
"எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" ஔவையார் சொல்லிச் சென்ற பாடல் வரி, உலகியல் கல்விக்கான அறிவுரையாக மட்டும் பார்க்கப்படாமல், ஆழமான ஆன்மீக தத்துவத்தையும் உள்ளடக்கியுள்ளது.
இந்து சமயம் மற்றும் ஆன்மீக மரபுகளில் 108 என்ற எண் மிகவும் புனிதமானதாகவும், பிரபஞ்சத்தின் முழுமையைக் குறிப்பதாகவும் கருதப்படுகின்றது. பூஜை, பிரார்த்தனையில் நாம் அனுதினமும் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம்.
இறைவனுக்கும், அவரால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் இடையேயான அன்பை, உறவை, நேசத்தைப் பிரதிபலிக்கும் எண்ணாக 108 திகழ்கிறது. பூஜைகளில் மந்திரங்கள் உச்சரிப்பதும், கோயிலில் சுற்றி வலம் வருவதும் மற்றும் விநாயகருக்குத் தோப்புக்கரணம் போடுவதும் எனப் பல விதமான வேண்டுதல்களை 108 என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றுவது பல மடங்கு பலனைத் தரும். இந்த 108 என்ற எண்ணிற்கு உள்ள வலிமையும் சக்தியும் நினைக்கும் போது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கின்றது.
108 என்ற எண்ணிற்கு ஆன்மீகத்தில் மட்டுமில்லாமல், கணிதம், அறிவியல் என்று எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் பெற்று இருப்பதைக் காணலாம்.
ஆன்மீக மற்றும் அறிவியலில் முக்கியத்துவம்
ஆன்மீக வழிபாட்டு முறைகள்:

அர்ச்சனைகள் 108 அஷ்டோத்திரங்களாக அமைந்திருக்கின்றன.
உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன.
ஜெப மாலையில் (ருத்ராட்ச அல்லது துளசி மாலை) 108 மணிகள் இடம்பெறுகின்றன.
வைணவத் திருத்தலங்களில் 108 திவ்ய தேசங்கள் உள்ளன.
சிவபெருமானுக்கு 108 சிவாகமங்கள் மற்றும் சிவ கணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 ஸ்தலங்கள் உள்ளன.

எண் கணிதம்:
1 என்பது ஏகத்துவமான கடவுள் அல்லது உயர் உண்மையைக் குறிக்கிறது.
0 என்பது சூன்யம், ஆன்மீகத்தில் முழுமை அல்லது அகத் தூய்மையைக் குறிக்கின்றது.
8 என்பது முடிவிலி (Infinity) அல்லது எட்டுத் திக்குகளையும் குறிக்கிறது.
இந்த எண்களைக் கூட்டினால் (1 + 0 + 8 = 9), இந்து மதத்தில் மங்களகரமான '9' என்ற எண் கிடைக்கும்.

வானியல் தொடர்பு:
பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு உள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம், சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல 108 மடங்கு அதிகமாகும்.

மனித உடலும் மருத்துவமும்:
இதய சக்கரத்தில் 108 நாடிகள் (ஆற்றல் கோடுகள்) கூடுகிறன.
ஆயுர்வேதம் மற்றும் வர்மக் கலையின்படி, மனித உடலில் 108 வர்மப் புள்ளிகள் (Marma points) உள்ளன.
108 எண்ணின் பிற சிறப்புகள்:
தமிழ் வருடங்கள் 60, கோள்கள் 9, நட்சத்திரங்கள் 27, மாதங்கள் 12 ஆகியவற்றை ஒன்றாகக் கூட்டினால் 108 வரும்:
( 60 + 9 + 27 + 12 = 108 )
12 ராசிகளை 9 கோள்களால் பெருக்கினாலும் (12 × 9 = 108) வரும்.
27 நட்சத்திரங்களுக்கு தலா 4 பாதங்கள் வீதம் மொத்தம் 27 × 4 = 108 நட்சத்திரப் பாதங்கள் வான மண்டலத்தில் உள்ளன (ஒரு ராசிக்கு 9 பாதங்கள் வீதம் 12 ராசிகளுக்கு 12 × 9 = 108 பாதங்கள்).

நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் 108 என்ற இந்த அபூர்வ எண்ணைப் புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நோக்கும் போது 108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்தும் பெருமைக்குரிய எண்ணாக 108 உள்ளது.


Leave a comment
Upload