தொடர்கள்
வலையங்கம்
புற்றுநோய் மருந்து விலை குறைப்பு வரவேற்போம்

சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2700-க்கு வழங்கப்படும் புற்றுநோய் மருந்து, நோயாளிகளிடம் பத்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருந்துகளின் விலைக்கும் நோயாளிகளின் வசூலிக்கப்படும் தொகைக்கும் இடையே இந்த மிகப்பெரிய விலை வித்தியாசத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இதனையடுத்து புற்றுநோய் மருந்துகள் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அவற்றுக்கான வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், தேசிய மருந்துகளை விலை நிர்ணய ஆணையம் 543 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை திருத்தி அமைத்தது. ஒரு சில மருந்துகளின் விலை 93 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மார்பக புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ' பால் பேசிக்லிப் ' என்ற மருந்து விலை 40,421 இல் இருந்து 2,720 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி மருந்தான தியோ டெபா'வின் விலை 80,072-இல் இருந்து ரூபாய் 7.150 ஆக குறைந்துள்ளது. இப்படி பல்வேறு புற்றுநோய்களில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் விலை கணிசமாக குறைந்துள்ளதை வரவேற்கிறோம்.

இருந்தாலும் 21 க்கு மேற்பட்ட புற்றுநோய் நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் 'பெம்ரோலிஸுமாப் என்ற முக்கிய மூலப் பொருளை கொண்ட கீட்ரூடாவின் விலை ரூபாய் 2,16, 500 என்ற அளவிலேயே இருக்கிறது. மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்பட பயன் படுத்தப்படும் 'ரிபோசிக்லிப்' (கிரிக்ஸானா) விலை 24,435 என்பதில் மாற்றமில்லை. அரசு இந்த மருந்துகளின் விலையை குறைக்கவும் கருணை காட்ட வேண்டும். சமீப காலமாக இளம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை தெரிவித்து இருக்கிறது. எனவே எல்லா பெண்களும் 30 வயதிற்கு பிறகு மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இந்த சோதனையை அரசாங்கம் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து தர வேண்டும். ஏற்கவே ரோட்டரி சங்கங்கள் இந்தப் பணியை இலவசமாக தற்சமயம் செய்து வருகிறது. அவர்களை பின்பற்றி அரசாங்கமும் இதை செய்ய வேண்டும்.