தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 31 - ஜி ஏ பிரபா

2026102106593646.jpeg

உ

ஹதாஸுரா

ஹார ஹாரி குசா போகா

ஹாகினி ஹல்யவர்ஜிதா I

ஹரித்பதி ஸமாராத்யா

ஹடாத்கார ஹதாஸுரா II

அம்பிகையின் மார்பை ஏராளமான ஆரங்கள் அலங்கரிக்கின்றன. சிவனின் மனதைக் கவரும் வண்ணம் அவள் ஆரங்களை அணிந்திருக்கிறாள் என்கிறது திரிசத. அவளே நம் பிறவித் தளைகளை நீக்குபவள். நம் கர்ம வினைகளை அவள் ஆபரணமாகத் தரித்து,நமக்கு அபயம் அளிக்கிறாள்.

அவள் கபடமற்ற மனத்தை உடையவள்; கள்ளம் கபடமில்லாமல் பக்தர்களின் அன்பை மட்டும் ஏற்றுக்கொண்டு, அதற்காகத் தன்னையே அளிப்பவள். தன்னை நம்பும் அடியவர்களை மட்டுமல்ல, வெறுப்பவரையும் ஈர்ப்பவள். அன்பும், கனிவும் மட்டுமே காட்டத் தெரிந்தவள் அம்பிகை. யாருக்கும் அவளால் கேடு நினைக்க முடியாது.

"வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்

பொறுக்கும் தகைமை புதியது அன்றே,- புது நஞ்சை உண்டு

கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே!-

மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே."

என்கிறது அபிராமி அந்தாதி. அபிராமி பட்டர் அம்பிகையிடம் பூரண சரணாகதி அடைந்து விடுகிறார். "நீ வெறுக்கும்படியான செயல்களை நான் செய்தாலும், என்னை மன்னித்து நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்; உன்னுடைய கடைக்கண் பார்வைக்காக நான் காத்திருக்கிறேன்" என்கிறார்.

அம்பிகை ஜெகன்மாதா. உலகுக்குத் தாய். தன் குழந்தையை வெறுக்கும் தாய் என்றுமே கிடையாது. தவறு செய்யும் குழந்தையையும் மன்னித்து, மற்ற குழந்தைகளை விட அவனிடம்தான் தன்னுடைய அன்பை அதிகமாகக் காட்டுவாள். லோகத்திற்கே மாதாவாக இருப்பவள், மோசமான குழந்தைகளை எப்படி வெறுப்பாள்? அவனின் தவறுகளைத் திருத்தி, அவனையும் தன்னிடம் ஈர்த்து, தன் மீதான பக்தியை வளர்த்து, தன்னுடைய அருள் மழையை அவன் மீது பொழிபவள் அம்பிகை.

தேவதைகளால் ஆராதிக்கப்பட்டவள் அவள்; அவர்களால் என்றென்றும் ஆராதிக்கப்படுபவளும் அவளே. "கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி ஸேவிதா" என்ற லலிதா சகஸ்ரநாம வரி இதைக் குறிக்கிறது. அதாவது, ஸ்ரீலலிதாம்பிகை தன் கடைக்கண் பார்வையால் இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகக் கோடிக்கணக்கான லட்சுமிகளைப் பணிப்பெண்களாகக் கொண்டவள்; அவர்களால் சேவிக்கப்படுபவள். லட்சுமியும், சரஸ்வதியும் அவளுக்குச் சாமரம் வீசுகிறார்கள் என்கிறது ஸ்ரீலலிதா.

ஸ்ரீ மகாலட்சுமியின் பார்வை ஒரு வினாடி ஒருவன் மேல் விழுந்தாலே போதும், அவன் மிகப்பெரும் கோடீஸ்வரன் ஆகிவிடுவான். அப்படி இருக்கும்போது, கோடிக்கணக்கான லட்சுமிகள் பணிவிடை செய்யும் அம்பாள் எவ்வளவு உயர்ந்தவள் என்பதை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது. எனவே, அம்பிகையின் ஒரு துளிப் பார்வைக் கடாட்சம் நம் மேல் விழுந்து விட்டாலே போதும், எல்லாச் சௌபாக்கியங்களையும் நாம் அடைந்து விடுவோம் என்பது இதில் சொல்லாமல் சொல்லப்படுகிறது.

அம்பிகையின் கடாட்சத்தின் மகிமையை 'மூக பஞ்சசதி'யில் கவிஞர் இவ்வாறு துதிக்கிறார்:

"மோஹாந்தகார நிவஹம் விநிஹந்து மீடே

மூகாத்மநாமபி மஹாகவிதா வதாந்யாந் |

ஶ்ரீகாஞ்சிதேஶ ஶிஶிரீக்ருதி ஜாகரூகாந்

ஏகாம்ரநாத தருணீ கருணாவலோகாந் ||"

"மனதில் உள்ள அறியாமை என்னும் இருளைப் போக்குபவளும், ஊமையாக இருந்த ஸ்ரீமூகரைத் தன்னுடைய கடைக்கண் பார்வையால் மகா கவியாகப் பேச வைத்தவளும், காஞ்சிபுரத்தைக் குளிரச் செய்பவளும், ஏகாம்பரநாதரின் இதயத்தில் இருப்பவளுமான அம்பிகையின் கருணை நிறைந்த கடைக்கண் பார்வைக்காக நான் பூஜிக்கிறேன்" என்பதே இதன் பொருள்.

அம்பிகை நம் இருதயத்தில் ஒளியாக இருப்பவள்; அந்த ஒளியையே நாம் தியானம் செய்கிறோம். "பரப்பிரம்மத்தின் இதயத்தை அறிந்தவன் ஒவ்வொரு அடியிலும் சுகத்தை அடைகிறான்" என்கிறது கல்ப சூத்திரம். இங்கு 'இருதயஸ்தா' என்கிறது லலிதா சகஸ்ரநாமம். 'இதயம்' என்பது பராபீஜத்தைக் குறிக்கிறது; அந்தப் பராபீஜத்தில் இருப்பவள் அம்பிகை. அம்பாள் பரமேஸ்வரனுடைய இருதயத்தில் அந்தர்யாமியாக இருப்பதால், அவளை 'இருதயஸ்தா' என்றும் கூறுவர்.

மணிமண்டபத்தில் இருப்பவள், மேருமலையில் இருப்பவள் என்றாலும், அவள் உண்மையில் குடியிருப்பது தன்னை ஆராதிக்கும் பக்தனின் இதயத்தில்தான். அத்தகைய கருணை வடிவானவளே, தன் பராக்கிரமத்தால் பண்டாசுரனைக் கொன்றவளும் ஆவாள்.

இந்தப் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக இருப்பவள் அம்பிகை. நம் இதயத்தில் சின்ன ஒளிப் புள்ளியாக அவளே இருக்கிறாள். அந்தப் புள்ளியே சிவம் எனப்படுகிறது. எங்கும் நிறைந்த சிவத்தின் சக்தியாக அவள் விளங்குவதால் அவளே சிவசக்தி ரூபிணீ .

​​​*************************