
உ
ககாரரார்த்தா காலஹந்த்ரீ காமேசீ காமிதார்த்ததா I
காம சஞ்ஜீவினீ கல்யா கடின ஸ்தன மண்டலா II
அம்பிகை பஞ்ச தசாக்க்ஷரீ மந்திரத்தின் எட்டாவது எழுத்தாகிய 'ககார' ரூபமாக இருப்பவள். ககாரரார்த்தா என்று அவளின் ரூபத்தைக் குறிக்கிறது த்ரிசதீ. அவளே காலஹந்த்ரீயாக இருக்கிறாள். காலத்தை நசிப்பவள். காலனைக் (எமனை) சம்ஹாரம் செய்தவள்.
அவள் காலம் கடந்தவள். காலத்திற்கு அப்பாற்பட்டு நிற்பவள். காலங்களை அவளே படைக்கிறாள். காமேசீ, காமிதார்த்ததா என்று புகழ்கிறது. காம எண்ணங்களைத் துறந்தவள். ஆசைகளை ஆள்பவள். பக்தர்கள் விரும்பும் பொருள்களையும்,பலன்களையும் அளிப்பவள்.
காம சஞ்ஜீவினீ என்பது அவளின் கருணையைக் குறிக்கிறது. ஈசனால் சம்ஹாரம் செய்யப்பட்ட காமனை (மன்மதனை) மீண்டும் பிழைக்கச் செய்தவள். தன்னிடம் வந்து மாங்கல்யப் பிச்சை கேட்டு அழுத ரதியின் கண்ணீருக்கு இரங்கி மன்மதனைப் பிழைக்க வைக்கிறாள்.
கல்யா என்றும் அழைக்கப் படுபவள் அம்பிகை. மங்கலமானவள். மன்மதன் அம்பிகையின் மிகச் சிறந்த பக்தன். அவனால் பூஜிக்கப் பட்டவள் அம்பிகை. ஸ்ரீவித்யா உபாசகர்களுக்குக் கலைகளில் திறமையையும் அளிக்கும் பிரம்மவாணியால் (சரஸ்வதி தேவி) சேவிக்கப்பட்டவளுமான பெருமைக்குரியவள். இவளைத் தியானித்துச் செய்யும் கலைகளில் சிறப்பினையும் புகழையும் தருபவள்.
லலிதா சஹஸ்ரநாமம் ஸசாம ரமா வாணி ஸவ்ய தக்ஷிண சேவிதா என்றே அம்பிகையைக் கூறுகிறது.
ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் ஒன்றில்
சுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜரா-ம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதி-சதமகாத்யா திவிஷத: |
கராளம் யத்க்ஷ்வேடம் கபலிதவத: காலகலநா
ந சம்போஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்க-மஹிமா ||
என்று ஸ்ரீசங்கரர் கூறுகிறார்.
அமிர்தம் குடித்த தேவர்களே ஜரா-மிருத்யுவால் (மூப்பு மற்றும் மரணத்தால்) அழியும்போது, கொடிய விஷத்தைக் குடித்த சிவபெருமான் மட்டும் அழியாமல் காலனை வென்று நிற்கிறார் என்றால், அதற்குக் காரணம் சிவனின் சக்தி அல்ல. அவருக்குள் பாதியாக இருக்கும் உன்னுடைய பத்தினி சக்தியும் மாங்கல்ய பலமுமே (தாடங்க மகிமை) ஆகும். எனவே, மறைமுகமாக எமனைச் சம்ஹாரம் செய்த உண்மையான பேராற்றல் அம்பிகையாகிய நீயே என்பது ஆதிசங்கரரின் அசைக்க முடியாத தத்துவ வாதமாகும்.
இதையே காஞ்சி மகாபெரியவா சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தபோது, தனது இடது காலால்தான் உதைத்தார். சிவனின் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின்படி, அவரது இடது பாகம் என்பது அன்னை அம்பிகைக்குரியது. எனவே, "காலனை சம்ஹாரம் செய்த அந்த இடது கால் அம்பிகையினுடையதே! உண்மையில் எமனை சம்ஹாரம் செய்தவள் நீயே தாயே!" என்பது இதன் ஆன்மீக விளக்கமாகும்.
அபிராமி பட்டரும் "இடப்பாகம் கலந்த பொன்னே! என்கிறார் அம்பிகையை.
மறலிக்கு (எமனுக்கு) உகந்த அந்த
கடப்பாரை திக்கில் விழக் காய்ந்த கோவக் கராள வன்னிக்
சுடர்ப்பாகன் நின்றியங்கும் திருச்சபைக் கேதுண்டோ சொல்வதற்கே!" என்பது மற்றொரு பாடல்.
சிவன் காலனை சம்ஹாரம் செய்தபோது அவனது ஆயுதங்கள் சிதறி விழும்படி உதைத்தார். அப்படிச் செய்ய அவருக்குள் இருந்து இயக்கிய பேராற்றலே, அவரது இடப்பாகத்தில் வீற்றிருக்கும் பொன் போன்ற அம்பிகையாகிய நீயே ஆவாய்.
காலனை சம்ஹாரம் செய்தவள் அம்பிகையே என்பதை மற்றொரு பாடலும் குறிக்கிறது.
"மூலக்கனலே வளர் மூவொளியே முக்கண் சுடரே — என்
காலக் கணக்கை முடிப்பவளே, காலனைச் சம்ஹாரம் செய்பவளே!"
உயிர்களின் ஆயுள் கணக்கை முடிக்கும் எமனுக்கே காலக் கணக்கை முடிப்பவள் நீயே! என் உயிரைப் பறிக்க வரும் காலனைச் சம்ஹாரம் செய்யும் பேரொளியும் நீயே என்று அம்பிகையை இதில் நேரிடையாகப் போற்றுகின்றனர்.
"வாமபாக ஸ்திதாயை நமோ நமஸ்தே..." — சிவனின் இடப்பாகத்தில் நின்று, எமனை உதைக்கத் தன் காலையே சிவனுக்குத் தந்தவளே உனக்கு நமஸ்காரம்!
லலிதா த்ரிசதீ அம்பிகையின் மந்திர ரூபமாகத் திகழும் ஸ்தோத்திரம் என்றாலும் இந்த மந்திரங்கள் அனைத்தும் அவளின் பிர்பாவத்தையும், கருணையையுமே அதிகம் போற்றுகிறது.
அவளின் அழகை வருணித்தாலும் இதற்குக் காரணம் அம்பிகையின் அன்பும்,உலக ஜீவராசிகளிடம் கொண்ட கருணையுமே என்றுதான் குறிக்கிறது. காமாட்சியின் கண் மிக அழகு என்பார் ஸ்ரீமூகர். அதற்குக் காரணம் அவளின் கருணை.
அந்தக் கருணை மழையில் நாமும் நனைய அனுதினமும் அவள் நாமத்தைப் பாராயணம் செய்தால் போதும்.
*****************************

Leave a comment
Upload