
தேனி மாவட்டத்தில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் எதிர்க்கட்சியின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளுங்கட்சி ஆளானது. தேனி மாவட்டச் சிறையில் 200 கைதிகள் மட்டுமே அடைக்கப்படும் வசதியுள்ள நிலையில், 334 சிறைக்கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று காவல்துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 2019 முதல் இந்த சிறை பயன்பாட்டில் இருக்கிறது.
அக்டோபர் 26- ஆம் தேதி இரவு மூன்றாவது பிளாக்கில் கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூச்சலிட அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அவர்கள் தங்கி இருந்த சிறையை திறந்து என்ன என்று கவனிப்பதற்குள் அங்கிருந்த 17 கைதிகளும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அந்த காவலர்களை கடுமையாக தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த சாவிக்கொத்தை பிடுங்கி சிறையின் கதவுகளைத் திறந்து 17 பேரும் தப்பி விட்டார்கள். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இந்த பரபரப்பான சம்பவம் தெரிந்த அடுத்த நிமிடம் முதல் 17 தனி படைகள் அமைக்கப்பட்டு குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். கடுமையான தேடுதல் வேட்டை டிரோன்கள் மூலம் அவர்கள் காட்டுப் பகுதியில் தங்கியிருப்பதை கண்டுபிடித்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்தார்கள். பிரவீன் குமார் என்ற கைதி அன்று இரவே பிடிக்கப்பட்டார். பின்னர் அக்டோபர் 27 அதிகாலை மூன்று பேர் சிக்கினார்கள். பிற்பகல் மேலும் ஒருவர் பிடிபட்டார். பிற்பகலில் பிடிக்கப்பட்ட லிங்க பிரசாத் என்ற கைதி ஒரு மாற்றுத்திறனாளி. ஆட்டோ டிரைவர் ஒருவர் தந்த தகவலின் அடிப்படையில் இவர் பிடிபட்டார். அதே ஆட்டோவில் அவர் சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
தேனி மாவட்ட சிறை என்பது சுற்றிலும் அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்டது. கைதிகள் தப்பித்த செய்தி கிடைத்ததும், சிறையிலிருந்து வெளியேறும் பாதைகளில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் சோதனைச் சாவடிகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள் .அண்டை மாநிலமான கேரளாவின் எல்லையையும் காவலதிகாரிகள் கண்காணித்து சோதனை கண்காணிப்பை பலப்படுத்தினார்கள். மதுரை விமான நிலையம், சுற்றியுள்ள ரயில் நிலையங்கள் ஆட்டோ நிலையங்கள் வாடகை கார் ஓட்டுநர்கள் என்று எல்லோருக்கும் தகவல் தந்து சோதனையை தீவிரப்படுத்தியது காவல்துறை.
தப்பியோடிய கைதிகளின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளையும் காவல்துறை ரகசியமாக கண்காணித்தது. விடிந்ததும் தப்பியோடிய கைதிகளைக் கண்காணிக்க மூன்று அதிநவீன டிரோன்கள் பறக்க விடப்பட்டன. இந்த டிரோன்கள் பரந்த பகுதிகளை கண்காணிக்கவும் கைதிகள் பதுங்கி இருந்த இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க முடிந்தது. அக்டோபர் 27 அன்று டிரோன் கேமரா மூலம் தெரியவந்த விஷயம் சிறையில் பின்புறம் உள்ள அம்மாச்சிபுரம் வனப் பகுதியில் எட்டு கைதிகள் பதுங்கி இருப்பது தெரிந்தது. அந்த எட்டு கைதிகளும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய 24 மணி நேரத்தில் 13 கைதிகள் பிடிபட்டனர். பிடிபட்ட கைதிகளிடம் தீவிர விசாரணைக்கு பிறகு எந்த வழியாக தப்பிச் சென்றார்கள் பதுங்கியிருந்த பகுதிகள் எவை விசாரித்ததில் மாலை மேலும் இருவர் கைது செய்யப்பட்டார்கள். பின்னால் காலை இரண்டு கைதிகள் கைது செய்யப்பட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் 17 கைதிகளும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பித்தது என்பது நீண்ட கால திட்டமா ? அவர்கள் தப்பித்து வேறு ஏதேனும் மிகப்பெரிய குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டார்களா வெளியில் இருந்த குற்றவாளிகள் அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டியளித்தார். இது ஊழியர்களின் அலட்சியம் கடமையில் கவனம் செலுத்தாதது போன்றவற்றிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக ஒன்பது சிறைத்துறை காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சிறைக் கைதிகள் தாக்கப்பட்டதில் மூன்று காவலர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இனிமேல் கைதிகள் காவலர்களை தாக்கி தப்பிக்க முயற்சி செய்தால் சுட்டுப் பிடிக்கவும் காவல்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
பிடிபட்ட கைதிகள் மீதுள்ள வழக்குகளுக்கான தண்டனையோடு சேர்ந்து தப்பியோடிய குற்றத்துக்காக அவர்கள் மேலும் சில பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டு தண்டனை வழங்கப்படும். சிசிடிவி கேமரா பல அடுக்கு பாதுகாப்பையும் மீறி கைதிகள் தப்பிப்பது என்பது பாதுகாப்பு குறைபாடு தான் என்று நன்கு தெரிகிறது. ஆனால், இதற்கு சிறைத்துறை போதிய விளக்கம் தரவில்லை. சிறையின் பாதுகாப்பு என்பது மூன்று கட்டமாக பிரிக்கப்பட்டு இருக்கும். மாவட்ட சிறைகளில் உயரமான சுற்றுச் சுவர், மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள், தனித்தனி கதவுகள், சிசிடிவி கேமரா இது தவிர சிறைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கைதிகளின் நடத்தைகளை ரகசியமாக காவல்துறை கண்காணிக்கும். ஆனால் இந்தப் 17 பேர் தப்பியத்தில் இதெல்லாம் நடந்ததா என்று தெரியவில்லை. அதேபோல் கண்காணிப்பு கோபுரத்தில் காவலர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. 200 கைதிகளை பராமரிக்க வசதியுள்ள சிறைச்சாலையில் 334 கைதிகளை அடைத்து வைத்ததால் பாதுகாப்பு மற்றும் போதிய காவலர்கள் இல்லாதது போன்ற குறைபாடுகளும் இந்த சம்பவத்துக்கு ஒரு முக்கிய காரணம்.
பெரும்பாலும் கைதிகளை ஒரே இடத்தில் தங்க வைத்தால் அவர்கள் ஒன்று கூடி ஏதாவது சதிவேலை ஈடுபடக்கூடும் என்பதால் கைதிகளை அடிக்கடி வெவ்வேறு சிறைக்கு மாற்றுவது வழக்கம். அந்த நடைமுறை இந்த 17 கைதிகளுக்கு செயல்படுத்தப்பட்டதா என்ற கேள்வி தற்சமயம் எழுகிறது. 17 பேரும் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தை இதுவரை காவல்துறை வெளியிடவில்லை. சிறை கைதிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதும் அவர்கள் தப்பிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் தற்சமயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 125 சிறைச் சாலைகள் இயங்கி வருகின்றன. மத்திய சிறைச்சாலைகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், மூன்று மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், அதிக ஆபத்துள்ள தீவிரவாதிகள், சிவில் கைதிகள் இப்படி வகைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். விசாரணைக் கைதிகளை தனிச்சிறையில் அடைக்கப்பட்டு கண்காணிப்பார்கள். பெரும்பாலும் விசாரணை கைதிகள் கிளை சிறையில் தான் அடைக்கப்படுவது வழக்கம். அங்கு இடப்பற்றாக்குறை பாதுகாப்பு இல்லாதது போன்ற காரணங்களால் சில சமயம் விசாரணை கைதிகள் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். போதிய சிறைச்சாலைகள் இருக்கின்றன என்று காவல்துறை சுட்டிக்காட்டினாலும் சமீப காலமாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவோரின் எண்ணிக்கையும் அதற்கு ஏற்றார் போல் அதிகரிக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் போதிய காவலர்கள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாதது அதனால் ஏற்படும் பணிச்சுமை போன்ற குறைபாடுகளையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

Leave a comment
Upload