வருடந்தோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் வட கிழக்கு பருவமழை துவங்கியவுடன் நீலகிரி மாவட்டம் பதட்டத்தில் இருப்பதை உணர முடியும்.
நவம்பர் மாதம் கடந்தவுடன் தான் சற்று நிம்மதியாக இருப்பார்கள் நீலகிரி வாசிகள்.

கடந்த 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கப்போகிறது என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை.
சனிக்கிழமை அதிகாலை குன்னூர் மலைப்பாதையில் பர்லியார் கீழே தேசிய நெடுஞ்சாலை ஒட்டியிருந்த மலையில் மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிலைமை என்ன என்ற கேள்விக்குறியுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்விய தண்ணீரு, காவல் துறை கண்கணிப்பாளர் பிரிந்தா பர்லியாருக்கு விரைந்து சென்றனர் அதற்குள் குன்னூர் தீயணைப்பு படையினர், காவல் துறையினர் ஸ்பாட்டுக்கு சென்று பார்த்தபோது மண்ணில் அரசு பஸ் புதைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அதற்குள் மீடியா படையெடுக்கஉலகம் முழுவதும் இந்நிகழ்வு உலுக்கியது.

அரசு பஸ் மண்ணில் புதைந்து கிடக்க அதில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தேடுதல் நடத்த வெறும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மட்டும் சிக்கி இருந்தனர்.
அதில் ஓட்டுநர் ஜனகராஜின் உயிரற்ற உடலை மீட்டனர்.

பின்னர் சிதைந்த பஸ்ஸினுள் நடத்துனர் கேசவன் உயிருடன் இருக்க அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாம் குன்னூர் அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஞானபிரகாஷை தொடர்பு கொண்டு கேட்டபோது,
" அந்த பஸ் (TN43 N0076) குன்னூர் டெப்போவை சேர்ந்தது.
23 ஆம் தேதி காலை கோவையில் இருந்து ஊட்டி வந்த போது டயர் பஞ்சர் ஆக குன்னூர் டெப்போவுக்கு வந்து சரி செய்து இரவு 9மணிக்கு கோவை நோக்கி சென்றது. மழையால் பயணிகள் குறைவு ஆறு பேர் தான் பயணித்துள்ளனர். பர்லியார் சென்ற பொழுது மரம் விழுந்துள்ளது உடனே அந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி விட்டனர். ஓட்டுநர் ஜனகராஜ் ஓரமாக நிறுத்தி விட்டு பின் சீட்டில் போய் அமர்ந்துள்ளார். நடத்துனர் கேசவன் முன் சீட்டில் அமர அப்பொழுது தான் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் மண் பஸ் மேல் சரிந்து உருக்குலைந்து விட்டது.

காலை தான் எங்களுக்கு விஷயம் தெரியும் பின் போய் பார்த்த பொழுது எங்க ஓட்டுநர் இறந்து விட்டார். நடத்துனர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஓட்டுனரின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது " என்று கூறினார்.
அதற்குள் பள்ளத்தில் ஒரு பிக்கப் வாகனம் நொறுங்கி கிடக்க அங்கும் மீட்பு குழுவினர் இறங்கி தேட அந்த ஓட்டுநர் தப்பித்து சென்றது தெரியவந்தது.

கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த மூன்று பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவிகள் இந்த நிலச்சரிவில் சிக்கி தப்பி பிழைத்துள்ளனர் என்ற ஆறுதலான தகவலும் உண்டு.
சனிக்கிழமை காலை 10. 30 மணிக்கெல்லாம் தமிழக அமைச்சர்கள் சம்பத் குமார் மற்றும் கமலி நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியாருக்கு வந்து சேர்ந்தனர் உடன் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வந்து நிவாரண பணியை ஆய்வு செய்தனர்.

இரண்டு மாவட்ட கலெக்டர்களும் பேருந்துகளில் சிக்கின கேரளா மாணவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
அமைச்சர் கமலி வெறும் காலில் சேற்றில் நடந்து வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.
அதே போல சில வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டு உயிர்தப்பித்தவர்களும் இருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை 23 ஆம் தேதி இரவு துவங்கின பயங்கர மழை சனிக்கிழமை காலை 7மணிவரை 250 மில்லி மீட்டர் கொட்டி தீர்த்து ஒரு உயிரை பலி வாங்கிவிட்டது
கேரளா மாணவ மாணவிகளை மினி பஸ்களில் மேட்டுப்பாளையம் சச்சினந்தா சுவாமி பள்ளிக்கு அழைத்து சென்று அந்த பள்ளி நிர்வாகம் உணவு கொடுத்து உபசரித்துள்ளனர்.
அனைத்து துறைகளும் இணைந்து போர்க்கால அடைப்படையில் இரண்டு நாளில் நிலச்சரிவு ஏற்பட்ட சாலை முற்றிலும் சீர் செய்யப்பட்டது.

போக்குவரத்துக்கு இந்த சாலை இன்னும் திறந்து விடவில்லை.
கேரளம் மாநிலம் கோட்டயம் முத்தொளி என்ற இடத்தில் உள்ள செயின்ட். ஆண்டனி மேல் நிலை பள்ளி, செயின்ட் தாமஸ் பள்ளி மற்றும் புக்கானன் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என்று 200 பேர் நான்கு பஸ்களில் இந்த வழியில் வந்து நிலச்சரிவில் சிக்கி இரவு முழுவதும் தவித்தது ஷாக்கான விஷயம்.
இந்த மாணவர்கள் தப்பி பிழைக்க அந்த கொடூர இரவில் துரிதமான முயற்ச்சிகளை எடுத்த பாதர். ஜோஷியை தொடர்பு கொண்டு பேசினோம்,
" எங்க மூன்று பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் இந்த பயங்கரமான நிலச்சரிவில் இருந்து இறைவன் காப்பாற்றி கோட்டயத்திற்கு கூட்டி வந்துள்ளார் என்று கூறினார்.
மேலும் அவர் அந்த திகில் இரவை பற்றி கூறினார்.
" நாங்கள் கோட்டயத்தில் இருந்து மைசூர் தசரா பார்க்க சென்று விட்டு பின்னர் ஊட்டி வந்து தங்கி விட்டு வெள்ளிக்கிழமை மாலை கோட்டயத்திற்கு கோவை வழியாக செல்ல புறப்பட்டோம்.
மேட்டுப்பாளையம் செயின்ட். ஜோசப் பள்ளிக்கு சென்று சற்று ஓய்வு எடுத்து விட்டு கோட்டயம் செல்வது பிளான்.

இரவு 9. 30மணிக்கு பர்லியார் என்ற இடத்தில் பாலம் கடக்க ஒரு சிறிய பாறை எங்க பஸ்சின் முன் உருண்டு விழுந்தது பலத்த மழை பெய்து கொண்டிருக்க நானும் மற்ற ஒரு மாஸ்டரும் இறங்கி அந்த சிறிய பாறையை எடுத்து ஓரத்தில் போட்டுவிட்டு முன்னே செல்ல ஒரு மரம் விழுந்திருந்தது மண் சரிவதை உணர்ந்தோம். உடனே எங்க ட்ரைவர் பஸ்சை ரிவேர்ஸ் எடுத்து அங்குள்ள போலீஸ் பூத் வரை கொண்டுவந்து நிறுத்தின உடன் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்று உணர்ந்தோம்.
அங்கிருந்த ஒரு போலீஸ் நபரிடம் விஷயத்தை கூறி அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த கூற எங்குமே மொபைல் கால் போகவில்லை.
கோவை செட்டி பாளையத்தில் உள்ள ஜீவன் ஜோதி பாதர் நெல்சன் மற்றும் லிஜோ என்பவரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற அவர்கள் கோவை ராமநாதபுரம் பிஷப் ஆலப்பாத்திடம் தகவல் சொன்னவுடன் பிஷப் உடனே கோவை அரசு அதிகாரிகளிடமும் தமிழக அமைச்சர் சம்பத் குமாரிடம் தெரிவிக்க விஷயம் அதிகாரிகளுக்கு சென்றுள்ளது.
எங்கள் மாணவர்களுக்கு பயங்கர ஆபத்தை பற்றி கூறவில்லை ஆசிரியர்கள்! போக்குவரத்து பிளாக் என்று தான் சொன்னோம்.
இரவு 12 மணிக்கு கூகுளில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தை காண்டாக்ட் செய்து தகவல் கூறினேன்.
அதிகாலை 3.45 மணிக்கு மேல் தான் மேலதிகாரிகளுக்கு விஷயம் தெரிய வந்துள்ளது.
காலை 6 மணிக்கு தான் தீயணைப்பு துறையினர், ஜே சி பி, கிரேன், மீட்பு படை வந்து சேர்ந்த பின் தான் அரசு பஸ் நிலச்சரிவு சேற்றில் சிக்கியுள்ளது தெரிய வந்தது.
நீலகிரி கலெக்டர், எஸ் பி எங்க குழந்தைகளுக்கு பன், டீ வழங்கினார்கள்.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருக்க மீட்பு பணி நடந்தது.
அப்பொழுது தான் அரசு பஸ் டிரைவர் இறந்து விட்டு அவரின் உடல் எடுத்து வந்தனர்.
அந்த பஸ்சின் கண்டக்டர் இரவு முழுவதும் இடிபாடில் சிக்கி உயிர் பிழைத்தது பெரிய விஷயம்.
பின்னர் அமைச்சர் சம்பத் குமார், கமலி நேரில் வந்து ஆய்வு செய்து மிட்பு படை எங்களை கயிறு கட்டி நிலச்சரிவு பகுதியை கடந்து மினி பஸ்சில் ஏற்றி மேட்டுப்பாளையம் சச்சினந்தா பள்ளிக்கு கூட்டி சென்று அனைவரும் ரெப்ரேஷ் செய்து பிரேக் பாஸ்ட், லஞ்ச் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் டி ஷர்ட் கொடுத்து மதியம் பஸ் ஏற்பாடு செய்து கோட்டயம் அனுப்பி வைத்தனர்.

அமைச்சர் சம்பத் குமார், அந்த ஸ்கூல் பிரின்சிபால் உமாபாரதி அனைவருக்கும் மிக்க நன்றி.
அந்த பயங்கரமான இடத்தை கயிறு மூலம் கடந்து வரும்போது தான் உயிர் தப்பி வந்தோம் என்று மாணவர்கள் உணர்ந்தார்கள் " என்று கூறினார் பாதர் ஜோஷி அந்த இரவு ஷாகில் இருந்து சற்று விடுபட்டு.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பல முறை நிலச்சரிவுகள் ஏற்பட்டு பயமுறுத்தி வருகிறது.
1978 ஆம் ஆண்டு தான் பயங்கர வெள்ளம் நிலச்சரிவு பர்லியார் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
1993 நவம்பர் 11 ஆம் தேதி இதே சாலையில் மரபாலம் பகுதியில் மிக பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டு மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு தர்கா, பஸ்கள், லாரிகள், கார்கள், வீடுகள் என்று பயங்கர பள்ளத்தில் அடித்து செல்ல பட்டு மாயமாக போய்விட்டன. பல உயிர்கள் பறிபோயின இது நாள் வரை அந்த நாளை நீலகிரி மறக்கவில்லை.

அதே போல 1999 அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மஞ்சூர், கெத்தை மின்சார வாரிய குடியிருப்பு பகுதியில் அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டு மிக பெரிய நில சரிவு ஏற்பட்டு பலர் இறந்து போனார்கள்.
இப்படி இயற்கை அழிவு என்பது நீலகிரியை பயமுறுத்தி கொண்டேயிருக்கிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு பயணத்தையும் கன மழை நேரங்களிலும் தவிர்க்க வேண்டியது கட்டாயம்.
குன்னூர் எம். எல். ஏ. ராஜு, ஊட்டி எம். எல். ஏ போஜராஜன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை சரியாக பராமரிப்பது இல்லை என்பது கண்கூடாக பார்க்கலாம்.
பர்லியாரில் தற்போது நடந்த நிலச்சரிவு பகுதி சாலையை புவியியல் ஆராய்ட்சியாளர்கள் விரிவு படுத்த ஒப்புதல் ஆணை வழங்கவில்லையாம்.
அதற்குள் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலச்சரிவை குறித்தோ, இறந்த ஓட்டுனருக்கு இரங்கல் மற்றும் நிவாரணம் கூட முதல்வர் விஜய் தெரிவிக்காதது நீலகிரியை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்ற குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளது.

Leave a comment
Upload