
இந்திய அணுமின் நிலையங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலையத்தின் (Kaiga Generating Station) 3 மற்றும் 4 ஆகிய அலகுகளின் செயல்பாடுகளை வழிநடத்தும் தலைமை கண்காணிப்பாளராக (Chief Superintendent) உயர்ந்த முதல் தமிழ் பெண் மற்றும் விஞ்ஞானி ஆர்.எம்.நாச்சம்மை கடந்த சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்று திறம்பட இயக்கி வருகிறார். இந்திய அணுசக்தி கழக (NPCIL) வரலாற்றில், இயங்கி வரும் ஒரு மிகப்பெரிய அணு உலை வளாகத்தை தமிழகத்தை சேர்ந்த பெண் தலைமை தாங்கி இயக்குவது இதுவே முதல்முறை.
இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் மின்சார மற்றும் மின்னணுவியல் பொறியியல் (EEE) பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். பின்னர், கடந்த 1991-ம் ஆண்டு இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) பொறியாளர் பயிற்சியாளராக இணைந்தார். இதைத் தொடர்ந்து, இந்திய அணுசக்தி துறையில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட மற்றும் ஆழமான செயல்பாட்டு அனுபவமும் பெற்றிருக்கிறார். தனது நீண்டகாலப் பணியின்போது, மாமல்லபுரம் அருகே கல்பாக்கத்தில் உள்ள இந்திய அணுமின் நிலையம், கைகா அணுமின் நிலைய 1 மற்றும் 2வது அலகுகளில் நாச்சம்மை முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
அணுசக்தித் துறையில் நாச்சம்மையின் மிகச்சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, இவருக்கு கடந்த 2010, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் 'சிறப்பு பங்களிப்பு விருதுகளை' (NPCIL Special Contribution Award) வழங்கி NPCIL நிறுவனம் கவுரவப்படுத்தி உள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலையத்தின் அணு உலை செயல்பாடுகள் (Reactor operations), அணுசக்தி பாதுகாப்பு அமைப்புகள் (Nuclear safety systems), பராமரிப்பு (Maintenance) மற்றும் பொறியியல் ஆதரவு பிரிவுகளை (Engineering Support division) 24 மணி நேரமும் கண்காணிக்கும் மிக சவாலான தலைமை கண்காணிப்பாளர் பொறுப்பை நாச்சம்மை மேற்கொண்டு திறம்பட செயல்படுத்தி வருகிறார்.
இந்திய அணுசக்தி துறையில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த மிக உயரிய செயல்பாட்டு பதவிக்கு, தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நாச்சம்மை உயர்ந்திருப்பது, இந்திய அறிவியல்துறை மற்றும் பெண் ஆளுமை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும். இதுகுறித்து NPCIL தலைவர் பி.சி.பதக் கூறுகையில், தமிழக பெண் நாச்சம்மையின் நியமனம் 'நாரி சக்தியின் கொண்டாட்டம்' என்று வர்ணித்துள்ளார்.
மேலும், அவரது தொழில்நுட்ப சிறப்பானது, எதிர்காலப் பெண் பொறியாளர் தலைமுறைகளுக்கும் வழிவகுக்கிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை இந்தியா இலக்காக கொண்டுள்ள நிலையில், தற்போது 880 மெகாவாட் திறன் கொண்ட கைகா மையத்தில் நாச்சம்மையின் தலைமைத்துவம், பாலின சமத்துவம் மற்றும் தூய்மையான எரிசக்தி துறையில் தொழில்முறை சாதனைக்கான ஒரு சக்திவாய்ந்த சின்னமாகத் திகழ்கிறது என்று பி.சி.பதக் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Leave a comment
Upload