தொடர்கள்
ஆன்மீகம்
நவராத்திரி கொலுவும்..!! கொலுப் படிகளும்…!!! - ஆரூர் சுந்தரசேகர்.

Navarathri Kolu..!! kolu steps…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நவராத்திரி. நவராத்திரி என்றாலே சக்தி வழிபாடு. நவராத்திரியில் நாம் அம்பாளை இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம். வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, செல்வம், வீரம் போன்றவற்றைப் பெறுவதற்குக் கலைமகள், அலைமகள், மலைமகள் என வழிபடுகின்றோம்.
இதன் அடிப்படையில் வீரத்திற்கு மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், கல்விக்கு மூன்று நாட்கள் என ஒன்பது நாட்களாக நாம் வழிபடுகின்றோம்.
புரட்டாசி மாதம் வரும் மஹாளயபட்ச அமாவாசை பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமானது. இந்த அமாவாசைக்கு மறுதினம் வரும் பிரதமை திதி தொடங்கி நவமி திதி வரை தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய நவராத்திரி விழா கோவில்களிலும், வீடுகளிலும் அம்பாள் வழிபாடு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Navarathri Kolu..!! kolu steps…!!!

கொலுப் படிகள்:
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, நவராத்திரி நாள்களில் கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகளை அடுக்கி
வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்தப் படிகள் ஒற்றைப் படையில் அமைந்திருக்க வேண்டும். அவை ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, மற்றும் ஒன்பது. அவரவர்களின் இடம், பொருள் ஆகியவற்றின் வசதியைப் பொறுத்து இந்த எண்ணிக்கைகளில் படிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, பண்டைய பெரும்பாலானவர்களின் வீட்டில் ஏழு படிகள் அல்லது ஒன்பது படிகள் வைத்துத் தான் கொலு வைப்பார்கள். ஆனால் தற்பொழுது இடமின்மை அல்லது வேறு சில காரணங்களால் ஐந்து படிகள், மூன்று படிகள் என்று வைப்பவர்களும் இருக்கின்றனர். எத்தனை படிகள் வைத்தாலும், படிகளின் எண்ணிக்கையைக் கீழிருந்து மேலாக, ஒன்று, இரண்டு என்று எண்ண வேண்டும். இது தவிர பொதுவாக, கொலு வைக்கும் இல்லங்களில் படிகளுக்குக் கீழே பூங்கா அமைப்பதும் உண்டு.

ஒன்றாம் படி
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

இரண்டாம் படி
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்கலாம். மற்றும் சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் வைக்கலாம்.

மூன்றாம் படி
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு, சிறு பூச்சிகள், மண் புழு ஆகியவற்றின் பொம்மைகள்.

நான்காம் படி
நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு, பட்டாம்பூச்சி ஆகியவற்றின் பொம்மைகளை வைப்பது சிறப்பு.

ஐந்தாம் படி
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை அழகுற வைக்கலாம்.

ஆறாம் படி
ஆறறிவு மனிதர்களின் பொம்மைகள், குறிப்பாகத் தலைவர்கள், சாதனையாளர்கள் ஆகியோரின் உருவங்களை வைப்பதால், இல்லத்துக்கு வரும் விருந்தாளிகள் அச்சிலைகளில் உள்ளவர் களின் சாதனைகளை நினைவுகூர முடியும்.

ஏழாம் படி
மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் ஆன ஷீர்டி சாயிபாபா, இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார், காஞ்சி மகா பெரியவர் போன்றவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படி
பகவானின் அவதாரங்களான தசாவதாரம், நவகிரகங்கள், அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள் வைக்கலாம்.

ஒன்பதாம் படி
பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகியோரது பொம்மைகளை அவரவர் தேவிகளுடன் இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும், விநாயகர், முருகப்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களின் பொம்மைகளும் வைக்கலாம். இங்கே பூரண கும்பத்தையும் வைத்து நிறைவு செய்யவேண்டும். இவ்வாறு வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் நவராத்திரி கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு நவகிரக நாயகியின் அருளினை பெறுவோம்.

வீட்டையே கோயிலாக்கும் நவராத்திரி:

​2026908234606192.webpClick and drag to move​

பெண்களுக்கு நவராத்திரி பண்டிகை பத்து நாட்களும் மகிழ்ச்சி தரும் பண்டிகையாக இருக்கிறது. நவராத்திரி தினங்களில் மாலை வேளையில் வண்ண நிறக் கோலங்கள் போட்டு, குத்து விளக்கேற்றி, சக்தி தேவியின் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள். கொலு வைத்துள்ள வீட்டிற்கு, உற்றார் உறவினர்கள் தினமும் மாலையில் வருகை தந்து பக்திப் பாடல்களைப் பாடுவது போன்றவையும் நடைபெறும்.
நவராத்திரியில் தினந்தோறும் ஒவ்வொரு தானியங்களால் அம்பாளுக்கு நைவேத்தியம் செய்த சுண்டலை வீட்டிற்கு வந்தவருக்குக் கொடுத்து உபசரிப்பார்கள். சுமங்கலிப் பெண்களுக்குச் சுண்டல் பிரசாதத்துடன் பூ, தாம்பூலம், ரவிக்கைத்துணி, வளையல் போன்ற மங்கலப் பொருள்களைக் கொடுத்து மரியாதை செய்வது இன்றும் வழக்கமாக உள்ளது.
நவராத்திரி நாளில், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவதால் சர்வ ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள், கொலு வைக்க நினைத்து சில காரணங்களால் வைக்க முடியாதவர்களும் இதே போன்று சுண்டலை அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, அதை அருகில் உள்ளவர்களுக்குக் கொடுப்பது மிகவும் சிறப்பு.
நவராத்திரியில் கொலு வைத்து வழிபடுவதால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவர். மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி அடைவர்.

“வீட்டையே கோயிலாக்கும் இந்த உன்னதமான நவராத்திரி பண்டிகையை நாமும் கொண்டாடி இந்நாளில் அம்பாளின் அருளைப் பூரணமாகப் பெறுவோம்!!”