தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 24 ஜி.ஏ பிரபா

2026903071433661.jpeg

உ

24) ஸகார ரூபா

ஸகாரரூபா ஸர்வஞ்ஞா ஸர்வேசீ ஸர்வமங்களா |

ஸர்வ கர்த்ரீ ஸர்வபர்த்ரீ ஸர்வ ஹந்த்ரீ ஸனாதனா ||

மந்திரங்களில் மிக முக்கியமாகக் கருதப்படுவது பஞ்சதசாக்ஷரி (பதினைந்து எழுத்துகள் கொண்ட) மந்திரம் ஆகும். இதன் முக்கியமான யந்திரம் 'ஸ்ரீசக்கரம்'. பாவனோபநிஷத், நம் உடலையே ஸ்ரீசக்கரமாக பாவித்து உபாசனை செய்யும் முறைகளை விரிவாகக் கூறுகிறது.

பஞ்சதசாக்ஷரியின் ஏழாவது எழுத்தான 'ஸ' கார வடிவினள் அம்பிகை என்று போற்றப்படுகிறாள். எல்லாவற்றையும் அறிபவள் அவள்; அனைத்தையும் படைப்பவளும் அவளே! நமக்குள்ளே உறைந்திருக்கும் உணர்வும் அவளே தான்; அவளுக்குத் தெரியாதது எதுவுமில்லை. இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் சாட்சியாக அவளே இருக்கிறாள்.

அனைத்தையும் ஆள்பவளும் அவளே. 'ராஜராஜேஸ்வரி', 'சிம்மாசனேஸ்வரி' என ரத்ன சிம்மாசனத்தில் அமர்ந்து இந்த உலகை ஆள்பவள் அம்பிகை. எனவேதான், அவளது கண் அசைவிலேயே அகிலமும் இயங்கி வருகிறது. அவளே சர்வ மங்கள வடிவமானவள்; மங்களங்கள் அனைத்தையும் அளிப்பவள். இதனாலேயே துர்கா சப்தஸ்லோகியும் "சர்வ மங்கள மாங்கல்யே..." என்று அவளைத் துதிக்கிறது.

"ஒவ்வொன்றையும் நாமே செய்கிறோம்" என்று நாம் நினைக்கிறோம்; ஆனால், உண்மையில் எல்லாவற்றையும் அவளே செய்கிறாள், நம்மைச் செய்ய வைக்கிறாள். நிற்பது, நடப்பது, அசைவது என அனைத்து இயக்கங்களும் அவளது சித்தத்தினாலேயே நடைபெறுகின்றன. அவளன்றோ எல்லாவற்றையும் பரிபாலிப்பவள்!

ஒரு தாய், தன் குழந்தை தனக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு எதையும் செய்வதில்லை. இந்த பூமிக்கு அந்தக் குழந்தையைக் கொண்டு வந்த தாய், அதைப் போற்றிப் பாதுகாத்து அதன் நலன்களைப் பரிபாலிக்க வேண்டும் என்ற தூய உணர்வோடு செயல்படுகிறாள். எனில், ஜெகன்மாதாவான உலகத் தாய் அனைத்தையும் பரிபாலிக்கிறாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையே!

அவளைச் "ஸனாதனா" (என்றும் உள்ளவள்) என்று வேதம் நமஸ்கரிக்கிறது. சனாதனத்தை யாரும் தோற்றுவிக்கவில்லை; அதுதான் நம்மைத் தோற்றுவித்தது. அது என்றும் உள்ளது; என்றும் இருக்கும். இந்தப் பிரபஞ்சமே அவள் என்னும்போது, அவளேதான் சனாதனம்!

அம்பிகை மகாராணி; தேவர்களைக் காப்பதற்காக ஆதி பராசக்தியாகத் தோன்றியவள்; சர்வ சக்தி படைத்தவள்; எங்கும் நிறைந்திருப்பவள். அனைத்தையும் தாண்டி அவள் நம் தாய்! குழந்தைகள் தாயை விட்டு விலகிச் செல்லலாம், ஆனால் தாயின் பார்வையிலிருந்து குழந்தைகள் ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது.

ஆமை இக்கரையில் இருந்தாலும், அக்கரையிலிருக்கும் தன் குஞ்சுகளைத் தன் பார்வையினாலேயே வளர்த்துக் காக்கும் என்பார்கள். அம்பிகையும் அப்படித்தான்—இந்தப் பிரபஞ்சமே அவள் கனிவான பார்வையின் ஒளியினாலேயே உயிர் வாழ்கிறது.

அம்பிகையின் புருவ அசைவின் கட்டளையினாலேயே ஈசன் அருள் பாலிக்கிறார் என்பதை ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில்:

க்ஷண-சலிதயோர்-ப்ரூலதிகயோஃ...

என்றும்,

ஜகத்ஸூதே தாதா ஹரிரவதி ருத்ரஃ...

என்றும் விவரிக்கிறார்.

இவ்வுலகைப் பிரம்மா படைக்கிறார்; விஷ்ணு காக்கிறார்; ருத்திரர் அழிக்கிறார்; மகேஸ்வரனோ இம்மூவரையும் பிரளய காலத்தில் தன்னிடம் ஒடுங்கும்படிச் செய்கிறார். உன் பதியான சதாசிவனோ, இவர்கள் அனைவரையும் உன்னுடைய நொடிநேர புருவ அசைவின் கட்டளையை ஏற்று, மீண்டும் அவர்களைப் படைத்து இயங்க வைக்கிறார்."தாயே! அவர்களை இயக்கும் பரம்பொருள் சக்தியாக நீயே இருக்கிறாய்" என்கிறார் ஆதிசங்கரர்.

இதையே அபிராமி பட்டரும், "என்னை ஆள்வதற்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு; எமன் வரும்போது என்னை மீட்டெடுக்க உன்னுடைய விழியின் கடைக்கண் பார்வை உண்டு; இதை மீறி என்னிடம் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுவும் உன் சித்தமே!" என்ற பார்வையில்:

"ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்

மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு..."

என்று பாடுகிறார். அம்பிகையின் கடைக்கண் பார்வையிலேயே இந்தப் பிரபஞ்சத்தின் ஐந்து தொழில்களும் (பஞ்சகிருத்தியம்) நடக்கின்றன. இதையே லலிதா சகஸ்ரநாமம்"பஞ்சக்ருத்ய பராயணா" என்று போற்றுகிறது.

நம் உடலையே ஸ்ரீசக்கரமாகப் பாவித்து, அதன் மையத்தில் அன்னை பராசக்தி வீற்றிருக்கிறாள் என்று தியானிப்பது மிக அற்புதமான உபாசனை முறையாகும். சிவபெருமானுக்கு எத்தனை பெருமைகள் உண்டோ, அவை அனைத்திற்கும் காரணமாக இருப்பது சக்தியே! சிவனையும் சக்தியையும் ஒன்றிணைத்து உள்ளத்தில் தியானித்தால், சகல ஐஸ்வர்யங்களையும் சௌபாக்கியங்களையும் பெறலாம்.

​​​​*********************************