தொடர்கள்
ஆன்மீகம்
திருமுருகன் இறைப் பணியில் பத்லாபூர் திருப்புகழ் குழு

20261021104818544.jpeg

முனைவர் B.வெங்கடரமணி 1985-களில் இருந்து திருப்புகழுடன் தொடர்பு கொண்டு வந்துள்ளார். திருப்புகழ் பாடல்களை கர்நாடக ராகங்களில் பாட கற்றல், விருப்பம் உடையவர்களுக்கு கற்பித்தல், தலைசிறந்த பக்தி இலக்கியமான திருப்புகழ் பாடல்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியைத் தோற்றுவிக்க இலவசமாகக் கோவில்களில் பாடுதல்.

செம்பூர் திரு. G. பாலசுப்பிரமணியம் அவர்களிடமிருந்து திருப்புகழ் பாடல்களை கர்னாடக ராகங்களில் பாட கற்றார். இவர், குருஜி தில்லி திரு. A.S.ராகவன் அவர்களின் நேரடி மாணவர். குருஜி அவர்கள் 500 -க்கும் மேற்பட்ட திருப்புகழ் பாடல்களுக்கு கர்னாடக ராகங்களில் இசை அமைத்துள்ளார். 2022 -ல் பத்லாபூர் திருப்புகழ் குழு துவங்கப்பட்டது.

தற்போது, திருமதி.கமலா வெங்கடரமணி (வயது 68 + வருடங்கள்) முனைவர் வெங்கடரமணி (வயது 79+ வருடங்கள்) திருப்புகழ் பாடல்களை கோவில்களில் பாடி வருகின்றனர்.

மும்பை, நவி மும்பை, மகாராஷ்டிராவின் நாஷிக், பால்கர் மாவட்டங்கள், சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்க நாடு (USA) ஆகிய இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கோவில்களில் இவர்கள் பாடி உள்ளனர். நவம்பர் 2026 வரை (கந்த சஷ்டி வரை) 99 திருப்புகழ் இசை நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தி உள்ளனர்.

2026 -ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழாவின் போது 7 கோவில்களில் இக்குழு திருப்புகழ் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.

ஒரு இசை நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரம் செல்லும். இதில் கிட்டத்தட்ட 40 திருப்புகழ் பாடல்களும், சுருக்கமாக கந்தர் அனுபூதியும் பல கர்னாடக ராகங்களில் பாடப்படும். எல்லா இசை நிகழ்ச்சிகளும் இலவசமாக நடத்தப்படுகின்றன. கோவில்களுக்கு சிறு நன்கொடையும் தரப்படுகிறது. போகவர செலவுகளையும் திருப்புகழ் குழு ஏற்றுக் கொள்கிறது. திருப்புகழ் குழு இசை நிகழ்ச்சிகளை, திருமுருகனுக்கு ஒரு அர்ப்பணிப்பாகவும், நன்றி கூறலாகவும் செய்கிறது.

பத்லாபூர் திருப்புகழ் குழு இதுவரை 4 திருப்புகழ் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. சிங்கப்பூர் (16 கோவில்கள்), தமிழ்நாட்டில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கோவில்களுக்குச் சென்று ஒவ்வொரு கோவிலிலும் 3 முதல் 4 திருப்புகழ் பாடல்களைப் பாடி உள்ளது. இதில், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு இக்குழு ஆன்மீகப் பயணத்தின் போது சென்றுள்ளது.

இக்குழுவினர் மார்கழி மாதத்தை ஒட்டி, 5-வது திருப்புகழ் ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். சென்னையில் உள்ள கோவில்களுக்கு சென்று திருப்புகழ் பாடல்களைப் பாட இருக்கிறார்கள். இக்குழுவினர் பாடிய 12 பாடல்களை திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம் (All India Radio (AIR), Tiruchirappalli) பதிவு செய்து, அக்டோபர் 2024 -லில் பண்பலையில் (FM channel) ஒலிபரப்பியது. இக்குழு, இரண்டு முறை, டோம்பிவிலி கிழக்கில் உள்ள திருமுருகன் கோவிலில் திருப்புகழ் படி விழாக்களையும் நடத்தி உள்ளது. குழுவின் நோக்கங்கள் நிறைவேற திருமுருகப் பெருமானின் அருளை குழுவினர் வேண்டுகின்றனர்.

உங்கள் மேலான உதவிக்கும், ஆதரவிற்கும், அளிக்கும் ஊக்கத்திற்கும் பத்லாபூர் திருப்புகழ் குழு தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இறைவன் அருள் உங்களுடன் என்றென்றும் இருப்பதாக.

அன்புடன், திருமதி.கமலா வெங்கடரமணி, முனைவர் B. வெங்கடரமணி, ஒருங்கிணைப்பாளர்கள். தொடர்புக்கு: 09994375428

ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் B.வெங்கடரமணி (9.7.1947)

இவர், பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Bhabha Atomic Research Centre, BARC, Mumbai) 39 வருடங்கள் விஞ்ஞானியாக பணி ஆற்றி ஒரு மூத்த விஞ்ஞானியாகவும், ஒரு பிரிவின் தலைவராகவும் (A Senior Scientist, equivalent to Joint Secretary, Department of Atomic Energy, and Head, Analytical Chemistry Division, BARC) 2007-ல் பணி ஓய்வு பெற்றார். 2016-ல் இருந்து பத்லாபூர் கிழக்கில் வசித்து வருகிறார். முனைவர் வெங்கடரமணி, பல துறைகளில் ஆர்வம் கொண்டவர்.

நீண்ட தூர நடைப் பயணம், நீண்ட தூர ஓட்டம், நீண்ட தூர சைக்கிள் பயணங்களை மேற்கொண்டுள்ளார். கைவேலை (craft), வரைபடம் (line drawing), ஆகியவற்றில் பல பரிசுகளை வென்றுள்ளார். தமிழிலும் ஹிந்தி மொழியிலும் விஞ்ஞானக் கட்டுரைகளை எழுதி உள்ளார். ஒரு ரஷ்யன் விஞ்ஞான மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். முதியோர் கல்வியில் (National Adult Literacy Mission) பங்கு கொண்டு 5 நபர்களை தற்போது தமிழ் தினசரிகளை படிக்கும் அளவுக்கு பயிற்சி தந்துள்ளார். தபால் தலை, நாணயங்களை சேகரிப்பதில் (stamp and coin collection), ஈடுபாடு உண்டு; கண்காட்சிகளையும் நடத்தி உள்ளார்.

ஹிந்தி ஓரங்க நாடகங்களின் (one-Act play in Hindi Drama Competition) போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் நாடகங்களை எழுதியும், டைரக்ட் செய்தும் தலை சிறந்த நாடகக் குழு என்ற சுழல் கேடையத்தை 4 முறை வென்று தக்க வைத்து உள்ளார். 1986-ல் இருந்து, இவர் ஒரு பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர் (Trained Yoga Teacher). பள்ளி சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கதைகள், மற்றும் சுவையான இயற்கை சம்பந்த்ப்பட்ட செய்திகளைச் சொல்லி ஒவ்வொரு ஆசனாவையும் கற்றுத் தருபவர். அதனால், சாதகர்கள் யோகாசனங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு பயனையும் அடைகிறார்கள்.

1991 -ல் இருந்து இவர் ஒரு ரெய்கி முறையில் குணப்படுத்துபவர் (Reiki Healer). 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரெய்கி முறையில், பல ஆச்சரியமூட்டும் பலன்களுடன் (with dramatic and miraculous results), குணப்படுத்தி உள்ளார். 2007- முதல் இவர் ஒரு ரெய்கி மாஸ்டர். 50-க்கும் மேற்பட்டோரை ரெய்கி முறைக்கு கொண்டு வந்துள்ளார். (initiated Sadhaks into First and Second Degree Reiki Healing) இயற்கையில் ஆர்வம் உள்ளவர். 3 இடங்களில் பறவைகளைப் பார்த்து (Field studies on birds) அது பற்றிய கட்டுரைகளை எழுதி அகில உலக விஞ்ஞான கூட்டங்களில் பேசி உள்ளார் (presented the results in National and International Conferences). பார்ன் ஒளல் நேச்சர் க்ளப் (Barn Owl Nature Club) என்ற குழுவைத் 1997-ல் தோற்றிவித்து சிறுவர்களிடையே இயற்கை சுற்றுச்சூழல் ஆகியவற்றில் விழிப்புணர்ச்சியையும் ஆர்வர்த்தையும் தோற்று வைத்துள்ளார். 13 இயற்கை சம்பந்தப்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளார். இயற்கை சம்பந்தப்பட்ட தலைப்புகளில் திருச்சி அகில இந்திய வானொலியில் 9 உரைகளை ஆற்றி உள்ளார். தலை சிறந்த நேச்சர் க்ளப் என்ற பரிசை பார்ன் ஒளல் நேச்சர் க்ளப் பெற்றுள்ளது.

இன்னும் பல.

இவருடைய பணிகள் யாவும், Think Globally Act Locally என்ற குறிக்கோளில் செய்யப்படுகின்றன.

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு.

இவர் விஞ்ஞானியாகப் பணி ஆற்றிய போது அங்கு செய்த செயல்பாடுகள் மேற்கூறிய குறிப்பில் இல்லை, என்பது குறிப்பிடத்தக்கது

திருமதி கமலா வெங்கடரமணி ( 1.3. 1958 )

இவர், மும்பை பல்கலைக்கழகத்திலிருந்து ஹிந்தியில் M A பட்டம் பெற்றவர். மராத்தி சாகித்ய என்ற தேர்விலும் வெற்றி பெற்றவர். பல ஆண்டுகள் பள்ளி மாணவ மாணவியற்கு ஹிந்தி மற்றும் மராத்தி பாடங்களை கற்பித்துள்ளார்.

கூடவே, அவர்களுக்கு பறவைகள், சுற்றுச் சூழல் ஆகியவற்றில் ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளார். இவருடைய மாணவர்கள் அதை இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். பறவைகளின் முன்னோடியான, முனைவர் சலீம் அலியுடன் நேரில் பேசி, பறவைகள் பற்றி கற்றுள்ளார். இயற்கையில் உள்ள செடி கொடிகள், பறவைகள், பூச்சிகளை கண்டறிபவர் (Field biologist). இந்த அறிவை தன் மகளுக்கும் கொடுத்து அவளை சிறந்த ஃபீல்ட் பையாலஜிஸ்டாக (Field biologist) ஆக்கி உள்ளார்.

பல இடங்களில் செடி கொடி, பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளுடன் பழகுவது அவரது தனித்திறமை. 30 வருட காலங்கள், நாங்கள் குடியிருந்த கட்டிடத்தில் (64 குடும்பங்கள்) சுதந்திர தினம், குடியரசு தினங்களை முன்னிருந்து நடத்தி உள்ளார். அது சமயம் பள்ளி சிறார்களுக்கு பல தேசீய பாடல்களைக் கற்றுத்தந்து அவர்களை ஊக்குவித்து வந்துள்ளார். குழந்தைகள் அடங்கிய ஒரு ஹிந்தி நாடகக் குழுவை நடத்தி, ஹிந்தி ஓரங்க நாடகப் போட்டிகளில், 4 முறை தலை சிறந்த நாடகக் குழு என்ற சுழல் கேடயத்தையும் தக்க வைத்துள்ளார்.

அவரது மகளை வண்ணம் தீட்டுதல், பரதநாட்டியம், கர்னாடக சங்கீதம் ஆகிய துறைகளில் ஈடுபட வைத்துள்ளார். இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரம், பண்பாடுகளிலும் மகளை ஈடுபட வைத்துள்ளார். மகள் தற்போது தன்னுடைய குழ்ந்தைகளையும் அதே போல ஈடுபடுத்தி வருகிறார். இவரும், பத்லாபூர் திருப்புகழ் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.