தொடர்கள்
அழகு
எள் -மஹாளய அமாவாசை - மோகன் ஜி

202690917035477.jpeg

மகாவிஷ்ணு நரசிம்மாவதாரம் எடுத்து ஹிரண்யனை சம்ஹாரம் பண்ணினார் இல்லையா? அப்போது அவர் உடலில் பெருகிய வியர்வை தரையில் சிந்தி, அவையே எள்ளாக உருவானது என்று அம்மா ஒரு முறை சொன்னாள். பித்ருக்களுக்கு அதிபதி ஸ்ரீமன் நாராயணனே ஆதலால், அவருடைய வியர்வையே கருப்பு எள் தானியமாக முன்னோர்களுக்கு ப்ரீத்தியாக ஆனது.

பிறர் வீட்டில் தந்த எள்ளால் செய்யப்பட்ட பண்டங்களை சாப்பிடக் கூடாது என்றும் அம்மா திட்டமாகச் சொன்னாள். அப்படி சாப்பிட்டால், அவர்கள் வீட்டிலேயே போய் பிறக்கும்படி நேரிடும் என்றாள்.

‘’நான் செய்கின்ற தப்புகளுக்கெல்லாம் அடுத்த ஜென்மாவில் கழுதையாத் தான் பிறப்பேன்னு அன்னைக்கு சொன்னியேம்மா! அதுக்கு பிறத்தியார் வீட்டிலே மனுஷனா பொறக்கறது எவ்வளவோ மேல் இல்லையாம்மா?’’ என்றேன்.

‘’ போடா! வம்புக்காரத் தொம்பை! ‘’என்று அழகாக சிரித்ததும் என் கண்முன்னே நிழலாடுகிறது..

என் சித்தி உரலில் ஏதோ மாவைப் போட்டு அதனுடன் நிலக்கடலை, எள்ளு, வெல்லம், ஏலக்காய் சேர்த்து உலக்கையால் கும்மாங் குத்தாகக் குத்தி, அத்துடன் நெய்கலந்து நெல்லிக்காய் அளவில் உருண்டைகள் செய்வாள். அது பேரு சிமிலி உருண்டை சார்!’ என்றாள்.

எள்ளுக்கு வடமொழியில் திலம் என்று பெயர்.

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது வேண்டுமானால் நல்ல பழமொழியாக இருக்கலாம்.

‘இளைச்சவனுக்கு எள்ளு! கொழுத்தவனுக்கு கொள்ளு!’ என்று சொன்னது சும்மா இல்லைங்க. எள் உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியம் தருவது.

திருவள்ளுவரும் எள்ளைப் பயன்படுத்தி இருக்கிறார் பாருங்கள்.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு

சின்னஞ்சிறிய எள்ளில் உண்டான பிளவின் அளவே ஆயினும் உட்பகை பெரும் கேடு விளைவிக்க வல்லது என்று அர்த்தம்.

*********

இன்னொரு கோணத்தில் எள் ஏன் பயன்படுகிறது என்ற கேள்விக்கு பண்டிதர் ஒருவரின் பதில்....

எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிறது. அது போல ஜீவனுக்குள் ஆன்மா இருக்கிறது. அதனால் தான் எள்ளை குறிப்பாக பயன்படுத்துகிறோம். எள்ளிலிருந்து எண்ணெய் பிரிவது போல ஜீவனிலிருந்து ஆன்மா இறைவனிடம் சேர்கிறது என்பது தான் ஐதீகம் என்றார்.