நானும் அப்படித்தான் நினைச் சுக்கிட்டிருந்தேன். ஆனால் கொஞ்ச நேரம் முன்னாலதான் தெரிஞ்சுது அவளோட பொவுஷு!”

“ ஏன், என்னாச்சு?”

“ வெளியேப் போய்ப் பாருங்க. ரெண்டு வீடு தள்ளியிருக்கிற வீட்டு வாசல்ல பெரிய கோலம் போட்டிருக்கா. நம்ம வீட்டு வாசல்ல மட்டும் சின்னதா இருக்கு. அவங்க கொடுக்கற துட்டுதான் நாமளும் கொடுக்கறோம். நமக்கு மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை ?” விட்டால் அழுது விடுவாள் போல் தெரிந்தது.

ரமேஷ் யோசனை செய்தான். மனைவியின் புகாரில் நியாயம் தென்பட்டது. ஒரு வீட்டில் சின்னக் கோலமும் இன்னொரு வீட்டில் பெரிய கோலமும் போடுவது சரியில்லைதான். அதுவும் இரு வீட்டாரும் ஒரே மாதிரியாக சம்பளம் கொடுக்கும் பட்சத்தில் பொன்னி செய்வது கொஞ்சம் அடாவடித்தனமாகத்தான் பட்டது ரமேஷுக்கு.

ஆனாலும் இது ஒரு சாதாரண விஷயம். இதற்காக மெனக்கெடாமல் இருக்கலாம். இல்லை நாளை காலையில் அந்தப் பொன்னியிடமே பேசி பிரச்சினையைத் தீர்க்கலாம்…என நினைத்த ரமேஷுக்கு சட்டென பொறி தட்டியது.

உடனே வாசலுக்குச் சென்று கிரில் கேட்டுக்கு அருகில் உள்ள சின்னத் திண்ணை மேல் வைக்கப்பட்டிருக்கும் கோலப்பொடி டப்பாவை கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்தவன் மனைவி எதிரில் போய் நின்றான்.

“ பூரணி, இதென்ன?”;

“ ம், பார்த்தால் தெரியல்ல கோலப் பொடி டப்பா !” குரலில் இன்னும் கோபம்

இருந்தது. “

“ சரி, இவ்வளவு சின்ன டப்பாவில் கோலப் பொடி வச்சிருக்கே. அதுக்கேத்த மாதிரி கோலம் போடறா. அப்போதான் பொடி ஆண்டு வரும்ங்கிற நினைப்பு! அதனால்தான் சின்னக் கோலம்…நாளைக்கே பெரிய டப்பாவில நிறைய கோலப் பொடி வச்சுப் பாரு. அப்புறம் நீயே பார்த்து ஆச்சரியப்படுவே!”

புருஷனின் லாஜிக் புரிந்து போக சமாதானமானாள் பூரணி.